மணிரத்னம் இயக்கத்தில் `பொன்னியின் செல்வன்-2′ நேற்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. நாவலில் இல்லாத விஷயங்களைப் படத்தில் சேர்த்ததும், நாவலில் இருந்ததை மாற்றியது குறித்தும் விவாதங்கள் எழுந்திருப்பதை பார்க்கமுடிகிறது. இது தொடர்பாக கடந்த வாரம் ஆனந்த விகடன் பேட்டியில் (26/04/2023) இயக்குநர் மணிரத்னம் சொன்னது என்ன தெரியுமா?

பொன்னியின் செல்வன் 2

“கல்கியோட கதை ஐந்து பாகங்களா இருந்தது. நிறைய கதாபாத்திரங்கள். அவருக்கு நிறைய நேரமும், எழுதிப் பார்த்துவிடலாம் என்ற எண்ணமும் இருந்திருக்கிறது. சினிமா முற்றிலும் வேற மீடியா. இதில் கொஞ்ச நேரத்தில் நிறைய சொல்லிப் பார்க்கணும். சும்மா பேச்சுல கதை சொல்ல முடியாது. கதையை மக்கள் கண்கூடாகப் பார்க்கணும். சேர்ந்து பார்த்து ஒரு கதையைச் சொல்ல முடிந்த திருப்தி வரணும். இதில் பிரச்னை எல்லாம் ஸ்கிரிப்ட் எழுதும்போதுதான் வரும். அதுவும் திருப்தியாக முடிந்துவிட்டால், அதை அப்படியே செயலாக்கப் பார்க்க வேண்டியதுதான். அப்படி நல்லபடியாக வந்திருக்கு.

நாவலிலிருந்து சில மாற்றங்கள் இருக்கும். எல்லாம் சேர்ந்து கோவையாகி வரும்போது கதையில் இல்லாத சில விஷயங்களையும் சேர்க்க வேண்டி வந்தது. சினிமாவுக்கு முடிவு, க்ளைமாக்ஸ் என்பது வேறு. நாவலுக்கு என்ன விதமாகவும் எழுதலாம். ஆனால் சினிமாவில் க்ளைமாக்ஸ் ஆக உச்சத்தில் வந்து நிக்கணும். சினிமா மொழிக்கு இது சவால்தான். எல்லாம் சரியாகி, ஒரு வடிவத்திற்குள் கொண்டு வந்து சேர்த்திருக்கோம். கல்கி நின்று நிதானித்து எழுதினதில் நல்ல தருணங்கள் எதையும் தவறவிடலைன்னு என்னால் உறுதியளிக்க முடியும்.”

பொன்னியின் செல்வன் 2

இதைத் தொடர்ந்து, தவிர்க்கப்பட்ட சில கதாபாத்திரங்கள், சில காட்சிகள் குறித்து விளக்கமளித்தவர்…

“சில கேரக்டர்கள், சில காட்சிகள், சில இடங்கள் இல்லைதான். கிளைக் கதைகளைக் குறைக்க வேண்டியிருந்தது. ஆதாரமான கதையைக் கோவையாகச் சொல்ல மெனக்கெட வேண்டியிருந்தது. கல்கி ஒரு விஷயம் சொல்லிட்டு வரும்போது ‘அங்கே போய் வருவோமா’ எனச் சென்று விடுகிறார். திரையில் அப்படிப் போய் வர முடியாது. அப்படிப் போனாலும் அதைப் புரிந்துகொள்ள வைப்பது பெரும்பாடு. சில மாற்றங்கள் இருக்கு. ஆனால் கல்கி எழுதின ‘பொன்னியின் செல்வனோ’ட உயிர், ஆத்மா நிச்சயம் படத்தில் இருக்கு. படத்தைப் பார்த்தபிறகு நீங்களும் இதையே சொல்வீங்க!”

இந்த மாற்றங்கள் பற்றி உங்கள் கருத்து என்ன? கமென்ட்களில் பதிவிடுங்கள்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.