`பச்சிளம் குழந்தை வளர்ப்பு’ பெற்றோருக்கு சவால் நிறைந்தது மட்டுமல்ல, பல்வேறு கேள்விகளும் நிறைந்தது. பெற்றோரின் கேள்விகள் கொண்டு ‘பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்’ ஒவ்வொன்றையும் வாரம் ஒன்றாக, மருத்துவ நுணுக்கங்ளைக் கொண்டு, எளிதில் விளங்கும் வண்ணம், விரிவாக விளக்குவதே இந்த மருத்துவத் தொடரின் நோக்கம்.

புதுச்சேரி, ஸ்ரீ லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரி குழந்தைகள் நல மருத்துவரான மு. ஜெயராஜ், MD (PGIMER, Chandigarh), இத்தொடரின் மூலம் உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் தருகிறார்.

மருத்துவர் மு. ஜெயராஜ்

சென்ற அத்தியாயத்தில் தாழ்வெப்பநிலையால் (Hypothermia) பச்சிளங்குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை விரிவாகக் கண்டறிந்தோம். இந்த அத்தியாயத்தில், பச்சிளங்குழந்தைகளில் தாழ்வெப்பநிலை எவ்வாறு ஏற்படுகிறது என்பது பற்றி விரிவாகக் காணலாம்.

உலகளவில், வருடாவருடம் சுமார் 25 லட்சம் குழந்தைகள் பிறந்த முதல் மாதத்திற்குள் இறக்கின்றனர். இது, ஐந்து வயதுள்ள குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது, 47% ஆகும். 99% பச்சிளங்குழந்தைகளின் மரணங்கள் குறைமாத பிரசவம், பிறக்கும்போது தீவிர மூச்சுத்திணறல் மற்றும் நோய்த்தொற்று போன்ற காரணங்களால் நிகழ்கின்றன.

தாழ்வெப்பநிலையினால் நேரடி பச்சிளங்குழந்தைகளின் மரணம் அரிதென்றாலும், தாழ்வெப்பநிலை மற்ற காரணிகளுடன் சேர்ந்து பச்சிளங்குழந்தைகளின் மரணத்தை ஏற்படுத்துகிறது. தாழ்வெப்பநிலை ஏற்படும்போது, பச்சிளங்குழந்தைகளின் குருதிநாளங்கள் இறுக்கமடையும். தாழ்வெப்பநிலை தொடர்ந்து நீடிக்கும்போது, உடலிலுள்ள குளுக்கோஸின் அளவு குறையத் தொடங்கும். நுரையீரலிலுள்ள குருதிநாளங்கள் இறுக்கமடையத் தொடங்கியவுடன் உடலில் ஆக்ஸிஜன் அளவு குறையத் தொடங்கும்.

பச்சிளம் குழந்தை பராமரிப்பு

தொடர்ந்து தாழ்வெப்பநிலை தீவிரமாகத் தொடருமாயின், குறைமாத பச்சிளங்குழந்தைகள் இறக்கக்கூட நேரிடும். எனினும், பொதுமக்களிடையே பச்சிளங்குழந்தைகளின் வெப்பநிலை பராமரிப்பு குறித்தும் தாழ்வெப்பநிலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து போதுமான விழிப்புணர்வு இல்லை. பச்சிளங்குழந்தையின் நார்மல் வெப்பநிலை 36.5-37.5 டிகிரி செல்சியஸாக இருக்க வேண்டும். அதற்கு கீழாக சென்றால், அதனை தாழ்வெப்பநிலை (Hypothermia) என்று அழைப்பர்.

உடலின் வெப்பநிலை 36-36.4 டிகிரி செல்சியஸாக இருந்தால், அதனை லேசான தாழ்வெப்பநிலை எனவும், 32-35.9 டிகிரி செல்சியஸாக இருந்தால், அதனை மிதமான தாழ்வெப்பநிலை எனவும், 32 டிகிரி செல்சியஸுக்கு கீழாக இருந்தால், அதனை தீவிரமான தாழ்வெப்பநிலை எனவும் அழைப்பர். பச்சிளங்குழந்தையின் வெப்பநிலை, நார்மல் வெப்பநிலையைவிட குறையும் ஒவ்வொரு டிகிரி செல்சியஸிற்கும் பச்சிளங்குழந்தையின் மரண அபாயம் 28% அதிகரிக்கின்றது.

