நம் வாழ்விலும் கலாசாரத்திலும் நீர்நிலைகளுக்கு முக்கியமான இடம் உண்டு. குளம், குட்டை, ஏரி, தாங்கல், ஏந்தல் என பல வகையான நீர்நிலைகள் இயற்கையாகவும், மனிதர்களால் செயற்கையாகவும் உருவாக்கப்பட்டவை. விவசாயத்திற்காகவும் குடிநீர் தேவைக்காகவும் பயன்படுத்தப்பட்ட நீர்நிலைகள் இன்று குப்பைகளைக் கொட்டும் இடங்களாகவும், தொழிற்சாலை கழிவுகளை குவிக்கும் இடங்களாகவும் உருமாற்றி வருவதுதான் வேதனை.

நீர்நிலைகளில் கொட்டப்படும் கழிவுகள்

உலகம் முழுவதையும் தங்களுக்கு மட்டுமே சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்கிற பேராசையின் விளைவாக மனிதர்கள் செய்யும் நாச வேலையாகவே இதைப் பார்க்க வேண்டும். ஆனாலும், இயல்பில் மனிதர்கள் மிகவும் நல்லவர்கள். அதனால் இயற்கைக்கு முரணாக மனிதகுலத்தைச் சித்தரிப்பதை விடவும், இயற்கையின் உற்ற தோழனாய், நண்பனாய் மனிதர்கள் திகழும் கதையை இங்கு பார்க்கலாம்..

காடுகள் Vs மனிதர்கள்!

ஒரு காலத்தில் வனங்களின் பரப்பளவு மிக அதிகமாக இருந்ததால் வனங்களையும் வன வளங்களையும் கட்டுப்பாடுகள் இல்லாமல் பயன்படுத்த மனிதர்களுக்கு உரிமை இருந்தது. அதாவது, காடுகள் என்பது காட்டு உயிரினங்கள், மனிதர்கள் என அனைவருக்கும் பொதுவானதாக இருந்தது. அதனால் யார் வேண்டுமானாலும் காடுகளுக்குள் செல்லலாம், வனங்களின் வளங்களை சொந்த உபயோகத்துக்காக எடுத்துக் கொள்ளலாம் என்ற நிலை இருந்தது.

எழில் கொஞ்சும் காடுகள்

ஆனால், காட்டின் வளங்கள் குறைய ஆரம்பித்ததும் உலகம் முழுவதுமே வனச் சட்டங்கள் கடுமையாக்கப்பட்டன. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் அனுமதியின்றி நுழைவதே குற்றமாக பார்க்கப்படும் சூழல் உருவானது. காரணம், பூமிப் பந்தில் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவான அளவில் இருக்கும் மனித சமூகம், எஞ்சிய 99 சதவிகிதம் உள்ள காட்டு உயிரினங்களின் நலனை கவனத்தில் கொள்ளாததால் இத்தகைய கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டியதாகிவிட்டது.

வனத்துறையானது காட்டின் ஒரு பகுதியை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டாலே கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். அதனால் ஏதாவதொரு இடத்தை பாதுகாக்கப்பட்ட காடாக அறிவிப்பதற்கு முன்பாக பல்வேறு சவால்களை வனத்துறை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால், அந்தக் கட்டுப்பாடுகள் என்பது வனங்களைப் பாதுகாத்து மனித குலத்துக்கு நன்மை செய்யவே என்பதை மக்களுக்குப் புரியவைக்க அரும்பாடு பட வேண்டியிருந்தது.

கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம்

உலகெங்கிலும் நிலைமை இவ்வாறு இருக்க, சில பகுதிகளில் மக்களே முன்வந்து தங்களது சமூகத்தின் பொது சொத்துகளை வனத்துறையிடம் ஒப்படைத்த நற்காரியங்களும் நடக்கவே செய்தன. அத்தகைய அரிய சம்பவம் திருநெல்வேலி மாவட்டத்தின் கூந்தன்குளம் கிராமதிலும் நடந்தது. வனச் சட்டங்களும் பாதுகாக்கப்பட்ட காடுகளும் நடைமுறைக்கு வருவதற்கு முன்பே, அந்த கிராமத்தினர் வலசை பறவைகளைப் பாதுகாத்தார்கள். அந்தப் பறவைகளைப் பாதுகாப்பதை கலாச்சார நிகழ்வாகவே கிராம மக்கள் கருதினார்கள்.

மகத்துவம் மிகுந்த மஞ்சள் மூக்கு நாரை!

நீர் பறவைகளுக்கு பெயர் போன கூந்தன்குளம் கிராமம், வனச் சட்டங்கள் அமலுக்கு வந்தபின் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டு இன்றும் மக்களின் முழு ஒத்துழைப்புடன் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக இருக்கிறது. இத்தகைய பெருமை வாய்ந்த கூந்தன்குளம் கிராமத்தில் எத்தனையோ பறவைகள் இருக்க மஞ்சள் மூக்கு நாரை என்ற பறவை மக்கள் மனதிற்கு மிகவும் நெருக்கமானதாக இருக்கிறது.

மஞ்சள் மூக்கு நாரைகள்

மஞ்சள் மூக்கு நாரை கண்ணைக் கவரும் வண்ணங்களுடன் மக்களை எளிதில் ஈர்க்கும் தன்மை கொண்டது. ஆண் பறவைகளும் பெண் பறவைகளும் பார்ப்பதற்கு ஒன்று போலவே இருந்தாலும் ஆண் பறவைகள் பெண் பறவைகளை விடவும் அளவில் சற்று பெரியதாக இருக்கும். இவை உள்ளூர் வலசை செல்லும் தன்மையுடையது. அதாவது, நமது நாட்டிலேயே ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு வலசை செல்லக்கூடியவை.

கூந்தன்குளம் கிராமம் மஞ்சள் மூக்கு நாரைகளின் முக்கிய இனப்பெருக்க களமாகத் திகழ்கிறது. ஒவ்வொரு வருடத்திலும் இனப்பெருக்க காலத்தில் அவை மிக நீண்ட தூரம் பயணித்து இங்கே வந்துவிடுகின்றன. பொதுவாக ஆண் நாரைகள் கூடுகட்டும். அந்த கூடு பிடித்திருந்தால் மட்டுமே பெண் நாரை இணை சேர்வதற்கு ஒத்துக்கொள்ளும். பொதுவாக உயரமான கூடுகளை கட்டிய ஆண் நாரைகளையே பெண்நாரைகள் தேர்வு செய்யும்.

முட்டையிட்டு அடைகாக்கும் நாரை

ஆண் நாரைகளுக்கு இடையே இனச்சேர்க்கைக்கு பெண் நாரைகளால் தேர்வு செய்யப்படுவதில் மிகக் கடுமையான போட்டி நிலவும். அத்தகைய போட்டி ஏற்படும் போது, உயரம் அதிகமாக இருக்கும் ஆண் நாரையை தனது துணையாக பெண் நாரை தேர்வு செய்யும். அவ்வாறு தேர்வு செய்து இனப்பெருக்கம் செய்த பின்னர், குஞ்சு பொரிக்கும். குஞ்சுகள் பார்ப்பதற்கு நாரைகள் போலவே இருந்தாலும், கண்கவர் வண்ணங்கள் எதுவும் இல்லாமல் பழுப்பு நிறத்திலேயே காட்சியளிக்கும்.

மக்களுடன் நெருக்கம் காட்டும் நாரைகள்!

மஞ்சள் மூக்கு நாரைகள் தங்களின் குஞ்சுகளை ஆணும் பெண்ணுமாக முறை வைத்து மாறி மாறி பாதுகாக்கின்றன. குஞ்சுகளுக்குத் தேவையான உணவை ஆண், பெண் என இரு நாரைகளுமே கொண்டு வந்து கொடுக்கும். பொதுவாக கூட்டமாக கூடு கட்டி வசிக்கும் தன்மை கொண்ட மஞ்சள் மூக்கு நாரைகளோடு, பிற கொக்கு இனங்கள், நீர்வாழ் பறவைகளும் கூட்டமாக கூடுகட்டி வாழ்கின்றன.

நீர்வாழ் பறவைகள்

சில கொக்கு இனங்கள் தங்களின் கூடுகளை மஞ்சள் மூக்கு நாரைகளின் கூடுகளுக்குக் கீழே அமைக்கும். நாரைகள் தங்கள் குஞ்சுகளுக்கு உணவு ஊட்டும் போது தவறவிடும் மீன் போன்ற உணவுகளை பிடித்து தன் குஞ்சுகளுக்கு ஊட்டி வாழ்கின்றன. எனவே சிறிய பறவைகளின் உணவுக்கும் உத்தரவாதம் அளிக்கும் வகையில் மஞ்சள் மூக்கு நாரைகள் உள்ளன.

மஞ்சள் மூக்கு நாரைகளின் கண்கவர் வண்ணமயமான தோற்றமே மக்களின் பேரன்புக்கு பாத்திரமாகி விட்டதா என்றால் அதை முழுமையாக ஏற்க முடியாது. அது ஒரு காரணமாக இருக்கலாம் என்பதையும் மறுப்பதற்கில்லை. உணவுக்காக மஞ்சள் மூக்கு நாரைகள் குளங்களுக்குச் செல்கின்றன. அங்குள்ள மீன்களே அவற்றின் பிரதான உணவு. ஆனாலும் குளத்தின் கரைகளில் கூடுகட்டுவதை விடவும், மக்களின் வீடுகளில் உள்ள மரங்களில் கூடுகட்டி இனப்பெருக்கம் செய்கின்றன. அந்த அளவுக்கு மக்களுடன் நெருக்கமாக இருக்கவே இந்த நாரைகள் விரும்புவது ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது.

குஞ்சுகளுக்கு பயிற்சியளிக்கும் நாரைகள்

மக்களின் வசிப்பிடத்தின் மரங்களில் கூடு கட்டி இனப்பெருக்கம் செய்து, குஞ்சுகளுக்கு பறக்கும் பயிற்சியளித்து வேறொரு இடத்திற்கு வலசை செல்கின்றன. ஆனாலும், அடுத்த வருடம் மீண்டும் தங்களுக்கு மிகவும் பிடித்தமான இனப்பெருக்க களமான கூந்தன்குளத்தை நோக்கி வருகின்றன. பொதுவாக மனிதர்களைப் பார்த்தால் அச்சப்படும் பறவைகள், கூந்தன்குளம் கிராமத்தில் சாதாரணமாக மனிதர்களுடன் தெருக்களில் நடமாடுவதை நானே நேரில் பார்த்து வியந்திருக்கிறேன.

பறவைகளிடம் பாசம் காட்டும் மக்கள்!

மக்களுடன் மஞ்சள் மூக்கு நாரைகள் நேசத்துடன் இருப்பது ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் மக்களும் தங்களைத் தேடி ஒவ்வொரு வருடமும் வரக்கூடிய நாரைகளை வீட்டின் விருந்தினர்களாகவே கருதுகிறார்கள். அதனால் பறவைகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக குடும்பத்தின் கொண்டாட்டங்கள், கோயில் விழாக்கள் என எந்த நிகழ்சிகளிலும் ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவதில்லை. தீபாவளி உள்ளிட்ட எந்த கொண்டாட்ட காலத்திலும் இந்தக் கிராமத்தில் பட்டாசு சத்தமே கேட்பதில்லை.

வீட்டின் முன்புள்ள மரத்தில் வசிக்கும் பறவைகள்

கூந்தன்குளம் ஊரும் மக்களும் வலசை பறவைகளுக்குத் தேவையான வசிப்பிடத்தையும், உணவை தேட நீர் நிலைகளையும், மிகுதியான நெல் வயல்களையும் பராமரிக்கிறார்கள். பறவைகளும் அதற்கு கைமாறாக அவற்றின் எச்சங்களை நீர் நிறைந்த குளத்தில் கலந்து விளை நிலத்திற்கு இயற்கை உரமாகக் கொடுக்கின்றன. அதனால் விளைநிலங்களில் விளைச்சல் அதிகரிக்கிறது. ஒரு வருடம் இந்தப் பறவைகள் கிராமத்துக்கு வராமல் போனால் அதை கெட்ட சகுனமாக மக்கள் கருதும் அளவுக்கு இந்தப் பறவைகளின் மீது மக்கள் அன்பு கொண்டிருப்பதை சாதாரணமாகக் கருத முடியாது.

பறவைகள் வந்தால் மழை நன்கு பொழியும் என்றும், விவசாயத்தில் மகசூல் நன்றாக இருக்கும் என்றும் கூந்தன்குளம் மக்களிடம் நம்பிக்கை இருக்கிறது. பறவைகள் மீதான மக்களின் இத்தகைய நம்பிக்கைகள் இங்கு மட்டுமல்ல உலகம் முழுவதும் இருக்கவே செய்கிறது. சில வருடங்களுக்கு முன்பு நான் பூட்டான் நாட்டுக்குச் சென்றபோது அங்கும் இதே போன்று வலசை பறவைகள் மீது மக்கள் நம்பிக்கை கொண்டிருந்ததைக் கண்டிருக்கிறேன்.

வலசை பறவை

வலசைப் பறவைகள் ஒவ்வொரு வருடமும் வழக்கம் போல வந்து கூடுகட்டி குஞ்சு பொரித்து சென்றால் மட்டுமே மனிதர்கள் செல்வச் செழிப்புடனும் ஆனந்தத்துடனும் வாழ இயலும். ஆகவே இது கூந்தன்குளம் கிராமத்தின் கதை மட்டுமல்ல மஞ்சள் மூக்கு நாரைகளின் நட்புக் கதையும் கூட. எத்தனையோ உயிரினங்கள் இருக்கும்போது சில உயிரினங்கள் மட்டும் மக்களின் மனதைக் கவர்கின்றன. அது எப்படி சாத்தியமாகிறது என்பது குறித்து அடுத்து காண்போம்..

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.