தனித்து ஆடிய சுப்பராயன்; கண்டுகொள்ளாத அதிமுக புள்ளிகள் – திருப்பூரை சி.பி.ஐ வென்றது எப்படி?

திருப்பூர் மக்களவைத் தொகுதியில் தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மூத்த தலைவர் கே.சுப்பராயன், அ.தி.மு.க-வில் ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். அணிச் செயலாளர் அருணாசலம், பா.ஜ.க-வில் மாநிலப் பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி ஆகியோர் களமிறங்கினர்.

நான்கு பேரும் தொகுதிக்குள் பெரும்பான்மையாக இருக்கும் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இந்தத் தொகுதிக்குள் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம், பெருந்துறை ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.

திருப்பூர்

திருப்பூர் தொகுதியில் கடந்த மக்களவைத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கே.சுப்பராயன் இரண்டாவது முறையாக மீண்டும் களமிறக்கப்பட்டார். தொழிலாளர்கள் மத்தியிலும், தொழிற்சங்கத்திலும் நீண்ட அனுபவம் கொண்டவர் என்பதால் தொகுதி முழுக்க அறிமுகம் என்ற அடையாளம் சுப்பராயனுக்கு உண்டு. ஆறு சட்டப் பேரவைத் தொகுதிகளில் நான்கு சட்டப் பேரவைத் தொகுதிகள் அ.தி.மு.க. வசம் இருப்பதால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும், அ.தி.மு.க.-வுக்கும் கடும் போட்டி இருக்கும் என தொடக்கத்தில் எதிர்பார்க்கப்பட்டது.

சுப்பராயன்

ஆனால், கடைசி நேரத்தில் அதிமுக-வின் சீனியர்கள் போட்டியில் இருந்து நழுவி விட, திருப்பூர் தொகுதியில் பெரிதும் அறிமுகமில்லாத அருணாசலம் களமிறக்கப்பட்டார். திருப்பூர் மக்களவைத் தொகுதியில் அ.தி.மு.க.-வின் முன்னாள் அமைச்சர்களான செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் இருந்தாலும் அவர்கள் யாரும் ஆர்வமாக தேர்தல் பணியில் ஈடுபடவில்லை. தான் நிறுத்திய ஆள் என்பதால் முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் மட்டும் தேர்தல் பணியில் தீவிரம் காட்டினார். மொத்தமாக இரட்டை இலை சின்னத்தை மட்டுமே நம்பி களத்தில் இறங்கினார் அருணாசலம்.

வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் இருந்தே சுப்பராயனின் கை ஓங்கி இருந்தது. தபால் வாக்குகளைப் பொறுத்த வரையில் சுப்பராயனுக்கு 2,544 வாக்குகளும், அருணாசலத்துக்கு 1,485 வாக்குகளும், ஏ.பி.முருகானந்தத்துக்கு 1,256 வாக்குகளும், நாம் தமிழர் சீதாலட்சுமிக்கு 476 வாக்குகளும் பதிவாகி இருந்தன. அ.தி.மு.க.-வின் கோட்டை என வர்ணிக்கப்படும் செங்கோட்டையனின் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் மட்டும் அருணாசலத்தை விட சுப்பராயனுக்கு 23,563 வாக்குகள் கூடுதலாக கிடைத்துள்ளது. அதேபோல், அ.தி.மு.க. வசமுள்ள திருப்பூர் வடக்குத் தொகுதியில் 32,756 வாக்குகள் அருணாசலத்தை விட சுப்பராயன் கூடுதலாக பெற்றுள்ளார்.

கொண்டாட்டம்

பா.ஜ.க-வில் கோவையைச் சேர்ந்த ஏ.பி.முருகானந்தம், நாம் தமிழர் கட்சி சார்பில் ஈரோட்டைச் சேர்ந்த சீதாலட்சுமி என தொகுதிக்கு பரிச்சயமில்லாதவர்கள் களமிறக்கப்பட்டது சுப்பராயனுக்கு கூடுதல் பலமாகிப் போனது. திருப்பூரின் பக்கத்து தொகுதியான கோவையில் போட்டியிட்ட பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு பிரசாரம் செய்ய, திருப்பூரைச் சேர்ந்த பெரும்பாலான அக்கட்சி நிர்வாகிகள் சென்றுவிட்டதால்,ஏ.பி.முருகானந்தத்தால் பெரிய அளவில் பிரசாரம் செய்ய முடியவில்லை.

பா.ஜ.க.-வுக்கென கட்டமைப்பு இல்லாததால் திருப்பூர் வடக்கு, தெற்கு தொகுதியைத் தாண்டி முருகானந்தத்தால் பெரிய அளவில் பிரசாரம் செய்யவும் முடியவில்லை. நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமியும் சொல்லிக் கொள்ளும்படி பிரசாரத்தில் ஈடுபடவில்லை. தன்னை எதிர்த்து வலுவான போட்டியாளர்கள் இல்லாததால் தனித்து விளையாடினார் சுப்பராயன். அதுமட்டுமில்லாமல் தோழர்களைத் தாண்டி தி.மு.க.வினரின் தேர்தல் களப்பணி சுப்பராயனுக்கு பலத்தை சேர்த்தது.

கொண்டாட்டம்

கூடுதலாக கடைசி நேரத்தில் தி.மு.க.வினரால் தொகுதிவாரியாக வாக்காளர்கள் முறையாக கவனிக்கப்பட்டனர். பெரும்பான்மையான கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த மூத்த தலைவர், கறைபடியாத கைகளுக்குச் சொந்தமானவர், தி.மு.க.வினரின் வலுவான கவனிப்பு, களப்பணி மற்றும அ.தி.மு.க.வினர் பெரிதாக தேர்தல் பணி செய்யாதது ஆகியவை காரணமாக வெற்றிக் கோப்பையை எளிதில் தட்டிச் சென்றிருக்கிறார் சுப்பராயன்.

திருப்பூர் தொகுதியில் ஒட்டுமொத்தமாக 11,35,267 வாக்குகள் பதிவான நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயன் 4,72,739 வாக்குகளும், அ.தி.மு.க.வேட்பாளர் அருணாசலம் 3,46,811 வாக்குகளும், பா.ஜ.க.வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் 1,85,322 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 95,726 வாக்குகளும் பெற்றனர். சுப்பராயன் 1,25,928 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88