ஆப்பிரிக்க காடுகளில் எண்ணற்ற காட்டுயிர்களைப் பார்த்துக்கொண்டே வருகின்ற நாம் நமது நாட்டில் ஆசிய சிங்கத்தின் நிலைமை என்ன என்பது பற்றியும் இந்த தொடரில் சற்று அறிந்து கொள்வோம்! ஒரு வீடு கட்டப்பட்டு, வீட்டு வேலை முடிக்கும் முன்னரே “கிரகப்பிரவேசம்” செய்து குடி போகும் தன்மை மனிதனுக்கு உண்டு, ஆனால்  ஒருகாடு மரங்களை வளர்த்து, இருப்பிடங்களை உருவாக்கி, உணவையும் தயார் செய்து, ஏன் வரவேற்பு பதாகைகள் தயார் செய்து வைத்துக்கொண்டு இருபது வருடங்களாகக் காத்துக்கொண்டிருக்கிறது தன் பழைய எஜமானர் வரவுக்காக! இன்னும் (2023) எஜமானர் வந்தபாடில்லை.

அதுவும் இந்தியாவில்! நம்ப முடிகிறதா உங்களால்?

புதிய இந்தியாவில் ஒரு காட்டின் நுழைவு வாயிலில் வைக்கப்பட்டிருக்கும் வாசகம் என் மனதை அடிக்கடி வலிக்கச் செய்யும். அந்த வாசகத்தை தமிழில் தருகிறேன், “இன்னும் காத்துக் கொண்டிருக்கிறேன் புதிய தொடக்கத்திற்கு” [Still Waiting For New Beginning —KUNO]

இருபது வருடங்களாக இந்தக் காத்திருத்தல் தொடர்கிறது. எதற்காக? விரிவாகச் சொல்கிறேன்! உலகில் இரண்டு வகையான சிங்கங்கள் உள்ளன, ஆப்பிரிக்கா சிங்கங்கள், அடுத்து ஆசிய சிங்கங்கள். ஆசிய சிங்கங்கள், ஆப்பிரிக்க சிங்கங்களவை விட எடையிலும் உருவத்திலும் சற்று சிறியவை. ஆப்பிரிக்க சிங்கங்கள் ஆப்பிரிக்க கண்டத்தில் பல நாடுகளில் வசிக்கின்றன. ஏறத்தாழ அவற்றின் எண்ணிக்கை 24000.

ஆனால், ஆசிய சிங்கங்கள் இந்தியாவில் அதுவும் குஜராத்தின் கிர் காடுகளில் மட்டுமே உள்ளன. சொற்ப எண்ணிக்கையில் வாழும் இந்தச் சிங்கங்கள் உலகில் எங்குமே இல்லை. ஒரு காலத்தில் துருக்கி, ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற பகுதிகளில் பரவி வாழ்ந்து வந்த இந்தச் சிங்கங்கள் இன்று இந்தியாவின் கிர் காடுகளுக்குள்  அடங்கிவிட்டன. ஈராக் நாட்டில் வாழ்ந்த கடைசி ஆசிய சிங்கம் 1918 -ம் ஆண்டும், ஈரான் நாட்டில் வாழ்ந்த கடைசி ஆசிய சிங்கம் 1941-ம் ஆண்டும் வேட்டையாடப்பட்டு விட்டன. நமது புராணங்களில் விஷ்ணு அவதாரம் மற்றும் பலநாட்டு மன்னர்களின் கொடியிலும்,  ஏன் நமது அசோக சின்னத்திலும் பெருமையுடன் வீற்றிருக்கின்றன ஆசிய சிங்கங்கள்!

ஆசிய சிங்கம்

எப்படிப் பிழைத்தன இந்த ஆசிய சிங்கங்கள் என்ற வரலாறு சற்று ஆச்சரியமானது!

1860 -ம் ஆண்டுகளில் இன்றைய மத்திய பிரதேசத்திலும், 1870 -ம் ஆண்டு இன்றைய ராஜஸ்தானிலும், பிறகு வடக்கு குஜராத்தில் வாழ்ந்த சிங்கங்கள் 1880 -ம் ஆண்டும் அன்றைய இந்திய அரச வம்சத்தினர் மற்றும் காலனிய ஆதிக்க அதிகாரிகளாலும் வேட்டையாடப்பட்டு முற்றிலும் அழிக்கப்பட்டன.