பிறந்த குழந்தையின் தோலில் ஒட்டியிருக்கும் புனிற்றுமெழுகை (vernix caseosa)

தாழ்வெப்பநிலை ஏற்பட அபாய காரணிகள்:

குறைமாத பிரசவம், எடை குறைவாகப் பிறத்தல் மற்றும் பிறக்கும்போது தீவிர மூச்சுத்திணறல். பிரசவ அறையின் வெப்பநிலை மிக குறைவாக இருத்தல், பிறந்த உடனே குழந்தையின் சருமத்தில் ஒட்டியிருக்கும் புனிற்றுமெழுகை (vernix caseosa) முழுவதுமாகத் துடைத்தல், பிறந்த உடனே குழந்தையைக் குளிப்பாட்டுதல், குழந்தை பிறந்த உடன் தாமதமாக தாய்ப்பால் தொடங்குதல், பிரசவ அறையிலிருந்து குழந்தையை தீவிர பச்சிளங்குழந்தைகள் சிகிச்சை பிரிவுக்கோ அல்லது வேறு மருத்துவமனைக்கோ மாற்றும்போது, செல்லும் வழியில் வெப்பநிலை பராமரிப்பு நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்காமல் இருத்தல் இவையெல்லாம், பச்சிளங்குழந்தைகளில் தாழ்வெப்பநிலையை ஏற்படுத்தும் அபாயங்களாகும்.

பச்சிளங்குழந்தைகளில் வெப்ப இழப்பு நிகழும் முறைகள்:

வெப்பக் கடத்தல் (Conduction): குழந்தைக்கு குளிரான உடையை உடுத்தும்போது அல்லது குளிரான பகுதியின் மேல் குழந்தையைக் கிடத்தும்போது, குழந்தையில் உடல் வெப்பம் குளிரான உடை அல்லது பகுதிக்கு கடத்தப்பட்டு, குழந்தைக்கு வெப்ப இழப்பு ஏற்படும்.

வெப்பச் சலனம் (Convection): ஏசி, மின்விசிறியிலிருந்து வெளிப்படும் குளிர் காற்று, குழந்தையின் உடலின் மீது படும்போது, வெப்பச் சலனத்தின் காரணமாக, குழந்தைக்கு வெப்ப இழப்பு ஏற்படும்.

கதிர்வீச்சு (Radiation): குழந்தைக்கு அருகாமையில் குளிரான பொருள் இருக்கும்போது, குழந்தையின் உடலில் இருந்து வெப்ப இழப்பு ஏற்படும்.

new born

ஆவியாதல் (Evaporation): குழந்தை பிறந்த உடன் அதன் உடலின் மீதுள்ள பனிக்குட நீர் ஆவியாதல் மூலம் குழந்தையின் உடலில் இருந்து வெப்ப இழப்பு ஏற்படும்.

பச்சிளங்குழந்தைக்கு ஏற்கெனவே தாழ்வெப்பநிலையை ஏற்படுத்தும் அபாய காரணிகள் இருப்பின், மேற்குறிப்பிட்ட வெப்ப இழப்பு முறைகள் மூலம் வெப்ப இழப்பு ஏற்பட்டு, தாழ்வெப்பநிலை ஏற்படும்.

அடுத்த அத்தியாயத்தில், பிறந்தது முதல் என்னென்ன வழிமுறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம், அபாய காரணிகள் இருப்பினும் குழந்தைக்கு தாழ்வெப்பநிலை ஏற்படாமல் காக்க முடியும் என்பது பற்றி விரிவாகக் காணலாம்.

பராமரிப்போம்…

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.