பா.ஜ.க 2019-ல் தொடர்ந்து இரண்டாவது முறையாகத் தனிப்பெரும்பான்மையாக ஆட்சிப்பொறுப்பேற்றபோது மக்களவை சபாநாயகராக நியமிக்கப்பட்ட ஓம் பிர்லாவே, தற்போது தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் மக்களவை சபாநாயகராக இன்று தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அதுவும், அதிகாரபூர்வ எதிர்க்கட்சி அந்தஸ்து அங்கீகராம் பெற்ற கட்சி அங்கம் வகிக்கும் அவையில் முதன்முறையாக சபாநாயகராகியிருக்கிறார் ஓம் பிர்லா.
இந்த நிலையில், சபாநாயகராக ஓம் பிர்லா பொறுப்பேற்ற முதல்நாளே, வி.சி.க எம்.பி திருமாவளவனின் மைக் அணைக்கப்பட்டது, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உட்பட முக்கிய எதிர்க்கட்சி எம்.பி-க்கள் தங்களின் வாழ்த்துகளோடு கடந்த ஆட்சியில் மக்களவையில் நடந்த நிகழ்வுகள் மூலம் கவுன்டர் அட்டாக் தொடுத்தது என பல சம்பவங்கள் அரங்கேறியிருக்கின்றன.
முதலில், சபாநாயகராக தான் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்து பேசிய ஓம் பிர்லா, “சபாநாயகராக மீண்டும் பணியாற்ற எனக்கு வாய்ப்பளித்த பிரதமர் மோடி, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ மற்றும் அவை உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி. மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கான கூட்டு முயற்சிகளை மேற்கொள்வது நம் அனைவரின் பொறுப்பு” என்றார். அதோடு, 1975-ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் கொண்டுவரப்பட்ட எமர்ஜென்சியை இந்த அவை வன்மையாகக் கண்டிப்பதாகவும் ஓம் பிர்லா தெரிவித்தார்.
பின்னர், எதிர்க்கட்சித் தலைவராக ஓம் பிர்லாவுக்கு வாழ்த்து தெரிவித்து உரையாற்றிய ராகுல் காந்தி, “இந்திய மக்களின் குரலைப் பிரதிநிதித்துவப்படுத்தவும், எங்களைப் பேசவும் நீங்கள் அனுமதிப்பீர்கள் என்று நம்புகிறேன். அவை எவ்வளவு சிறப்பாக நடத்தப்படுகிறது என்பது இங்கு கேள்வியல்ல, அவையில் எந்தளவுக்கு இந்தியாவின் குரல் ஒலிக்க அனுமதிக்கப்படுகிறது என்பதுதான் கேள்வி.
எதிர்க்கட்சிகளின் குரலை அடக்கி அவையைச் சிறப்பாக நடத்தலாம் என்ற எண்ணம் ஜனநாயகத்துக்குப் புறம்பானது. இந்த நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை எதிர்க்கட்சிகள் பாதுகாக்க வேண்டும் என்று இந்திய மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதை இந்தத் தேர்தல் காட்டுகிறது” என்று உரையாற்றினார்.
அவரைத் தொடர்ந்து பேசிய மக்களவையின் மூன்றாவது பெரிய கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், “எனது சக எம்.பி-க்கள் சார்பாக உங்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். மக்களவை சபாநாயகராக ஒவ்வொரு உறுப்பினருக்கும், கட்சிக்கும் சமமான வாய்ப்புகளையும் மரியாதையையும் நீங்கள் வழங்குவீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். ஒருபக்கமாக சாயாமலிருப்பதே இந்தப் பதவியின் பொறுப்பு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்தவொரு உறுப்பினரின் குரலும் நசுக்கப்படாது, அவர்கள்மீது வெளியேற்ற நடவடிக்கை மீண்டும் நடக்காது என்று நம்புகிறோம்.
உங்களின் கட்டுப்பாடு எதிர்க்கட்சிகளின்மீது இருந்தாலும், அது ஆளுங்கட்சியின்மீதும் இருக்க வேண்டும். இந்த அவை மற்றவர்கள் கூற்றின்படி அல்லாமல், உங்களின் பார்வையில் நடக்க வேண்டும். உங்களின் அனைத்து நியாயமான முடிவுகளுடன் நாங்கள் நிற்போம். ஆளுங்கட்சியை எவ்வளவு மதிக்கிறீர்களோ அதே அளவு எதிர்க்கட்சிகளையும் மதித்து அவர்கள் தங்கள் தரப்பை முன்வைக்க அனுமதிப்பீர்கள் என்று நம்புகிறேன்” என்றார்.
