அதிமுகவின் பொதுச்செயலாளராக இபிஎஸ் அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அதிமுக-வில் கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதியில் நடத்தப்பட்ட பொதுக்குழுவில் தங்களை நீக்கிய தீர்மானங்கள், பொது செயலாளர் பதவி உருவாக்கியது, பொது செயலாளர் தேர்தல் ஆகியவற்றை எதிர்த்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜெ.சி.டி.பிரபாகர் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.

ஈபிஎஸ்-க்கு பச்சைக்கொடி காட்டிய நீதிமன்றம்

அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் பதவி தேர்தலுக்கு எதிராக ஒ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது. அத்துடன் பொதுச் செயலாளர் தேர்தல் முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட தடையையும் நீதிமன்றம் நீக்கி உத்தரவிட்டது.

பொதுச் செயலாளராக அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நீதிமன்ற தீர்ப்பை அடுத்து அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிட எடப்பாடி பழனிசாமி மட்டுமே மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில் அவர் ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக தலைமை அலுவலகத்தில் தொண்டர்களின் வாழ்த்து முழக்கங்களுக்கு மத்தியில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி
பழனிசாமி தன்னைத் தேர்வு செய்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

வெற்றிக்குப்பின் செய்தியாளர்களை சந்தித்த இபிஎஸ்,

“தேர்தலை நடத்தும் அலுவலர், கழக பொதுச்செயலாளராக என்னை அறிவித்துள்ளனர். ஒருமனதாக அதிமுக-விற்கு நான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். என்னை தேர்ந்தெடுத்ததற்கு தொண்டர்களுக்கும் தேர்தலை நடத்தியோருக்கும் நன்றி” என தெரிவித்தார்.

image

ஈபிஎஸ்-க்கு குவியும் வாழ்த்துகள்!

அதிமுகவின் பொதுச்செயலாளராக இபிஎஸ் அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

திருமாவளவன், விசிக தலைவர்:

ஈபிஎஸ்ஸுக்கு வாழ்த்து தெரிவித்த விசிக தலைவர், “எடப்பாடி பழனிசாமி தனது சாதுரியத்தால் இந்த இடத்தை அடைந்துள்ளார். தமிழகத்தின் நலனை கருத்தில் கொண்டு எடப்பாடி பழனிச்சாமி தனது அரசியல் காய்களை நகர்த்த வேண்டும்” என்றார்.

image

பாரிவேந்தர், ஐஜேகே நிறுவனர்:

இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் இபிஎஸ்-க்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்திருக்கிறார். அதில், ”அஇஅதிமுகவின் பொதுச்செயலாளராக பதவி ஏற்றுக் கொண்டுள்ள முன்னாள் முதல்வர் அன்புச் சகோதரர் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். வாய்மை, நேர்மை, உண்மை,உழைப்பு, உறுதிப்பாடு அனைத்தும் உங்களின் தனித்தன்மை. இவைகள் அனைத்தும் சேர்ந்து பெற்ற குழந்தைதான் இன்றைய நீதிமன்ற தீர்ப்பு. நீங்கள் பெற்ற வெற்றிக்கு இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர்கள், தொண்டர்களின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.

image

அண்ணாமலை, தமிழ்நாடு பாஜக தலைவர்:

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொலைபேசி மூலமாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர், ”இன்று அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள தமிழக முன்னாள் முதல்வர் அண்ணன் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். திரு எடப்பாடி பழனிசாமி அவர்களை தொலைப்பேசி வழியாக தொடர்புகொண்டு எனது வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டேன்” என்று  ட்வீட் செய்துள்ளார்.

வாழ்த்திய பிற தலைவர்கள்..

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜி.கே. வாசன், பாஜகவை சேர்ந்த மத்திய தகவல் ஒளிபரப்பு துறை மற்றும் மீன்வளம், கால்நடை, மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல். முருகன், பாமக தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ், புதிய நீதி கட்சியினுடைய தலைவர் ஏ.சி. சண்முகம், பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என். ஆர். தனபாலன் ஆகியோர் தொலைபேசி மூலமாக தொடர்புகொண்டு அதிமுக பொதுச்செயலாளராக ஏக மனதுடன் தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி கே பழனிச்சாமி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

புரட்சி பாரதம் கட்சியைச் சேர்ந்த திரு பூவே ஜெகன் மூர்த்தி சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் அமைந்துள்ள புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து மலர் கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்துக் கொண்டார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.