தேர்தல் பிரசாரம் முதல் வெற்றி விழா வரை – திமுக போடும் `கொங்கு’ கணக்கு..!

நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் ஸ்வீப் அடித்து திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. திமுக அனைத்துத் தொகுதிகளிலும் வென்றிருந்தாலும் கூட, இந்தத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் கூடுதல் கவனம் செலுத்தியது. 2021 சட்டசபை தேர்தலில் கொங்கு மண்டலத்தில் அடைந்த தோல்வியால், 2026  சட்டபை தேர்தல் களத்தை அங்கு திமுகவுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கும் பணிகளில் இறங்கினார்கள்.

அண்ணா அறிவாலயம்

அதன் ஒரு பகுதியாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரிசையில் இந்த நாடாளுமன்ற தேர்தலுக்கும் சிறப்பு வியூகங்கள் வகுத்தனர். தேர்தல் ரிசல்ட்களும் பாசிட்டிவாக அமைய தேர்தல் வெற்றி விழாவை கோவை கொடிசியா மைதானத்தில் பிரமாண்டமாக நடத்த முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து திமுகவினரிடம் பேசியபோது, “கொங்கு பகுதிகளில் திமுக எதிர்ப்பு அதிகமாக உள்ளது. 2021 சட்டசபை தேர்தலில் கோவை, திருப்பூர், ஈரோடு சேலம், தர்மபுரி என கொங்கு மண்டலத்தின் பெரும்பாலான தொகுதிகளை அதிமுக கைப்பற்றியது. எம்,ஜி.ஆர், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகும் கொங்கு மண்டலத்தில் வெற்றி கிடைக்காதது தலைமையை தீவிரமாக யோசிக்க வைத்தது. கடந்த கால தேர்தல்களில் எங்களின் வியூகங்களில் ஏராளமான தவறுகள் நடந்தன.  2021 கோவை தெற்கு தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கினர். மக்கள் நீதி மய்யத்தின் கமல்ஹாசன், பாஜகவின் வானதி சீனிவாசனுக்கு எதிராக காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் பிரசாரத்தை கூட தீவிரமாக செய்யவில்லை.

கோவை

அங்கு திமுக நேரடியாக களமிறங்கி வலுவான வேட்பாளரை இறக்கியிருந்தால் முடிவுகள் மாறியிருக்கலாம். இப்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் தவறுகளை அடுக்கிக் கொண்டே போகலாம். அப்போதிருந்தே தீர்வை  நோக்கி நகரத் தொடங்கிவிட்டோம். செந்தில் பாலாஜியை கோவை பொறுப்பு அமைச்சராக்கினார்கள். அது உள்ளாட்சித் தேர்தலில் பிரமாண்ட வெற்றியை கொடுத்தது.

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவையில் போட்டியிடுகிறார் என்று தகவல் வெளியானதும், கம்யூனிஸ்ட்களுக்கு  திண்டுக்கலை வழங்கி, கோவையில் திமுக நேரடியாக களமிறங்கியது. பொதுவாக கோவை உள்ளிட்ட பெரும்பாலான கொங்கு தொகுதிகளை திமுக கூட்டணிக்கு கொடுக்கும். இந்தமுறை அப்படி நடக்கவில்லை. தென் மாவட்டங்களில் 3 தொகுதிகளில் மட்டுமே திமுக போட்டியிட்டது.

அண்ணாமலை

கொங்கு மண்டலத்தில் திருப்பூர், நாமக்கல், கரூர் உள்ளிட்ட 3 தொகுதிகளை மட்டுமே கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிவிட்டு, பெரும்பாலான  தொகுதிகளில் திமுக நேரடியாக களமிறங்கியது. இதன் பின்னணியில் 2026 சட்டமன்ற தேர்தல் திட்டமுள்ளது. ஒவ்வொரு தொகுதிக்கும் சராசரியாக 2 அமைச்சர்களை பொறுப்பாளர்களாக நியமித்தனர். இளைஞரணியைச் சேர்ந்தவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டன.

ஸ்டாலின் – ராகுல் கலந்து கொண்ட பிரமாண்ட பொதுக்கூட்டம் கோவையில்தான் நடத்தப்பட்டது. ஆளுங்கட்சி, கூட்டணி ஆகியவற்றுடன் இந்த வியூகங்களும் திமுக வெற்றிக்கு காரணம். முக்கியமாக கோவையின் வெற்றி தலைவரை உற்சாகப்படுத்தியுள்ளது. அதனால் வெற்றி விழாவை அங்கு நடத்த வேண்டும் என முடிவு செய்துள்ளனர். செட்டிப்பாளையம் பகுதியில் ஸ்டாலின் – ராகுல் கலந்துகொண்ட அதே பகுதியில் 40 எம்.பிக்களை ஒரே  மேடையில் ஏற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை

இந்நிலையில் மழை எச்சரிக்கை உள்ளிட்ட காரணங்களுக்காக விழாவை கொடிசியா மைதானத்தில் மாற்றி நடத்தத் திட்டமிட்டுள்ளனர். சராசரியாக ஒரு சட்டசபை தொகுதிக்கு 5,000 பேர் வீதம் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் இருந்து ஒரு லட்சம் பேரை திரட்ட டார்கெட் வைத்துள்ளனர். 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான வெற்றி விழாவாக மட்டுமல்லாமல், 2026 சட்டமன்ற தேர்தலுக்கான அஸ்திவாரமாக அந்த விழாவை நடத்துவதுதான் திமுக-வினரின் திட்டம்.” என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88