`மன்மோகன் சிங், கருணாநிதி பேசினால் சரி, ஆர்.என்.ரவி பேசினால் தவறா?’ – நாராயணன் திருப்பதி சாடல்!

தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி, குடிமைப் பணிகளுக்குத் தயாராகும் மாணவர்களிடம் நேற்று உரையாடியது அரசியல் அரங்கில் பேசுபொருளாகியிருக்கிறது. ஆளுநரின் கருத்துகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கடும் கண்டனங்களைப் பதிவுசெய்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழக பா.ஜ.க துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

கூடங்குளம்

அதில், “நேற்று தமிழக ஆளுநர், கூடங்குளம், ஸ்டெர்லைட் போராட்டத்தில் வெளிநாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட நிதி மக்களைத் தூண்ட பயன்பட்டது என்று பேசியதற்காக தி.மு.க-வினரும், காங்கிரஸ் கட்சியினரும் ‘குய்யோ முறையோ’ என்று கதறிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், எதிர்க்கட்சிகளும், ஊடகங்களும் ஆளுநர் ஸ்டெர்லைட் போராட்டத்தைக் கொச்சைப்படுத்திவிட்டார் என்று குறிப்பிடுகிறார்களேயன்றி, கூடங்குளம் குறித்து அவர் பேசியதை மறைத்துவிட்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து ஆளுநர் பேசியது தவறு என்று கண்டிக்கின்றனர் முதல்வர் மு.க.ஸ்டாலினும், மக்களவை உறுப்பினர் கனிமொழியும். திடீர் தமிழ் பாசம் வந்து துடிக்கிறது தமிழக காங்கிரஸ். பிப்ரவரி 24, 2012 அன்று அன்றைய பிரதமர் மன்மோகன் சிங், ‘இந்தியாவின் வளர்ச்சியைப் பொறுக்கமுடியாமல் கூடங்குளத்தில் போராட்டம் செய்பவர்களை அமெரிக்க என்.ஜி.ஓ-க்கள் நிதியளித்து தூண்டிவிடுகிறார்கள்’ என்று கூறியதை மறந்துவிட்டு இன்று நீலிக்கண்ணீர் வடிப்பது கடும் கண்டனத்துக்குரியது. அதேபோல் தி.மு.க தலைவர் கருணாநிதி, பிப்ரவரி, 29, 2012 அன்று ‘கூடங்குளம் போராட்டத்துக்கு அமெரிக்கத் தொண்டு நிறுவனங்கள்தான் காரணம், அ.தி.மு.க அரசு போராட்டக்காரர்களுக்கு ஆதரவாகச் செயல்படுகிறது’ என்று கூறியதையும் மு.க.ஸ்டாலினால் மறுக்க முடியுமா?

மன்மோகன் சிங்குடன் கருணாநிதி

அப்படியென்றால், கூடங்குளத்தில் போராடியவர்களைத் தேசத்துரோகிகள் என்று சொல்கிறதா தி.மு.க… அமெரிக்க நிதியினால் தூண்டப்பட்டதால்தான் போராட்டம் நடைபெற்றது என்று ஏற்றுக்கொள்கிறாரா மு.க.ஸ்டாலின்… எதிர்க்கட்சியாக இருந்தால் போராட்டக்காரர்கள் தேச பக்தர்கள் என்றும், ஆளுங்கட்சியாக இருந்தால் போராட்டக்காரர்கள் தேச விரோதிகள் என்றும் முத்திரை குத்துவது மலிவான அரசியல் மட்டுமல்ல ஆபத்தான அரசியலும்கூட.

மன்மோகன் சிங் கூறினால் சரி, ஆர்.என்.ரவி கூறினால் தவறா… எந்த அடிப்படை ஆதாரத்தைக் கொண்டு அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் கூடங்குளம் போராட்டத்தைத் தூண்ட வெளிநாட்டு நிதிதான் பயன்பட்டது என்று கூறினார் என்பதை அன்று மத்திய அமைச்சரவையில் பங்கேற்றிருந்த தி.மு.க-வின் தலைவர் மு.க.ஸ்டாலின் விளக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.