என்விடியா (Nvidia) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ‘ஜென்சன் ஹுவாங்’, உலக பணக்கார பட்டியல்களில் 11-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அவருடைய சொத்து மதிப்பில் பங்கு விலை ஏற்றத்தின் காரணமாக கடந்த செவ்வாய்கிழமை மட்டும் ரூ.34,652 கோடி சேர்ந்திருக்கிறது.
அமெரிக்க நிறுவனமான என்விடியா செயற்கை நுண்ணறிவு (AI) மென்பொருளுக்குத் தேவையான கம்ப்யூட்டர் சிப்’-களை உற்பத்தி செய்து வருகிறது, அதன் தயாரிப்புகளுக்கான தேவை கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருவதால் அதன் விற்பனை மற்றும் லாபம் உயர்ந்து வருகிறது.
மேலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மீதான எதிர்பார்ப்பு சர்வதேச அளவில் அதிகரித்து வருகிறது. அந்த தொழில்நுட்பத்தை சாத்தியமாக்கும் ’சிப்’புகளில் 70 சதவிகிதத்திற்கும் அதிகமான தயாரிப்புகளை உற்பத்தி செய்வது என்விடியா நிறுவனம் தான். எனவே என்விடியாவின் மதிப்பு வேகமாக உயர்ந்து வருகிறது.
ஃபோர்ப்ஸின் கூற்றுப்படி, ஹீவாங்கின் சொத்து மதிப்பு 119 பில்லியன் டாலராக (ஒரு பில்லியன் டாலர் என்பது ரூ.8,663 கோடி) உயர்ந்துள்ளது. ஹுவாங்கின் இந்த வளர்ச்சி இந்தியாவின் பெரும்செல்வந்தரான முகேஷ் அம்பானியை விஞ்சி நிற்கிறது.
ஹுவாங்கின் சொத்து மதிப்பில் ஏற்பட்ட வளர்ச்சி, என்விடியா நிறுவனத்தின் சந்தை மூலதனம் 177% அதிகரித்து, 3.33 ட்ரில்லியன் டாலாராக உயர்வதற்கு காரணமாக அமைந்துள்ளது.
சமீபத்திய பத்திரத் தாக்கல் நிகழ்வொன்றில் என்விடியா நிறுவனம், ‘மார்ச் 2025-க்குள் 6,00,000 நிறுவனப் பங்குகளை விற்கும்’ ஹுவாங்கின் திட்டத்தை வெளிப்படுத்தியது. இந்த நடவடிக்கையானது தற்போதுள்ள பங்கு விலையின் படி, ஹுவாங்குக்கு 81.4 மில்லியன் டாலருக்கும் அதிகமாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்டான்போர்ட் வணிக பள்ளியில் நடந்த நேர்காணல் ஒன்றில் ஜென்சன் ஹுவாங் தனது வாழ்க்கையைப் பற்றியும் வணிக மேலாண்மைப் பற்றியும் பகிர்ந்துக் கொண்டவர் கூடவே, தான் பாத்திரங்கள் மற்றும் கழிப்பறைகள் கழுவிய அனுபவங்களையும் பகிர்ந்துக் கொண்டார். அப்போது பேசியவர், “இங்கிருக்கும் உங்கள் அனைவரையும் விடவும் அதிகமான கழிவறைகளை நான் சுத்தம் செய்துள்ளேன்” என்றார். அவர் தனது இளமைக் காலங்களில் தான் செய்த வேலைகளின் மீது அவருக்குள்ள மதிப்பினை வலியுறுத்தினார்.
தலைமத்துவம் குறித்துப் பேசியவர் காரணங்களைக் கண்டறிவதன் வழி, சிக்கல்களைத் தீர்ப்பது குறித்து உரையாற்றினார். நிவிடியா நிறுவனத்தில் தனது பணியைப் பற்றிக் கூறுகையில் முன்னறிவித்தல், சிக்கல்களை தீர்த்தல், திறன்மிக்க சிந்தனை ஆகியவற்றைக் குறித்து பேசினார். கூடுதலாக, மற்றவர்களுடைய வேலைகளைத் திறனாய்வு செய்து அவற்றை மெருகேற்ற உதவுவதில் தனக்குள்ள விருப்பங்களைப் பற்றியும் பகிர்ந்துக் கொண்டார்.