இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கில் அவரைக் கைதுசெய்யுமாறு மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பல மாதங்களாக வலியுறுத்தி வருகின்றனர். அதிலும், புதிய நாடாளுமன்றத்தின் திறப்பு விழா அன்று பேரணி செல்ல முயன்ற வீராங்கனைகள் கைதுசெய்த இரண்டு நாள்களுக்குப் பிறகு, தங்களின் பதக்கங்களை கங்கையில் வீசப்போவதாக மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பகிரங்க அறிவிப்பை வெளியிட்டனர்.

ஆனால், விவசாய சங்கத்தினரின் சமாதானத்தின் பேரில் அத்தகைய முடிவை அவர்கள் கைவிட்டனர். அதன் பின்னர், விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்குத் தாங்கள் ஆதரவாக இருப்பதாகத் தெரிவித்த மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், `இந்த வழக்கில் டெல்லி போலீஸின் விசாரணை முடியும் வரை காத்திருக்க வேண்டும்’ போராட்டக்காரர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
இந்த நிலையில் “பிரிஜ் பூஷன் விவகாரத்தில் நாங்கள் யாரையும் காப்பாற்றவில்லை, யாரையும் காப்பாற்ற நினைக்ககூட இல்லை” என்று தனியார் ஊடக நிகழ்ச்சியொன்றில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் நேற்று தெரிவித்திருக்கிறார்

மேலும், “இதில் நியாயமான விசாரணையை நடத்தவே இந்திய அரசு விரும்புகிறது. இதிலிருந்து ஒருபோதும் நாங்கள் பின்வாங்க மாட்டோம். மல்யுத்த வீராங்கனைகளுக்கு நீதி கிடைக்க வேண்டும். அவர்கள் இந்தியாவின் மகள்கள். சட்டப்படி நடவடிக்கை தொடரும்”என்று அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.