எஸ்விபி, சுவிஸ் வங்கிகள் வரிசையில்.. அடுத்து திவாலாக காத்திருக்கும் ஜெர்மனியின் வங்கி?!

அமெரிக்க, சுவீஸ் நாடுகளின் வங்கிகளைத் தொடர்ந்து ஜெர்மன் நாட்டின் மிகப்பெரிய வங்கியான டாய்ச்சும் நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவின் 16ஆவது மிகப்பெரிய வங்கியான கலிபோர்னியாவைச் சேர்ந்த சிலிக்கான் வேலி வங்கி (Silicon Valley Bank), ‘சிக்னேச்சர்’ வங்கி (signature bank) ஆகியன நிதி நெருக்கடியால் திவாலாகின. அதைத் தொடர்ந்து அமெரிக்காவின் அடுத்த வங்கியான ‘பர்ஸ்ட் ரிபப்ளிக்’ வங்கியும் (first republic bank) கடும் நிதி நெருக்கடிக்கு ஆளாகிய சூழலில், பிற வங்கிகள் நிதி உதவி செய்து, அது திவால் நிலைக்குச் செல்லும் முன்பு காப்பாற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து உலகளவில் மதிப்புமிகுந்த வங்கியாகக் கருதப்படும் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த கிரெடிட் சூயிஸ் (credit suisse) வங்கியின் பங்கு மதிப்பும் சரியத் தொடங்கி திவாலான நிலைக்குச் சென்றபோது, யூபிஎஸ் வங்கி கைப்பற்றியது. இப்படி உலகில் அடுத்தடுத்து பெரிய வங்கிகள் சரிவைச் சந்தித்து வரும் நிலையில், அடுத்து இன்னொரு வங்கியும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது.

image

இந்த நிலையில், ஜெர்மன் நாட்டின் மிகப்பெரிய வங்கியாக இருக்கும் டாய்ச் வங்கியின் (Deutsche Bank) பங்குகள், கடந்த வாரம் தொடர் சரிவைச் சந்தித்தன. குறிப்பாக, கடந்த 22ஆம் தேதி அவ்வங்கியின் பங்குகள் 9.96 யூரோவுக்கு வர்த்தகம் செய்யப்பட்டது. ஆனால், கடந்த 24ஆம் தேதி, 8.06 யூரோ வரை சரிந்தது. இது தவிர, இந்த மாதத்தில் மட்டும் அந்த வங்கி, இதுவரை அதன் மொத்த சந்தை மதிப்பில் ஐந்தில் ஒரு பங்கிற்கு மேல் இழந்தது. கிரெடிட் டீஃபால்ட் ஸ்வாப்ஸ் (ஒரு முதலீட்டாளர் தனது கடன் அபாயத்தை மற்றொரு முதலீட்டாளருடன் மாற்று அல்லது ஈடுசெய்ய அனுமதிக்கும் ஒரு நிதி வழித்தோன்றலாகும்) அளவு அதிகரித்ததே, இந்த வங்கியின் பங்குகள் தொடர் சரிவுக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

இதனால் அவ்வங்கியின் பங்குகள் 14 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. என்றாலும் இந்த வங்கி இதுபோல் சரிவது இது முதல்முறையல்ல. 2008ஆம் ஆண்டு வங்கிகளின் மந்தநிலைக்கு முன்னர் வால் ஸ்ட்ரீட் முதலீட்டு வங்கி (Wall Street investment banking) நிறுவனங்களுடன் போட்டியிட முயன்று பல சிக்கல்களைச் சந்தித்தது. பின்னர், வங்கியைச் சீரமைக்கப்போது முயன்றபோது பல்லாயிரம் பணியாளர்களை வேலையிலிருந்து நீக்கியது. இதனால் 2007ஆம் ஆண்டுக்குப் பிறகு அவ்வங்கி 2022இல் அதிகபட்ச லாபத்தைப் பதிவு செய்தது. என்றபோதிலும், ஜெர்மன் நிதி நிறுவனங்களின் பங்குகள் கடந்த மாதத்தில் இருந்தே மோசமான நிலையில் உள்ளன.

image

அது, கடந்த வாரம் பங்குச் சந்தையில் பெரிதாக வெடித்தது. உலகளவில் மிக முக்கிய நிதி நிறுவனங்களாகக் கருதப்படும் 30 வங்கிகளில் டாய்ச் வங்கியும் ஒன்று. இதன் பங்குகள் தற்போது வீழ்ந்திருப்பதால், உலகப் பொருளாதாரத்திற்கு கவலை அளிப்பதாகச் சொல்லப்படுகிறது. சர்வதேச வங்கி விதிகளின்படி, அத்தகைய நிறுவனங்கள் அதிக அளவு மூலதன கையிருப்பை வைத்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் அந்த வங்கி அதிகமான இழப்பைச் சந்திக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதேபோல் ஜெர்மனி நாட்டில் அதிக கார்ப்பரேட் கடன்களை கொண்டிருக்கும் காமர்ஸ் வங்கியின் Commerzbank பங்கு விலையும் 9 சதவீதம் வரை சரிந்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM