நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு 18-வது மக்களவையின் முதல் கூட்டம் கடந்த திங்களன்று (ஜூன் 25) நாடாளுமன்றத்தில் கூடியது. முதல்நாளே நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, “ஜூன் 25 மறக்க முடியாத நாள். இந்திய ஜனநாயகத்தின் இருண்ட அத்தியாயத்தின் 50-வது ஆண்டு நாளை தொடங்குகிறது. அரசியலமைப்பு கிழிக்கப்பட்டு, ஜனநாயகம் நசுக்கப்பட்டு, நாடே சிறைச்சாலையாக மாற்றப்பட்டதை புதிய தலைமுறை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது” என 1975-ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அமல்படுத்திய அவசரநிலை (எமர்ஜென்சி) பிரகடனத்தைக் குறிப்பிட்டார்.
அன்றே இதற்கு எதிர்வினையாற்றிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “வினாத்தாள் கசிவு, மேற்கு வங்க ரயில் விபத்து, மணிப்பூர் வன்முறை, தேர்தல் கருத்துக்கணிப்பு பங்குச்சந்தை மோசடி, சாதிவாரி கணக்கெடுப்பு என எதையும் பேசாத மோடி, 50 ஆண்டுக்கால எமர்ஜென்சியை எங்களுக்கு நினைவூட்டுகிறார். ஆனால், கடந்த 10 ஆண்டுக்கால அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை மறந்துவிட்டார்” என்று ட்வீட் செய்திருந்தார்.
அதையடுத்து, நேற்றைய தினம் சபாநாயகராக இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்ற ஓம் பிர்லா, “இந்திய குடிமக்கள் பலரின் வாழ்க்கையை எமர்ஜென்சி அழித்துவிட்டது. அந்த இருண்ட காலகட்டத்தில் காங்கிரஸின் சர்வாதிகாரத்தால் உயிரிழந்தவர்களுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி” என்று மக்களவையில் உறையற்றினார்.
இவ்வாறிருக்க, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று மக்களவைக் கூட்டத்தில் தனது உரையின்போது, “1975, ஜூன் 25-ல் எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டது. இது அரசியலமைப்பின் மீதான நேரடித் தாக்குதல் மற்றும் இருண்ட அத்தியாயம். இதன் சீற்றத்தை முழு நாடும் உணர்ந்தது” என்று கூறி தனது கண்டனத்தைப் பதிவுசெய்தார். அதேசமயம் திரௌபதி முர்முவின் உரையின்போது எதிர்க்கட்சி எம்.பி-க்கள், மணிப்பூர், நீட், அக்னிவீர் என கோஷங்கள் எழுப்பினர்.
இந்த நிலையில், இன்றைய பிரச்னைகள் குறித்து குடியரசுத் தலைவர் ஏன் பேசவில்லை என காங்கிரஸ் எம்.பி சசி தரூர் கேள்வியெழுப்பியிருக்கிறார். நாடாளுமன்றத்துக்கு வெளியே ஊடகத்திடம் பேசிய சசி தரூர், “குடியரசுத் தலைவர் தனது உரையில் 49 வருட எமெர்ஜென்சியைப் பற்றி பேசுவதில் எந்த லாஜிக்கும் இல்லை. இன்றைய பிரச்னைகள் குறித்து அவர் பேசியிருக்க வேண்டும். அவர் உரையில் நீட் தேர்வு, வேலையில்லா திண்டாட்டம் என எதுவும் எங்கள் காதில் விழவில்லை. திரௌபதி முர்மு மற்றும் மோடியிடமிருந்து மணிப்பூர் என்ற வார்த்தையே வரவில்லை. இந்தியா-சீனா எல்லை பிரச்னை அவர் உரையில் இடம்பெற்றிருக்க வேண்டும்” என்றார்.