கள்ளக்குறிச்சி, கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதை வாங்கி பலர் அருந்தியிருக்கிறார்கள். சில மணி நேரங்களிலேயே அவர்களுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. வயிற்றுப்போக்கு, கை, கால் மரத்து போதல், காய்ச்சல் போன்றவற்றால் துடித்திருக்கிறார்கள். பின்னர் உறவினர்களை அவர்களை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கும், ஜிம்பர் மருத்துவமனைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இதுவரை 55-பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். மேலும் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. இதெற்கெல்லாம் மெத்தனால்தான் முக்கிய காரணமாக இருக்கிறது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய சமூக சமத்துவ டாக்டர் சங்கத்தை சேர்ந்த மருத்துவர் ரவீந்திரநாத், “அனைத்து வகையான மதுபானங்களிலும் எத்தனால் எனும் வேதிப்பொருளை சேர்த்துதான் தயாரிக்கிறார்கள். இந்த வேதிப்பொருள் குறைந்தபட்சம் 5% முதல் 40% வரை சேர்க்கப்படும். இதன் விலை அதிகம். இது உடனடியாக மணித் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடாது. ஆனால் தொடர்ச்சியாக மது அருந்தும்போது பாதிப்பு ஏற்படும்.
ஆனால் கள்ளக்குறிச்சி விவகாரத்தில் மெத்தனால் கலக்கப்பட்டு தயாரிக்கப்பட்டு இருக்கிறது. இதன் விலை மிகவும் குறைவாக இருப்பதால் கள்ளச்சாராயம் காய்ச்சுவோர் மெத்தனால்தான் பயன்படுத்துவார்கள். இது ஒருவகையான அமிலமாகும். எனவேதான் மெத்தனால் உற்பத்தி, வர்த்தகம், சேமிப்பு, விற்பனைக்கு உரிமங்கள் பெற வேண்டும்.
ஆனால் மக்கள் குறைந்த விலையில் மது கிடைக்கிறது என ஏழை, எளிய மக்கள் வாங்கி குடிக்கிறார்கள். கள்ளச்சாராய மரணத்தில் பெரும்பாலும் ஏழைகள்தான் இருக்கிறார்கள். அதற்கு டாஸ்மாக்குகளில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களின் விலை அதிகமாக இருப்பதுதான் காரணம். ஆனால் கள்ளச்சாராயம் காய்ச்சும் சமூக விரோதிகள் விலை குறைவாக இருக்கும் மெத்தனாலை சேர்க்கிறார்கள். ஏழை மக்களும் விலை குறைவாக இருக்கிறது என வாங்கி குடிக்கிறார்கள். அதாவது மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை உட்கொள்ளும் நபருக்கு, அவர் எடுத்துக்கொண்ட அளவைப் பொறுத்து, ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விளைவுகள் ஏற்படுத்தும். சில மணிநேரங்களிலேயே மரணத்தை ஏற்படுத்திவிடும்.
குறிப்பாக கல்லீரல் செயலிழந்துபோகும். சிறுநீர் வெளியேற்றம் தடைபடும். மேலும் நுரையீரல், நரம்பு மண்டலமும் பாதிக்கப்படும். வயிற்றில் உள்ள டிஹைட்ரோஜெனேஸ் எனும் எம்சைம், மெத்தனால் உடன் சேரும்போது அது விஷமாக மாறுகிறது. ஆனால் ’Fomepizole எனும் மருந்தை ஊசியாக நரம்பில் செலுத்தி எம்சைமின் வெளியேற்றத்தை தடுக்க முடியும். ஆனால் விரைவாக மருத்துவமனைக்கு வந்தால் மட்டும்தான் இது சாத்தியமாகும். இதுபோன்ற விஷயங்கள் வரும் காலங்களில் நடக்காமல் இருக்க கண்காணிப்பை தீவிர படுத்த வேண்டும்.
மக்கள் எந்த பிரச்னைக்காக மது குடிக்கிறார்கள் என்பதை அறிந்து அதை நிவர்த்தி செய்ய வேண்டும். மாவட்டம் தோறும் மதுவுக்கு அடிமையானவர்களை மீட்பதற்கான மையங்களை உருவாக்க வேண்டும். இலவச சிகிச்சைகள், மனநல ஆலோசனைகள் வழங்க வேண்டும். மது குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அரசு தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். திரைப்படங்களில் சர்வ சாதாரணமாக பயன்படுத்துகிறார்கள். எம்ஜிஆர் ஒரு படத்தில்தான் மது குடிப்பது போல நடித்திருக்கிறார். ஆனால் இன்று சர்வ சாதாரணமாக நடிகர், நடிகைகள் மது குடிக்கிறார்கள். குடிப்பது நல்ல பண்பாடு என்பது போல காட்டுகிறார்கள். சமூக பொறுப்போடு திரைத்துறையினர் இதை செய்வதை தவிர்க்க வேண்டும்.
இதேபோல் 20 வயதுக்கு கீழ் இருப்பவர்களுக்கு மது வழங்க கூடாது. புத்தகங்களில் மதுவுக்கு எதிரான விழிப்புணர்வை கொடுக்க வேண்டும். பள்ளிகளும் அதை செய்ய வேண்டும். மதுக்கடைகளில் குறைந்த அளவுக்கு ஆல்ஹகால் கொண்ட மது வகைகளை விற்பனை செய்ய வேண்டும். மதுவின் விலையை அதிகரித்தால் மது பழக்கம் குறையும் என்றால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுவார்கள். பிறகு அவர்கள் ஏற்கெனவே சொன்னதுபோல கள்ளச்சாராய கடைகளை தேடித்தான் செல்வார்கள். எனவே இதுகுறித்தும் அரசு யோசிக்க வேண்டும். மதுவுக்கு அடிமையானவர்களுக்கு லைசன்ஸ் கொடுக்க வேண்டும். விலை உயர , உயர ஏழைகளுக்கான மது விலக்காக மாறுகிறது. எனவே அரசு குழு அமைத்து விரிவாக ஆலோசனை மேற்கொள்ள வேண்டும்.
அதில் அரசியல் சார்பற்றவர்கள் இருக்க வேண்டும். அறிவியல் ரீதியாக மேற்கொள்ள வேண்டும். உடனடியாக மது கடைகளில் மூட வேண்டும் என சொல்கிறார்கள். அப்படி செய்தால் இன்னும் நிலைமை மோசமாகிவிடும். விலை அதிகமாக இருக்கும்போதே கள்ளச்சாராயத்தை வாங்கி குடிக்கிறார்கள். கொரோனா காலத்தில் ஸ்பீர்ட், வார்னிஷ் குடித்து இறந்தார்கள். எனவே அந்த தவறை செய்துவிடக்கூடாது. முதலில் குடிப்பழக்கம் கொண்டவர்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88