கேரள மாநிலத்திலிருந்து தமிழகத்துக்குள் நுழைந்த அரிசிக்கொம்பன் யானை, தேனி மாவட்டத்தில் மயக்க ஊசி போட்டுப் பிடிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து லாரியில் ஏற்றி நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் வனச்சரகத்துக்குட்பட்ட மணிமுத்தாறு பகுதிக்குக் கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து கோதையாறு பகுதியிலுள்ள அடர்ந்த வனப்பகுதியில் விடுவதற்கு வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இதனிடையே, அரிசிக்கொம்பன் யானையை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட பகுதியில் விடுவதற்கு வனத்துறை முயற்சி எடுப்பதற்கு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர். எஸ்.டி.பி.ஐ அமைப்பினரும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் கோதையாறு வனப்பகுதிக்கு அரிசிக்கொம்பன் யானை கொண்டு செல்லப்பட்டது.
கோதையாறு வனப்பகுதியில் மருத்துவர்கள் யானைக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். நீண்டதூரப் பயணத்தால் ஏற்பட்ட களைப்பு, மற்றும் புதிய சூழ்நிலை ஆகியவற்றால் அரிசிக்கொம்பன் சோர்வாக இருப்பதாக வனத்துறையினர் தெரிவிக்கிறார்கள். அதனால் யானை இயல்பு நிலைக்குத் திரும்பும் வரையிலும் அதைக் கண்காணித்து சிகிச்சை அளிக்க முடிவுசெய்யப்பட்டிருக்கிறது.

இதனிடையே, யானையை விடுவதற்கு முடிவுசெய்திருக்கும் கோதையாறு வனப்பகுதி அதன் வாழ்விடத்துக்கு உகந்த இடமாக இருக்கும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். ஏற்கெனவே அந்தப் பகுதியை யானைகள் காப்பகமாக அண்மையில் மத்திய அரசு அறிவித்திருக்கும் நிலையில், அது அரிசிக்கொம்பன் தன்னை தகவமைத்துக் கொள்ள வசதியான இடமாக அமையும் என்பது வனத்துறை அதிகாரிகளின் கருத்து.
பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான அன்வர் பாலசிங்கம் இது தொடர்பாக நம்மிடம் பேசுகையில், “அரிசிக்கொம்பன் யானை தற்போது மிகச்சரியான இடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. 1,197 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் சோலைக் காடுகளும், நீரூற்று மண்டலங்களும் நிறைந்து, மனித நடமாட்டமே இல்லாத பகுதியில் விடுவது சரியானதாக இருக்கும்.

குமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பரந்து விரிந்து கிடக்கும் அகத்திய மலையின் உச்சியில் அப்பர் கோதையாறு வனப்பகுதியிலுள்ள முத்துக்குளி வயல் பகுதி, வனவிலங்குகளின் சொர்க்கமாகத் திகழும் இடம். வற்றாத நீரூற்றுகள் மிகுந்த அந்த இடத்திலுள்ள அடர்ந்த காடுகளும், அங்கு கிடைக்கக்கூடிய உணவும் அரிசிக்கொம்பனை மீண்டும் குடியிருப்புகள் பக்கம் திரும்ப வைக்காது என நம்புகிறேன்” என்கிறார்.
தற்போது அரிசிக்கொம்பன் யானை அப்பர் கோதையாறு பகுதியில் மருத்துவக் குழுவினர் மற்றும் வனத்துறையினரின் பாதுகாப்புடன் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அது இயல்பு நிலைக்குத் திரும்பியதும் வனப்பகுதிக்குள் அனுப்ப வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.