பெரும்பாலும் அரச குடும்பங்களின் முக்கிய பொழுதுபோக்கு வேட்டையாடுதல் ஆனால் ஆசிய சிங்கத்தை காப்பாற்றிய பெருமை முழுவதும் ஒரு அரச குடும்பத்திற்கே சேரும், இன்றைய குஜராத்தின் ஜுனாகத் [Junagadh] பகுதியை ஆட்சி செய்த ஆறாவது சிற்றரசர் மகா பத் கான் [Mahabatkhan1851-1888] , அவர் இயல்பிலேயே  விலங்குகளின் மீது அன்பு கொண்டிருந்தார்.

சிற்றரசர் மகா பத் கான்

அந்த அன்பின் வெளிப்பாடாகத் தனது அரசாளும் பகுதியில் சிங்கம் வேட்டையாடுவதைத் தடை செய்தார், எனக்குத் தெரிந்து இந்தியாவில் விலங்குகளுக்கு ஆதரவாக இயற்றப்பட்ட முதல் அரசாணை இதுவாகத்தான் இருக்கும். இந்தச் சட்டத்தை அன்றைய பாம்பே ஆங்கிலேயே கவர்னருக்கும் அனுப்பி ஒப்புதல் வாங்கினார்.

நவாப் ரசூல்கான்ஜி

அவருக்குப் பின்னால் வந்த நவாப் ரசூல்கான்ஜி [ Nawab Rasulkhanji 1892 – 1911] விலங்குகள் மட்டுமன்றி மயில் மற்றும் பறவைகள் வேட்டைக்கும் தடை விதித்தார். இருப்பினும் காலனிய ஆதிக்கத்திலுள்ளஆங்கிலேய பிரபுக்கள் மற்ற சிற்றரசர்களின் தொடர் தலையீட்டால் அனுமதியுடன் வேட்டையாடுதல் எனச் சட்டம் சற்று மாற்றி அமைக்கப்பட்டது, அனுமதி இல்லாமல் வேட்டையாடுபவர்கள்  கண்டறியப்பட்டு பெரிய அபராதம் விதிக்கப்பட்டன. இருந்தாலும் ஆங்கிலேயர்கள் அதை மீறி வேட்டையாடிக் கொண்டுதான் இருந்தனர்.

அவர்களை இந்தச் சிற்றரசர்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை. இதனால் மனவேதனை அடைந்த இந்தச் சிற்றரசர் 1901-ம் ஆண்டு அப்போது வைஸ்ராயாக இருந்த கர்சன் பிரபுக்கு [Viceroy Lord Curzon] கடிதம் எழுதி சிங்கத்தைக் காக்க உதவுமாறு வேண்டுகோள் வைத்தார்.

அடுத்து வந்த மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்த சிற்றரசர் மூன்றாம் மகா பத் கான்ஜி [Mahabatkhan Ji, 1911–1948] வேட்டையை முற்றிலும் தடை செய்தார், யார் வேண்டுகோளுக்கும் செவிசாய்க்கவில்லை, இருப்பினும் அவரது எல்லைக்கு வெளிப்பட்ட பகுதியிலிருந்து வேட்டைக்காரர்கள் உள்ளே வந்து சிங்க வேட்டையைக் கொஞ்சம் நடத்திக் கொண்டுதான் இருந்தனர், அவரது பதிவுகளின் படி 1920 முதல் 1943 வரை 89 சிங்கங்கள் கொல்லப்பட்டன.

சிற்றரசர் மூன்றாம் மகா பத் கான்ஜி

அவரது ஆட்சி 1947 இந்தியா சுதந்திரம் பெற்றதும் முடிவுக்கு வந்தது. இஸ்லாமியரான இவர் பாகிஸ்தானுக்கு இடம் பெயர்ந்தார். அப்போது நடந்ததுதான் மிகப்பெரிய சோகம். சிங்கத்தின் பாதுகாவலன் தேசம் மாறிவிட்டதால் சிங்க வேட்டை தொடர்ந்தது. 1963 -ம் ஆண்டு 285 சிங்கங்கள் இருந்தன, 1968-ல் 166 ஆகக் குறைந்தன. இந்தியா சுதந்திரம் பெற்று பதினெட்டு ஆண்டுகள் கழித்து ,1965-ல் வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டம் உருவாக்கப்பட்டு, ஆசிய சிங்கங்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அப்படி உருவாக்கப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாகக் காடுகள் பாதுகாக்கப்பட்டு 1412 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உருவாக்கப்பட்டதுதான் இன்றைய குஜராத்தில் உள்ள கிர் காடுகள். இதன் வெளிவட்ட பகுதிகளையும் சேர்த்து ஏறக்குறைய 2000 சதுர கிலோமீட்டர் உள்ளது. இதில் 2015 -ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 523 ஆசிய சிங்கங்கள் வாழ்கின்றன.

இன்றைய ஆசிய சிங்கங்களின் வாழ்க்கைக்கு அடித்தளமிட்டது அன்று ஜுனாகத் பகுதியை ஆட்சி செய்த மூன்று தலைமுறையைச் சார்ந்த சிற்றரசர்கள். ஆசிய சிங்கங்கள் இந்தப் பூமிப்பந்தில் இருக்கும் வரை இவர்களின் வரலாறும் அதில் இடம்பெறும். 2000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு உடையதாகக் கிர் காடுகள் இருந்தாலும் 500 சிங்கங்கள் வாழ இந்த இடம் போதுமானதாக இருக்காது, ஏனெனில் ஒரு சிங்கக் கூட்டத்திற்கு 100 சதுர கிலோமீட்டர் பரப்பளவு தேவை, எனவே 20 சிங்க கூட்டங்கள் தான் கிர் காடுகளில் வசிக்க முடியும்.

Kuno Wildlife Sanctuary

தற்போதுள்ள சிங்கங்களின் எண்ணிக்கையின் படி 25 முதல் 30 சிங்க கூட்டங்கள் இருக்கலாம். பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் 2010 முதல் 2015 வரை 337 ஆக இருந்த இதன் எண்ணிக்கை 356 ஆக உயர்ந்தது. ஆனால் பூங்காவின் வெளி  பாதையில் 74 ஆக இருந்த சிங்கங்களின் எண்ணிக்கை 167 ஆக உயர்ந்தன.

 1990 -ம் ஆண்டு Wildlife Institute Of India ஆசிய சிங்கங்கள் பற்றி ஒரு ஆய்வு நடத்தியது. இந்தத் தேசிய பூங்காவில்  ஒரு ரயில்வே வழித்தடம், 3 சாலை வழித்தடம், மக்கள் அதிகம் கூடும் கோவில்களும் இருப்பதால் இவை சிங்கங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கின்றன.

கிர் சிங்கங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே இருப்பதால் அவைகளுக்குள் கலவை நடப்பதால் பிறக்கும் குட்டிகள் குறைபாடுள்ள குட்டிகளாக பிறக்க அதிக வாய்ப்பு உண்டு.[ நாம் சொந்தத்தில் திருமணம் செய்தால் குறைபாடுள்ள குழந்தை பிறக்கும் என மருத்துவர்கள் சொல்வது உண்டு… அது போல] மேலும் ஒரே இடத்தில் மட்டும் இருப்பதால் கொள்ளை நோய் போன்று, ஒரு பெரும் நோய்த் தொற்று ஏற்பட்டால் அவற்றைக் காப்பாற்ற இயலாமல் போகலாம்.

இருப்பிட பற்றாக்குறை, இரை போட்டி போன்ற காரணங்களால் இனப்பெருக்கத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதைக் கவனத்தில் கொண்டு சிங்கங்கள் வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என முடிவு செய்தது WILDLIFE INSTITUTE OF INDIA. அதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் தான் நான் ஏற்கனவே சொன்ன மத்தியப்பிரதேசத்தில் உள்ள “ குனோ” வனவிலங்கு  சரணாலயம்” [ Kuno Wildlife Sanctuary].

Kuno Wildlife Sanctuary

இந்தச் சரணாலயம் 1996 -ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டு [ 1,280 SQUARE KM] 2001 வரை சிங்கங்களின் வாழ்க்கைக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டன, 23 கிராமங்கள் அங்கிருந்து அகற்றப்பட்டு அவர்களுக்குத் தனி வாழ்விடங்கள் ஏற்படுத்தப்பட்டன. சிங்கங்களுக்குப்போதுமான அளவுக்கு உணவு கிடைக்கும் வகையில் மான் இனங்களை [Chital, Sambar, Nilgai, Chinkara, Blackbuck And Wild Pig] அதிகப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

மிகவும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக மாற்றப்பட்ட இங்கு கடந்த மூன்று வருடங்களில் எந்த மனித விலங்கு தாக்குதலோ அல்லது வேட்டையாடுதல் போன்ற பதிவுகளோ இல்லை. 40 முதல் 80 சிங்கங்கள் வாழ அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருபது வருடங்களாகச் சிங்கம் கேட்டு, சட்டப் போராட்டங்கள் நடத்தி இன்றும் சிங்கத்துக்கு காத்துக்கொண்டிருக்கிறது இந்தியாவில் உள்ள மத்திய பிரதேசம். அவர்கள் கேட்பது இரண்டு வெவ்வேறு குழுக்களிடம் இருந்து இரண்டு ஆண் சிங்கங்களும் ஐந்து பெண் சிங்கங்களும் மட்டும்தான். இன்னும் அனுமதி கிடைக்கவில்லை ஆசிய சிங்கங்கள் காப்பாற்றப்பட வேண்டும் எனில் Wildlife Institute Of India கூறிய படி இந்தியாவில் அது மற்றோர் இடத்திலும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கருத்தில் மாறுதல் இல்லை,

ஆசிய சிங்கங்களைக் காப்பாற்றியதால் இன்றும் வரலாற்றில் நிற்கிறார்கள் அந்த ஜுனாகத் சிற்றரசர்கள், இப்போது உள்ள  பேரரசர்களும், சிற்றரசர்களும் சிங்கங்களை நம் நாட்டுக்குள் இடம் மாற ஏற்பாடு செய்தால், அவர்களுக்கும் ஆசிய சிங்கங்களின் வரலாற்றில் இடமிருக்கும். ஏனெனில் உலகில் சிங்கங்களும், புலிகளும் இருக்கும் ஒரே நாடு இந்தியா மட்டுமே.

நடக்குமா ? இதற்குக் காலம் பதில் சொல்லும்!.

இந்த “ குனோ வனவிலங்கு”  சரணாலயத்தில்தான்  தற்போது  ஆப்பிரிக்காவிலிருந்து கொண்டுவரப்பட்ட ஆப்பிரிக்க சிவிங்கிப் புலிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. காடெல்லாம் எதிரொலிக்கும் ஒரு சிறிய பறவையின் குரலை அடுத்த வாரம் அறிந்து கொள்வோம்.

கிர் காடுகளில் 10 வருடங்களுக்கு முன் பயணம் செய்து இருக்கிறேன்,  அங்கு சிங்கங்களின் ஊடாகவே “மால்தாரி” என்ற இனத்தவர் கிராமங்களை அமைத்துக்கொண்டு மாடு மேய்த்துக் கொண்டு வாழ்கின்றனர், இந்தச் சிங்கங்கள் அவர்களின் மாடுகளை எளிதாக வேட்டையாடி சாப்பிடுகின்றன. வேட்டையாடப்பட்ட ஒவ்வொரு விலங்கிற்கும் குஜராத் அரசு உடனே பணம் வழங்கி விடுகிறது, மேலும் அந்த மக்களும் சிங்கங்களை தெய்வமாகப் போற்றுகின்றனர், ஆனால் சொந்த இனத்துக்குள் கலவை நடப்பதாலும் வேட்டையாடும் தன்மை குறைவதாலும், ஆசிய சிங்கங்கள் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் இயல்பை இழந்து வருகின்றன. மால்தாரி மக்கள் ஒரு குச்சியை வைத்துக் கொண்டே சிங்கத்தை விரட்டி விடுகின்றனர், அந்த அளவுக்கு இயல்பை இழந்து இருக்கின்றன நமது ஆசிய சிங்கங்கள்.

-பயணம் தொடரும்….

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.