அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பயோசென்சார் கொண்ட புதிய ஸ்மார்ட் பேண்டேஜை கண்டுபிடித்துள்ளனர். இது நீண்டகால நீரிழிவு அல்சர் மற்றும் தீக்காயங்களை விரைவில் குணப்படுத்துவதாகக் கூறப்படுகிறது.
ஏதோ ஒரு காயமோ, புண்ணோ ஏற்படுகையில், உடலானது அதைக் குணப்படுத்தும் வேலையில் ஈடுபட ஆரம்பிக்கும். இயற்கையாகவே அனைவரின் உடலமைப்பும் இவ்விதமே கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. இதுவே நீரிழிவு நோயால் ஒருவர் பாதிக்கப்பட்டு இருக்கையில், குணமடைவதற்கான நேரம் தாமதமாவதோடு, தொற்றுகளையும் ஏற்படுத்தி விடுகிறது.

இந்தக் காயங்களை எளிதாக, குறைந்த செலவில் குணமாக்கும் முயற்சியில் கலிஃபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டனர். இவர்கள் ஸ்மார்ட் பேண்டேஜை (Smart Bandage) கண்டுபிடித்தனர்.
சாதாரண பேண்டேஜ்களை போல அல்லாமல், பாலிமர்களால் தயாரிக்கப்பட்ட இந்த ஸ்மார்ட் பேண்டேஜ்களில் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் மருந்துகள் உட்பொதிக்கப்பட்டு இருக்கும். பேண்டேஜில் சேகரிக்கப்பட்ட மருந்துகள், காயம் வீக்கமடையாமலும், தொற்று ஏற்படாமலும் பார்த்துக் கொள்ளும்.
இவற்றில் உள்ள எலெக்ட்ரானிக்ஸ், யூரிக் அமிலம், லாக்டேட் போன்றவற்றைக் கண்காணிப்பதோடு, Ph அளவு அல்லது காயத்தில் உள்ள வெப்பத்தின் அளவையும் கணக்கிடுகிறது.
பேண்டேஜில் சேகரிக்கப்பட்ட தரவுகளை நோயாளிகள் அல்லது மருத்துவர்கள் அருகில் உள்ள வயர்லஸ் முறையில் இணைக்கப்பட்ட கம்ப்யூட்டர், டேப்லெட் அல்லது ஸ்மார்ட் போன் மூலமாக அறிந்து கொள்ள முடியும்.

ஆய்வகத்தில் இந்த ஸ்மார்ட் பேண்டேஜ்களை விலங்குகளின் மாதிரிகளில் சோதனை செய்ததில், நீண்டகால காயங்களை வெகு விரைவாகக் குணமாக்குவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட கலிஃபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியின் துணை பேராசிரியர் வெய் கோவா கூறுகையில், “பல வகையான நாள்பட்ட நோய்கள் உள்ளன. குறிப்பாக நீரிழிவு அல்சர், தீக்காயங்கள் போன்றவை நீண்ட காலமாக நீடித்து, நோயாளிகளுக்குப் பெரிய பிரச்னைகளை ஏற்படுத்துகின்றன. இவற்றிலிருந்து குணமடைவதற்கான தொழில்நுட்ப தேவை இருக்கிறது’’ என்றார்.