மருத்துவ இளநிலை படிப்புகளுக்கு நடத்தப்பட்ட நீட் தேர்வு தொடங்கி, அதன் முடிவுகள் வெளியிடப்பட்டதில் குளறுபடி, நடத்தி முடிக்கப்பட்ட NET தேர்வு ரத்து செய்யப்பட்டது, மருத்துவ முதுநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வு தேர்வுக்கு முந்தைய நாள் ஒத்திவைக்கப்பட்டது என அடுத்தடுத்து மத்திய அரசு நடத்தும் கல்வி நுழைவுத் தேர்வுகள் தொடர்பாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணமே இருக்கிறது. முக்கியமாக, நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக பீகாரில் கைதுசெய்யப்பட்ட நால்வர், தேர்வுக்கு முந்தைய நாள் இரவு தங்களுக்கு வினாத்தாள் கிடைத்ததாக வாக்குமூலம் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இத்தகைய சூழலில், யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC), ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷன் (SSC), ரயில்வே, வங்கி ஆள்சேர்ப்புத் தேர்வுகள் மற்றும் நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி (NTA) ஆகியவற்றால் நடத்தப்படும் பொதுத் தேர்வுகளில் நியாயமற்ற நடைமுறைகளைத் தடுக்கவும், அதில் ஈடுபடுவோர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கவும் இந்த ஆண்டு தொடக்கத்தில் மத்திய அரசு நிறைவேற்றிய `பொதுத் தேர்வு (நியாயமற்ற வழிமுறைகள் தடுப்பு) சட்டம் 2024′ தற்போது அமலுக்கு வந்திருக்கிறது. இதற்கான அறிவிப்பு நேற்று முன்தினம் இரவு வெளியானது.
இந்த சட்டத்தின்படி…
*வினாத்தாள் கசிவு அல்லது விடைத்தாள்களை மாற்றியமைத்தல் போன்றவற்றில் சிக்கிய நபர்களுக்கு குறைந்தபட்சம் குறைந்தபட்சமாக 3 ஆண்டுகள் முதல் அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும். மேலும், குற்றவாளிகளுக்கு 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.
* சாத்தியமான குற்றத்தைப் பற்றி அறிந்திருந்தும், அதைப் புகாரளிக்கத் தவறிய தேர்வு சேவை வழங்குநர்களுக்கு ஒரு கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். தேர்வுக்கு ஆகும் செலவும் அவர்களிடமிருந்து வசூலிக்கப்படும். அத்தகைய சேவை வழங்குநர்கள் நான்கு ஆண்டுகளுக்கு எந்த தேர்வும் நடத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
* தேர்வு சேவை வழங்குநர்களுக்குள் இருக்கும் மூத்த அதிகாரிகளுக்குத் தெரிந்தே குற்றம் நடந்திருக்கிறது என்று கண்டறியப்பட்டால், அவர்களுக்கு குறைந்தபட்சம் 3 ஆண்டுகளும், அதிகபட்சம் 10 ஆண்டுகளும் சிறைத் தண்டனையும், ஒரு கோடி ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும்.
* இத்தகைய குற்றங்கள் ஜாமீனில் வெளிவரமுடியாதவையாக வகைப்படுத்தப்பட்டிருக்கிறது. அதன்படி, குற்றம்செய்த தனி நபர்களை அதிகாரிகள் பிடிவாரண்ட் இல்லாமல் தனிநபர்களைக் கைது செய்யலாம்.