ரிஷப் பண்ட் களத்துக்கு திரும்ப போதிய நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும் – சவுரவ் கங்குலி

உடல்நிலை குணமடைய ரிஷப் பண்ட் போதிய நேரம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார் கங்குலி.

2023ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 31ம் தேதி அகமதாபாத்தில் கோலாகலமாக தொடங்கப்பட உள்ளது. இந்த தொடருக்காக அனைத்து அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இதனிடையே, கார் விபத்தில் படுகாயமடைந்த டெல்லி அணியின் கேப்டனும், இந்திய அணியின் நட்சத்திர வீரருமான ரிஷப் பண்ட் நடப்பு ஐபிஎல் தொடரில் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக டேவிட் வார்னர் டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ரிஷப் பண்ட் உடல்நிலை முழுமையாக குணமடைய போதிய காலம் எடுத்துக் கொள்ளவேண்டும் என்று பிசிசிஐ முன்னாள் தலைவரும், டெல்லி கேப்பிடல்ஸ் ஐபிஎல் அணியின் இயக்குநருமான சவுரவ் கங்குலி அறிவுரை வழங்கியுள்ளார்.

image

இதுகுறித்து கங்குலி கூறியதாவது:- ”ரிஷப் பண்ட் இல்லாமல் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் அனைவரும் வருத்தமாக உள்ளோம். நான் ரிஷப் ரிஷப் பண்ட்-ஐ விரைவில் நேரில் சென்று சந்திப்பேன். அவர் இல்லாமல் இந்திய அணி வீரர்களும் வருத்தமாக இருப்பர். ரிஷப் பண்ட் இளம் வீரர். அவரது கிரிக்கெட் வாழ்வில் இன்னும் நிறைய காலம் உள்ளது. ரிஷப் பண்ட் சிறந்த வீரராகத் திகழ்வார் என்பதில் சந்தேகமே இல்லை. உடல்நிலை முழுமையாக குணமடைய அவர் போதிய நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும். முழு உடற்தகுதி பெற்ற பின்னரே அவர் களத்துக்கு திரும்ப வேண்டும்” என்றார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM