பத்தாவது இடத்துக்கு நடந்த பரபரப்பான போட்டியில் டெல்லி அணி வெற்றிகரமாக பத்தாவது இடத்தை தக்க வைத்துள்ளது. கூடவே டெல்லி மிடில் ஆர்டர் விளையாடிய விதத்தை எல்லாம் பார்த்தால் இந்த தொடர் முடியும் வரைக்குமே டெல்லி அந்த இடத்தை விட்டு நகரப்போவதாகத் தெரியவில்லை.

DCvSRH

டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்த போட்டியில், டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதின. வரிசையாக கடந்த ஐந்து ஆட்டங்களில் சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்திய உத்வேகத்தில் களமிறங்கியது டெல்லி. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி, தற்போதைய டிரெண்டுக்கு ஏற்றவாறு பேட்டிங்கை தீர்மானித்து களமிறங்கியது. ஏதாவது ஒரு ஓப்பனர் வேகமாக அவுட் ஆவது தான் சன்ரைசர்ஸின் கலாச்சாரம். அதற்கேற்றவாறு இன்று மயங்க் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். கூடவே 10 ரன்களில் திரிப்பாதியும் கிளம்பினார்

Abisheik

ஆனால் மற்றொரு துவக்க வீரராகக் களமிறங்கிய அபிஷேக் மிகச் சிறப்பாக விளையாடினார். கண்முன்னே யுவராஜ் சிங்கைக் கொண்டு வந்து நிறுத்தும் அளவுக்கு அவரது ஒவ்வொரு ஷாட்டும் அவ்வளவு அழகாக இருந்தது. மற்ற ஹைதராபாத் வீரர்கள் எல்லாம் ரன்களுக்குத் தடுமாறிக் கொண்டிருந்தபோது இவருடைய பேட்டில் இருந்து மட்டும் ரன்கள் மிக எளிதாக வந்தன. இஷாந்த் சர்மா வீசிய பவர்பிளேயின் கடைசி ஓவரில் நான்கு பவுண்டரிகள் அடித்த பின் தான் பாதி சன்ரைசர்ஸ் ரசிகர்கள் முகத்தில் உற்சாகமே தென்பட்டது. அது எப்படி இவர்கள் இவ்வளவு உற்சாகமாக இருக்கலாம் என்று கேட்பது போல மற்ற பேட்டிங் வீரர்கள் ஆடத் தொடங்கினர்.

மிட்செல் மார்ஷ் வீசிய பத்தாவது ஓவரில் கேப்டன் மார்க்ரம் மற்றும் ஹாரி ப்ரூக் அவுட் ஆயினர். தொடர்ந்து 12வது ஓவரில் அபிஷேக்கும் அவுட் ஆக மீண்டும் சோக ரேகைகளில் சன்ரைசர்ஸ் ரசிகர்களின் முகம் மூழ்கியது.

Klassen

மீண்டும் பழைய கதை தான் என்று பலர் நினைத்தபோது அதெல்லாம் இல்லை என்று களம் இறங்கினார் தென்னாப்பிரிக்காவின் கிளாசன். கூடவே அப்துல்‌ சமாத்‌ அவ்வப்போது பவுண்டரிகள் அடிக்க கிளாசன் சிக்சர்களில் டீல் செய்யத் தொடங்கினார்.

நன்கு பந்துவீசிக் கொண்டிருந்த அக்சர் பட்டேலின் ஓவரில் அவர் அடித்த இரண்டு சிக்சர்கள் பலரை திரும்பி பார்க்க வைத்தது. கிளாசன் கடைசி வரை அவுட் ஆகாமல் 53 ரன்கள் எடுத்தார். அவருக்கு துணையாக புதிதாய் அணிக்குள் வந்த அக்கீல் ஹொசைன்‌ 10 பந்துகளில் 16 ரன்கள் அடிக்க‌ சன்ரைசர்ஸ் 197 ரன்கள் எடுத்தது 20 ஓவர்களில். டெல்லி தனது இன்னிங்ஸை ஆரம்பித்தது. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பழைய கணக்கை மனதில் வைத்து சன்ரைசர்ஸை பழி வாங்கும் வார்னர் இம்முறை‌ புவனேஸ்வர் பந்தில் டக் அவுட் ஆனார். அடுத்து இணைந்த மார்ஷ் மற்றும் சால்ட் ஆட்டத்தை மிகச் சிறப்பாக நகர்த்தினர். இருவருமே பவுண்டரிகளில் டீல் செய்ய ரன்கள் மிக வேகமாக வந்தன. அடித்த அடியில் பித்து பிடித்தது போல் சன்ரைசர்ஸ் பந்து வீச்சாளர்கள் பந்து வீசினர். அதுவும் உம்ரான் மாலிக் வீசிய ஓவரில் 22 ரன்கள் எடுத்தது டெல்லி. அப்போதெல்லாம், `இப்படி வீசினால் இந்த வயதில் நான் கூட அடிப்பேன்’ என்பது போல பார்த்தார் லாரா.

இருவரும் இணைந்தே ஆட்டத்தை முடித்து விடுவார் என்று நினைத்தபோது பிலிப் சால்ட் 59 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆதி காலம் முதல் IPL ஆடும் மனிஷ் பாண்டேயும் அடுத்து தேவையற்ற நேரத்தில் அவுட் ஆனார். கூடவே மிட்செல் மார்ஷூம் கிளம்ப அப்போது கவிழ்ந்த டெல்லி அதன் பிறகு எழுந்திருக்கவே இல்லை.‌ சர்ப்ராஸ் கான், பிரியர் கார்க் என அனைவரையும் முன்வரிசையில் ஆடவிட்டு நல்ல பார்மில் இருக்கும் அக்ஸர் பட்டேலை இறங்க விடாமல் அதிசயமான வியூகம்‌ ஒன்றைக் கையாண்டது டெல்லி. எப்படியோ ஏழாவதாக களமிறங்கிய அக்சர் 14 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார்.‌ ஆனால் அது எதுவும் வெற்றிக்கு கைகொடுக்கவில்லை. 9 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சன்ரைசர்ஸ். புள்ளிப்பட்டியலில் சன்ரைசர்ஸ் எட்டாவது இடத்துக்கு முன்னேறியது.

Marsh

டி20 கிரிக்கெட்டில் மூர்க்கத்தனமான ஷாட்டுகள்‌ மட்டும் போதாது. மூளையும்‌ சிறிது வேண்டும். இரண்டு விக்கெட்டுகள் நேற்று டெல்லிக்கு போன பின்னும் டெல்லி நல்ல நிலையில் தான் இருந்தது. பின் வரிசையில் பெரிய‌‌ பேட்டிங் இல்லை என்பதை உணர்ந்து மார்ஷ் நின்று ஆடியிருக்க வேண்டும். ஆனால்‌ சிக்சர் அடிக்க நினைத்து ஆட்டமிழந்தார். இத்தனைக்கும்‌ அதற்கு முந்தைய பந்தில் தான் ஒரு சிக்சர் அடித்திருந்தார். மீண்டும் சிக்சர் அடிக்க நினைக்க டெல்லி வீழ்ந்தது. இதை விட அக்சர் படேலை ஏழாவதாகக் களமிறக்கியது எல்லாம் டெல்லி அணியின்‌ தற்போதைய அவல நிலைக்கான‌ மற்றொரு காரணம்.

DC

வாட்சன், கங்குலி, அகர்கர், பாண்டிங் என‌ எத்தனை பேரை நிர்வாகத்தில் வைத்திருந்தாலும் இது போன்ற தவறுகளை செய்யும் பட்சத்தில் கடைசி இடம் தான் வாய்க்கும்‌ என டெல்லி உணர்த்தியுள்ளது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.