அகில இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரஜ் பூசன் சரண் சிங் மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. மல்யுத்த வீராங்கனைகள் சிலர் இது தொடர்பாக புகார் செய்துள்ளனர். கடந்த ஜனவரி மாதம் அவர்கள் பிரிஜ் பூசனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து இப்பிரச்னை குறித்து விசாரிக்க மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் கமிட்டி ஒன்றை அமைத்தது. அக்கமிட்டி இம்மாத தொடக்கத்தில் தனது அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்திருக்கிறது. அந்த அறிக்கையை வெளியிடவேண்டும் என்று வீராங்கனைகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதோடு பிரிஜ் பூசன் மீது பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்யவேண்டும் என்று கோரி மீண்டும் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த சில நாள்களாக இப்போராட்டம் நடந்து வருகிறது. அதோடு பிரிஜ் பூசன் மீது வழக்குப் பதிவு செய்ய போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டிலும் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் விதமாக வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக இந்திய தடகள கூட்டமைப்பின் தலைவர் பி.டி.உஷா தெரிவித்திருந்தார்.
பிரிஜ் பூசன் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார். வீராங்கனைகளின் மனு மீது விசாரணை நடத்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், `வீராங்கனைகளின் குற்றச்சாட்டு மிகவும் கவலையளிக்கக்கூடிய ஒன்றாகும். இக்குற்றச்சாட்டு கோர்ட்டால் பரிசீலிக்கப்பட வேண்டிய ஒன்று’ என்று கூறி, இது குறித்து டெல்லி போலீஸாருக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டனர்.
இத்தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள மல்யுத்த வீராங்கனைகள் சாக்ஷி மாலிக், வினேஷ் போகத், பஜ்ரங் புனியா, ’நாங்கள் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மதிக்கிறோம். டெல்லி போலீஸை நாங்கள் நம்பவில்லை. வழக்குப் பதிவு செய்யவேண்டும் என்பதற்கானது அல்ல எங்கள் போராட்டம். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான் இப்போராட்டம் நடைபெறுகிறது. பிரிஜ் பூசன் பதவியை பறித்து அவரை சிறையில் அடைக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தனர். இப்பிரச்னை குறித்து பேச பிரதமர் நேரம் ஒதுக்கவேண்டும் என்று வீராங்கனைகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.