T20 WC 2024 : “எங்களுக்கு இதுவே பெருசுதான், ஆனாலும்…” – அமெரிக்க அணியின் கேப்டன் நம்பிக்கை

2024 ஆம் ஆண்டிற்கான உலகக்கோப்பைத் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நேற்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் அமெரிக்கா- இங்கிலாந்து அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற அமெரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது.

இங்கிலாந்து அணி

அதுமட்டுமின்றி நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிய முதல் அணி என்ற பெருமையையும் பெற்றுள்ளது. இங்கிலாந்திடம் தோல்வியைத் தழுவிய அமெரிக்க அணி அரையிறுதிக்கு தகுதிபெறும் வாய்ப்பை இழந்து டி 20 உலக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறி இருக்கிறது.

இந்நிலையில் அணியின் தோல்வி குறித்து கேப்டன் ஆரோன் ஜோன்ஸ் பேசியிருக்கிறார். ” இது எங்கள் முதல் உலகக் கோப்பை. நாங்கள் சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்று தென்னாப்பிரிக்கா, மே.இ.தீவுகள், இங்கிலாந்து போன்ற அணிகளுக்கு எதிராக விளையாடுவோம் எனப் பலரும் நம்பவில்லை. இந்தத் தொடரில் கற்ற பாடங்களின் மூலமாக அமெரிக்க அணி மேலும் வலுப்பெறும் என நம்புகிறேன்.

அமெரிக்க அணி

ஃபிரான்சைஸ் கிரிக்கெட் மிகவும் நல்லது மற்றும் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். எனவே அமெரிக்க வீரர்கள் அதுமாதிரியான கிரிக்கெட் போட்டிகளில் முடிந்தவரை கலந்துக்கொண்டு நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.