திருப்பூர் முரட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மணிமாறன். இவர் சொந்தமாக பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரின் மனைவி மாங்கனி. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் மணிமாறனுக்கும் அவரது நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த பெண்ணுக்கும் இடையே உறவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த பெண்ணுக்கு அவரது பெற்றோர் வேறொரு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர்.
இதையறிந்த மணிமாறன் தனது அப்பெண்ணின் திருமணத்தை நிறுத்த முடிவு செய்தார். இதற்காக அப்பெண்ணுக்கு பார்த்திருந்த மாப்பிள்ளைக்கு, அப்பெண் குறித்து தவறான தகவல் எழுதிய மொட்டை கடிதம் ஒன்றை அனுப்பினார். அந்த கடிதத்தை மணிமாறன் தனது வீட்டில் வைத்து எழுதியுள்ளார். முதலில் எழுதிய கடிதத்தில் தவறு ஏற்பட்டபோது அந்த கடிதத்தை கசக்கி வீட்டிலேயே போட்டுள்ளார். அதை மணிமாறனின் மனைவி மாங்கனி எடுத்து பார்த்த மணிமாறனிடம் கேட்டதுடன், அப்பெண்ணுடனான உறவை கைவிடுமாறும் எச்சரித்துள்ளார். தனது முறையற்ற உறவு மனைவிக்கு தெரிந்து விட்டதால் அவரைக் கொலை செய்ய திட்டமிட்டார். இதுகுறித்து தனது நண்பர்களிடம் மணிமாறன் தெரிவித்துள்ளார்.

அவர்களும் மணிமாறனின் மனைவியை கொலை செய்ய ஒப்புக்கொண்டனர். அதன்படி கடந்த 2-ம் தேதி இரவு மாங்கனி வீட்டில் தூங்கி கொண்டு இருந்தார். அப்போது மணிமாறனின் நண்பர்கள் 4 பேரும் வீட்டுக்கு வந்துள்ளனர். வீட்டின் கதவை மணிமாறன் திறந்துவிட 4 பேரும் தூங்கி கொண்டிருந்த மாங்கனி அறைக்குள் சென்று தலையணையால் முகத்தில் அமுக்கி கொலை செய்ய முயன்றனர்.
அப்போது, மாங்கனி சத்தம் போடவே 4 பேரும் கொலை முயற்சியை கைவிட்டு விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இந்த சம்பவத்துக்கு தனது கணவன் மணிமாறன் காரணம் என்பது தெரிய வரவே, இதுகுறித்து மாங்கனி ஊத்துக்குளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்த போலீஸார், மாங்கனியின் கணவர் மணிமாறன், தர்மபுரியைச் சேர்ந்த வேலு, விவேக், முனிரத்தினம், ஜான் ஜோசப் என 5 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.