​கேரள மாநில வனத்துறையால் பிடிக்கப்பட்டு, தேக்கடி வனப்பகுதிக்குள் விடப்பட்ட அரிக்கொம்பன் காட்டு யானை, நேற்று தேனி மாவட்டம், கம்பம் நகர்ப் பகுதிக்குள் நுழைந்தது. இன்று அதிகாலை சுருளி​​பட்டி மலையடிவாரத்திலுள்ள யானை கஜம் என்ற இடத்தில் ஒரு தோட்டத்துக்குள் நுழைந்தது. இந்த நிலையில் மாநில வனத்துறை அமைச்சர் மதிவேந்தன்  சுருளிப்பட்டியில் யானையின் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் வனத்துறை அதிகாரிகளுடன், யானை முகாமிட்டிருக்கும் இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.

கும்கி

இதையடுத்து செய்தியாளர்க​ளைச் சந்தித்த அமைச்சர்​ மதிவேந்தன், “நேற்று கூடலூர் வனச்சரகத்துக்குட்பட்ட சுரங்கனார் காப்புக்காடு பகுதிகளில் யானை வலம் வந்தபோது, பொதுமக்கள் சிலர் கூச்சலிட்டதால் கம்பம் நகர்ப் பகுதிக்குள் அரிசிக்​கொம்பன் நுழைந்த​து. உடனடியாக யானையைக் காட்டுப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டிருந்தபோது, ​யூடியூபர் ஒருவர் பறக்கவிட்ட ட்ரோன் கேமராவால் அங்கிருந்து காந்திநகர்ப் பகுதிக்கு இடம்பெயர்ந்து வாழை தோட்டத்துக்குள் தஞ்சமடைந்தது. 

​அங்கேயும் வாழை மரங்களுக்கு அடையாளம் தெரியாதவர்கள் தீவைத்ததால் அங்கிருந்து வெளியேறி, சுருளிப்பட்டி கிராமத்தில் மலை அடிவாரத்திலுள்ள யானை ​க​ஜம் என்ற இடத்துக்கு யானை நகர்ந்​திருக்கிறது. தொடர்ந்து  யானையைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பொதுமக்கள் ஏற்படுத்திய இடையூறுகளால்தான், யானை வெவ்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றது.​ ​இதன் காரணமாகவே அரிசிக்கொம்பன் யானை மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி இந்த 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

இடம்பெயர்ந்த அரிசிக்கொம்பன்

​மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு குழுக்களாகவும், 150-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் மூலமாகவும் யானையின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.​ ​எனவே அமைதியான சூழல் திரும்பியதும் அரி​சிக்கொம்பன் யானையைப் பிடிப்பதற்கோ அல்லது வேறு பாதுகாப்பான பகுதிகளுக்குக் கொண்டு செல்வதற்கோ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்​. மேலும், தற்போது யானை  கூத்தனாட்சியாறு என்ற பகுதிக்கு அருகாமையிலுள்ள காப்பு காடுகளில் சுற்றிவிட்டு, அங்கிருந்து மேகமலையை நோக்கி நகர்ந்து செல்​கிறது. ​இதற்கிடையே டாப் சிலிப்பிலிருந்து முத்து, சுயம்பு, முதுமலையிலிருந்து உதயன் ஆகிய மூன்று கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டிருக்கின்றன. தேவைப்படும் பட்சத்தில் கும்கிகளும் பயன்படுத்தப்படும். ​

​தேவைப்படும் நேரத்தில் பயன்படுத்தும் வகையில் மருந்துகள் அடங்கிய டாட் இன் கன்ஸ் (dot in guns) ஆயுதங்களைக் கொண்டு ஐந்து பேர் கொண்ட மருத்துவக் குழுவினரும் யானையைத் தொடர்ந்து கண்காணித்து வரு​கின்றனர். இந்தப் பணியில் முதன்மை வன பாதுகாப்பு அலுவலர்கள், புலிகள் காப்பக துணை இயக்குநர்கள், மாவட்ட அளவிலான வன அலுவலர்கள், யானையைக் கண்காணிக்கும் சிறப்புக் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட பலர் இடம்பெற்றிருக்கின்றனர்​. 

கும்கி

சவால்கள் நிறைந்த இந்தப் பணியில் திறம்பட செயல்பட்டு பொதுமக்களுக்கும் யானைக்கும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாத வண்ணம் வனத்துறையானது செயல்படும்​. யானையை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க  வேண்டிய சூழ்நிலை வந்தால், மருத்துவக் குழுவினர் மூலம் யானையின் உடல்நிலையைக் கருத்தில் கொண்ட பின்பு, தேவைக்கேற்ப அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்​றார். 

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.