NEET: `முறைகேடுகளும், குளறுபடிகளும்… நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்க!’ – சீமான்

நீட் (NEET) தேர்வு முடிவுகள் ஜூன் 4-ம் தேதி வெளியானது. நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளும் அன்றே வெளியானதால் பெரிதாக நீட் தேர்வு முடிவுகள் வெளிச்சத்துக்கு வரவில்லை. ஆனால், அடுத்தநாள் முதல் நீட் தேர்வு முடிவுகளில் பல்வேறு குளறுபடிகள் நடந்திருப்பதாக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்தன. காரணம், இந்த முறை வெளியான நீட் தேர்வு முடிவுகளில் 720-க்கு 720 பெற்று முதலிடம் பிடித்த 67 மாணவர்களில் 8 பேர் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதியவர்கள்.

NEET

அதேபோல், சிலர் 719, 718 என்ற மதிப்பெண்களையும் வாங்கியிருக்கின்றனர். நீட் தேர்வில் ஒரு கேள்விக்கு 4 மதிப்பெண், ஒரு கேள்விக்கு தவறாக விடை எழுதினால் ஒரு மதிப்பெண் குறைக்கப்படும். அப்படியானால், ஒரு தவறான விடைக்கு 4 மதிப்பெண் மற்றும் அதற்கான நெகட்டிவ் மார்க் 1 மதிப்பெண் என மொத்தம் 5 மதிப்பெண் குறையும். ஒருவேளை கேள்விக்கு விடைதெரியாமல் விட்டுவிட்டால் 4 மதிப்பெண் குறையும். அப்படியென்றால், இரண்டாம் மதிப்பெண் 716-ஆகவும், மூன்றாவது 715-ஆகவும்தான் இருக்க வேண்டும். ஆனால், இங்கு 719, 718 மதிப்பெண்களெல்லாம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதற்கு தேசியத் தேர்வு முகமை, `தேர்வு நடைமுறைகளில் ஏற்பட்ட குழப்பத்தால் சில மாணவர்கள் தேர்வு நேரத்தை இழந்தார்கள். அவர்களுக்கு 2018-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் கொடுத்த ஒரு தீர்ப்பின் அடிப்படையில் கருணை மதிப்பெண் கொடுத்தோம்’ என விளக்கமளித்தது. ஆனால். எவ்வளவு நேர இழப்புக்கு எவ்வளவு கருணை மதிப்பெண் என்றெல்லாம் விளக்கம் எதுவும் தரவில்லை.

NEET

அதேபோல், இந்தமுறை குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்ணும் 164 மதிப்பெண்ணாக குறைக்கப்பட்டிருப்பதும் சந்தேகத்தைக் கிளப்பியிருக்கிறது. இவ்வாறு பல்வேறு கேள்விகளும், சந்தேகங்களும் பல்வேறு தரப்பிலிருந்தும் முன்வைக்கப்படுகிறது. இந்த நிலையில், `முறைகேடுகளும், குளறுபடிகளும் நிறைந்த நீட் தேர்வு முறையினையே நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும்’ என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அந்த அறிக்கையில் , “இந்தியா முழுமைக்கும் நடப்பாண்டிற்கான நீட் தேர்வில் மிகப்பெரிய குளறுபடிகள் நடைபெற்ற நிலையில், நீட் தேர்வெழுதிய மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்களிலும் பெரும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. நீட் தேர்வினால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இந்தியா முழுவதும் மாணவ மாணவியர் பலர் தங்கள் இன்னுயிரை இழந்த பின்னும் நீட் தேர்வினை ரத்து செய்ய இந்திய ஒன்றிய அரசு மறுத்துவருவது கொடுங்கோன்மையாகும்.

சீமான்

சோதனை என்ற பெயரில் நீட் தேர்வெழுதும் மாணவ, மாணவியரின் உள்ளாடைகளைக் கழட்டித் தேர்வெழுத முடியாத அளவிற்கு கடும் பதற்றத்திற்கு ஆளாக்கியது முதல், தேர்வு மையங்களில் ஆள் மாறாட்டம் உள்ளிட்ட முறைகேடுகளில் மாணவர்கள் ஈடுபடுவது அம்பலமானதுவரை, நீட் தேர்வு தகுதியுடைய மருத்துவ மாணவர்களை உருவாக்குமென்பது பச்சைப்பொய் என்பது பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. அதன் உச்சமாக, நடப்பாண்டு நடைபெற்ற நீட் தேர்வு வினாத்தாளில் பல்வேறு குளறுபடிகள் இருந்ததுடன், அதற்காக வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்களிலும் மிகப்பெரிய மோசடி நடைபெற்றுள்ளதும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

நீட் தேர்வு முடிவுகளை அறிவிக்கப்பட்ட தேதிக்கு முன்னதாக அவசர அவசரமாக வெளியிட்டதும், தேர்வில் முதலிடங்களைப் பிடித்த மாணவர்களின் வரிசை எண்கள் அடுத்தடுத்து உள்ளதும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது குறித்த ஐயத்தை அதிகரிக்கவே செய்கிறது. தொடர்ச்சியாக நடைபெறும் இம்முறைகேடுகள் அனைத்தும் நீட் தேர்வு முறையே தேவையற்ற ஒன்று என்பதையே மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது. கடந்த ஆட்சிக் காலங்களில் மக்களாட்சி முறையினையே முற்று முழுதாக அழித்தொழிக்க முயன்ற அரசியல் பிழைகளாலும், மக்களை வாட்டி வதைத்த அதிகார கொடுமைகளாலும், தற்போது அறுதிப்பெரும்பான்மையைப் பெற முடியாமல் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ள மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு, இனியேனும் தமது தவறுகளைத் திருத்திக்கொள்ள முயல வேண்டும்.

மோடி, ஸ்டாலின்

அதன் தொடக்கமாக ஏழை மாணவச் செல்வங்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் முறைகேடுகள் நிறைந்த கொடும் நீட் தேர்வு முறையையே நிரந்தரமாக ரத்து செய்ய முன்வர வேண்டுமென வலியுறுத்துகிறேன். கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்வோம் என்று வாக்குறுதியளித்த தி.மு.க, நடந்து முடிந்த தேர்தலில் 40 நாடாளுமன்ற உறுப்பினர்களை வென்றுள்ளதன் மூலம் நாடாளுமன்றத்தில் தமக்குள்ள பலத்தைப் பயன்படுத்தி, நீட் தேர்வை ரத்து செய்ய இனியாவது ஆக்கப்பூர்வ முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்” என்று சீமான் வலியுறுத்தியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88