அதேபோல், தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) எம்.பி சுப்ரியா சுலே, “கடந்த ஐந்து ஆண்டுகளில் சிறப்பான பணிகளை நீங்கள் செய்திருக்கிறீர்கள். இருப்பினும், எங்களின் சக எம்.பி-க்கள் 150 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டபோது நாங்கள் மிகவும் வருத்தமடைந்தோம். எனவே, அடுத்த 5 ஆண்டுகளில் இடைநீக்கம் பற்றி யோசிக்காமல் இருக்க முயற்சி செய்ய வேண்டும். மேலும், உரையாடல்களுக்கு நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம்” என்று உரையாற்றினார்.
அதையடுத்து, நேற்று மக்களவையில் பதவியேற்பின்போது பாலஸ்தீனத்துக்காக குரல்கொடுத்து கவனம் பெற்ற AIMIM தலைவரும், எம்.பி-யுமான அசாதுதீன் ஒவைசி, “உங்களுக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். நீங்களே இந்த அவையின் பாதுகாவலர். எனவே, சிறிய கட்சிகளுக்கும் வாய்ப்புகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இந்த அரசு, துணை சபாநாயகரை நியமித்து உங்களின் சுமையைக் குறைக்கும் என்றும் நான் நம்புகிறேன். அதனால், உங்களுக்கு பாரம் குறையும். இந்த அவையின் குணம் மாறிவிட்டது. இனி பா.ஜ.க-வால், கடந்த காலத்தில் நிகழ்ந்தவை போல தங்களின் அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஒருவரைக் கட்டாயப்படுத்தி எதையும் செய்ய முடியாது” என்று கூறினார்.
இவர்களைப்போல, வாழ்த்துகளுடன் உரையைத் தொடங்கிய தமிழ்நாட்டு எம்.பி-யும், வி.சி.க தலைவருமான திருமாவளவன், “மீண்டும் இரண்டாவது முறையாக அவையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தங்களுக்கு வி.சி.க மற்றும் இந்தியா கூட்டணியின் சார்பில் வாழ்த்துகள். தங்கள் இருக்கையில் வலது பக்கத்தில் செங்கோல் உள்ளது. செங்கோல் என்பது அதிகாரத்தின் அடையாளம் அல்ல. யார் பக்கமும் சாயக் கூடாது, நேர்மையாக இருக்க வேண்டும் என்பதற்கான நீதி தவறாமையின் அடையாளம். தங்கள் இருக்கையின் அடையாளமும் அதுவே. கடந்த காலங்களில் நீங்கள் சிறப்பான சபாநாயகர் என்பதை நிரூபித்திருக்கிறீர்கள்.
ஆனால், ஆளுங்கட்சிக்கு ஒரு சார்பாகவும், எதிர்க்கட்சிக்கு ஒரு வகையாகவும் அணுகியிருக்கிறீர் என்பது அனைவரும் அறிந்த உண்மையே. அதனால், ஆளுங்கட்சி சார்புநிலை இருக்கக் கூடாது என்பதே எதிர்க்கட்சிகளின் கோரிக்கை. கடந்த முறை பல மசோதாக்களைப் பண மசோதா என ஆளுங்கட்சி அறிமுகப்படுத்தியது. ஆனால், எது பண மசோதா என்று தீர்மானிக்கின்ற அதிகாரம் உங்களுக்கு மட்டுமே இருக்கிறது. அந்த அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்திய ஆளுங்கட்சி, மீண்டும் அத்தகைய முயற்சியில் ஈடுபடலாம். அதற்கு ஒருபோதும் நீங்கள் பலிகடா ஆகக் கூடாது, வளையக் கூடாது என்று வேண்டுகோள் வைக்கிறேன்” என்றார்.
மேலும் தொடர்ந்து பேசிய திருமாவளவன், “நாடாளுமன்ற வளாகத்துக்குள் இருந்த புரட்சியாளர் அம்பேத்கர், மகாத்மா காந்தி, மகாத்மா ஜோதிபா பூலே ஆகிய தலைவர்களின் சிலைகளை ஓரமாகக் கொண்டுபோய் மறைவிடத்தில் வைத்திருக்கின்றனர். மக்களவைத் தலைவர் என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி தாங்கள் அந்த சிலைகளை மீண்டும் அதே இடத்தில் வைக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்துக்கொண்டிருந்தபோதே ஓம் பிர்லா மைக்கை அணைத்தார்.
மேலும் அடுத்த எம்.பி-யை பேச அழைத்தார். அதையடுத்து எதிர்க்கட்சி எம்.பி-கள் சத்தம் எழுப்பி, தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb