Tamil News Today Live: அதிமுக பொதுக்குழு விவகாரம்: “என்னை நீக்கியது கட்சி விதிகளுக்கு எதிரானது” – ஓபிஎஸ் தரப்பு வாதம்

கொசு விரட்டி மருந்தால் ஆறு பேர் உயிரிழப்பு: இரவில் தூங்கிய போது நேரிட்ட சோகம்!

மரணம்

டெல்லி சாஸ்திரி பார்க் பகுதியில் கொசு விரட்டி மருந்தினால் உருவான புகையைச் சுவாசித்த, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கொசு விரட்டி மருந்தினால் உருவான கார்பன் மோனாக்சைடை இரவு முழுவதும் சுவாசித்ததால் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது என டெல்லி போலீஸார் தெரிவித்திருக்கின்றனர்.

“என்னை நீக்கியது கட்சி விதிகளுக்கு எதிரானது” –  ஓபிஎஸ்தரப்புவாதம் 

சென்னை உயர் நீதிமன்றம்

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஓ.பி.எஸ். மேல்முறையீடு செய்தார். இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணை உயர் நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் அமர்வில் விசாரணை தொடங்கியது. என்னை நீக்கியது கட்சி விதிகளுக்கு எதிரானது. இடைக்கால நிவாரணம் கிடைக்கும் வகையில் வழக்கை எடுத்து விசாரிக்க வேண்டும். என்னை நீக்கியது தவறு என்றால் அதன் பிறகு நடந்த விஷயங்கள் மட்டும் எப்படி சரியாகும் என ஓபிஎஸ் தரப்பில் வாதாடப்பட்டிருக்கிறது.

திருவள்ளூர்: அரசுப் பள்ளி மாணவர் உயிரிழந்த விவகாரம்; சகமாணவர் கைது

கைது

திருவள்ளூர் மாவட்டம், சோழபுரம் ஒன்றியம் ஆரணி பஸ் நிலையம் அருகே ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இருக்கிறது. அங்கு ஆரணி சுப்பிரமணிய நகர்ப் பகுதியைச் சேர்ந்த மாணவர் ஒருவர், ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மதியம் அதே வகுப்பறையில் படிக்கும் மற்றொரு மாணவன், இந்த மாணவனைக் கேலி செய்ததாகக் கூறப்படுகிறது. இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, வகுப்பறைக்குள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

அப்போது அந்த மாணவன் திடீரென மயங்கி கீழே விழுந்ததால், இதைக் கண்ட சக மாணவர்கள் தலைமை ஆசிரியரிடம் கூறியிருக்கின்றனர். இதையடுத்து காயமடைந்த மாணவன் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டார். அதன் பிறகு மாணவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்திருக்கின்றனர். இது குறித்து பள்ளி நிர்வாகம் பெற்றோருக்கும், போலீஸாருக்கும் தகவல் தெரிவித்திருக்கிறது. இந்த நிலையில், தற்போது சக மாணவன் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்

கலாஷேத்ரா கல்லூரியில் பாலியல் புகார்: மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் நேரில் விசாரணை!

கலாஷேத்ரா

சென்னை கலாஷேத்ரா நுண்கலைக் கல்லூரியில், பேராசிரியர்கள் உள்ளிட்ட சிலர் மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், `பாலியல் தொல்லை அளித்த பேராசிரியர் உள்ளிட்ட நான்கு பேர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கலாஷேத்ரா அறக்கட்டளை மாணவர்கள் முதல்வர் ஸ்டாலின், மத்திய கலாசார அமைச்சகத்துக்குக் கடிதம் எழுதியிருக்கின்றனர். மேலும், நான்கு பேர்மீது நடவடிக்கை எடுக்கும்வரை போராட்டம் தொடரும் எனவும் அறிவித்திருக்கின்றனர்.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் குமரி நேரில் சென்று மாணவிகளிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

ஊட்டி: மனித மலத்தைக் குடிநீரில் கலக்கும்படி கொட்டியதாகப் புகார்; தஞ்சாவூர் இளைஞர்கள் இருவர் கைது!

ஊட்டி

நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகிலுள்ள நஞ்சநாடு நரிக்குழியாடா கிராம மக்கள் பயன்படுத்தும் குடிநீரில் கலக்கும்படி, மனித மலத்தை மர்மநபர்கள் கொட்டியிருக்கின்றனர். மனித மலம் குடிநீரில் கலந்து உடல் உபாதைகள் ஏற்பட்டிருப்பதாக நஞ்சநாடு ஊராட்சித் தலைவர் சசிகலா காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார். இந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டுவந்த காவல்துறையினர், தஞ்சாவூரைச் சேர்ந்த ரஞ்சித், சக்திவேல் ஆகிய இரண்டு இளைஞர்கள்மீது வழக்கு பதிவுசெய்து அவர்களைக் கைதுசெய்திருக்கின்றனர். இந்தச் சம்பவத்தில் உள்நோக்கம் இருக்கிறதா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

தாயை இழந்த நிலையில் மீட்கப்பட்ட, குட்டி யானை பரிதாபமாக உயிரிழப்பு!

குட்டி யானை

தாயை இழந்த நிலையில், தருமபுரியிலிருந்து முதுமலைக்கு அழைத்துவரப்பட்டு பொம்மன், பெள்ளி ஆகியோர் பராமரிப்பில் இருந்த குட்டி யானை பரிதாபமாக உயிரிழந்தது.

Tamil News Today Live : Central Vista; புதிய நாடாளுமன்றக் கட்டுமானப் பணிகளை `திடீர்’ ஆய்வுசெய்த பிரதமர் மோடி!

பிரதமர் மோடி, சென்ட்ரல் விஸ்டாவில் புதிதாகக் கட்டப்பட்டுவரும் நாடாளுமன்றத்தின் கட்டுமானப் பணிகளை நேற்றைய தினம் திடீரென நேரில் சென்று ஆய்வுசெய்தார். சுமார் ஒரு மணி நேரம் அங்கிருந்ததாகக் கூறப்படும் பிரதமர், இந்தியாவின் ஜனநாயகப் பாரம்பர்யத்தைச் பறைசாற்றும் வகையில் கட்டப்பட்டுவரும் பிரமாண்ட அரசியலமைப்பு மண்டபம், நூலகம், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வறை, கமிட்டி அறைகள், உணவருந்தும் பகுதிகள், வாகன நிறுத்துமிடம் எனப் பலவற்றை ஆய்வுசெய்து, கட்டுமானப் பணியாளர்களுடன் உரையாற்றினார்.

கோயில் கிணறு சுவர் இடிந்து 35 பேர் பலி! – ம.பி-யில் சோகம்

மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரின் படேல் நகரில் பழைமையான கோயில் ஒன்று அமைந்திருக்கிறது. இந்தக் கோயிலில் 40 அடி ஆழமுள்ள கிணறு ஒன்று இருக்கிறது. அந்தக் கிணறு சிமென்ட் சிலாப் கொண்டு மூடப்பட்டிருந்தது. இந்த நிலையில், ராம நவமியை முன்னிட்டு நேற்றைய தினம் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். அவர்கள் கிணற்றின் மேல் நின்றுகொண்டிருந்தனர். இந்த நிலையில், பாரம் தாங்காமல், சிமென்ட் சிலாப்பும், கிணற்றின் சுற்றுச்சுவரும் இடிந்து விழுந்தன. இதில் அதன் மேல் நின்றுகொண்டிருந்த 30-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கிணற்றில் விழுந்து, இடிபாடுகளில் சிக்கினர். அங்கு மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில், இதுவரை 35 பேர் இந்த விபத்தில் பலியாகியிருப்பதாகவும், 14 பேர் உயிருடன் மீட்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்திருக்கின்றனர்.