அயோத்தி: `ராமர் கோயிலில் பூசாரி அமரும் இடத்திலேயே மழை நீர் கசிகிறது!’ – தலைமை பூசாரி குற்றச்சாட்டு

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயிலின் பிராண பிரதிஷ்டை நடைபெற்றது. சுமார் ரூ.1800 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் இந்த கோயிலில் மழையின் போது குழந்தை ராமர் இருக்கும் கருவறைப் பகுதியின் அருகே மழைநீர் கசிவதாக அயோத்தி ராமர் கோயிலின் தலைமை பூசாரி ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் குற்றம்சாட்டியிருக்கிறார்.

ஆச்சார்யா சத்யேந்திர தாஸ்

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம்,“சனிக்கிழமை நள்ளிரவில் பெய்த மழையில் கோயிலின் கருவறையின் மேற்கூரையிலிருந்து அதிக கசிவு ஏற்பட்டது. ராம் லல்லா சிலைக்கு முன் பூசாரி அமர்ந்திருக்கும் இடத்துக்கும், விஐபி தரிசனத்துக்கு மக்கள் வரும் இடத்துக்கும் நேரடியாக மேற்கூரையிலிருந்து மழைநீர் கசிந்து கொண்டிருந்தது. நாடு முழுவதும் உள்ள பொறியாளர்கள் இணைந்து கட்டும் இந்த ராமர் கோயிலில் மழைநீர் கசிவது மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது.

ஜனவரி 22-ம் தேதி பிரமாண்டமாக கோயில் திறப்பு விழா நடந்தது. ஆனால், மழை பெய்தால் கூரை கசியும் என்பது யாருக்கும் தெரியாது. இது ஏன் நடந்தது? இவ்வளவு பொறியாளர்கள் இருந்தும் இதுபோன்ற சம்பவம் நடப்பது தவறானது. எனவே, இதுபோல் இனி நடக்காமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை கோயில் நிர்வாகம் எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.

இந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த கோயில் கட்டுமானக் குழுத் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா, “மழைநீர் கசிவது தொடர்பான தகவல் கிடைத்ததும், நானே நேரில் வந்து பார்த்தேன். முதல் தளத்தின் பணிகள் நடைபெற்று வருகிறது, இந்த ஆண்டு ஜூலைக்குள் அந்தப் பணிகள் முடிக்கப்படும். டிசம்பர் மாதத்திற்குள் கோயில் கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடையும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

ராமர் கோயில் கட்டுமானம், அந்தப் பகுதியில் குடிமை வசதிகள் ஏற்படுத்துவதில் ஆளும் பா.ஜ.க அரசு ஊழல் செய்வதாக உத்தரப்பிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தியாகிகளின் சவப்பெட்டியாக இருந்தாலும் சரி, கடவுள் கோயிலாக இருந்தாலும் சரி, இவை அனைத்தும் பா.ஜ.க.வுக்கு ஊழலுக்கான வாய்ப்பாகிவிட்டன.

Ayodhya | அயோத்தி | மோடி

நாட்டில் உள்ள நம்பிக்கை மற்றும் தூய்மையின் சின்னங்கள் கூட அவர்களுக்கு கொள்ளையடிக்கும் வாய்ப்புகள் தான். கோயில் கட்டியதிலிருந்து வந்த முதல் மழையிலேயே கோடிக்கணக்கில் செலவு செய்யப்பட்டு கட்டப்பட்ட ராமர் கோயிலின் கருவறையில் தண்ணீர் கசிவதும், முறையான வடிகால் அமைப்பு இல்லை என்பதும் தலைமை அர்ச்சகர் சத்யேந்திர தாஸ் கூறியதன் மூலம் தெரிய வந்துள்ளது. இதுமட்டுமின்றி ரூ.624 கோடி செலவில் கட்டப்பட்ட கோயிலுக்கும் செல்லும் பாதையான `ராம்பாத்’தில் பல இடங்களில் சாலை இடிந்து சேதமாகியிருக்கிறது.

அயோத்தியின் வளர்ச்சியை பறை சாற்றும் பா.ஜ.க-வின் முகமூடி அவிழ்ந்துள்ளது. தேர்தல் ஆதாயங்களுக்காக மட்டுமே அவசர அவசரமாக இரண்டாம் தர கட்டுமானப் பணிகளை செய்து அயோத்தியை ஊழலின் மையமாக பா.ஜ.க மாற்றியுள்ளது. ராமர் கோயில் இடத்தில் வாழ்ந்த மக்களுக்கும் உரிய இழப்பீடு தராமல் அநீதி இழைத்திருக்கிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88