வானில் ஒரே நேரத்தில் ஒரே திசையில் ஒரே நேர்க்கோட்டில் ஐந்து கோள்கள் அணிவகுத்து காட்சியளிப்பது `கோள்களின் சீரமைப்பு (planetary alignment)’ என்று கூறப்படுகிறது.
இந்த அரிய வானியல் நிகழ்வில் வியாழன், புதன், வெள்ளி, யுரேனஸ், செவ்வாய் ஆகிய கோள்கள் நிலவுடன் சேர்ந்து ஒரே நேர்க்கோட்டில் அணிவகுத்து காட்சியளிக்கவுள்ளன. இதை இந்திய நேரப்படி இன்று (மார்ச் 28) மாலை 6:36 – 7:15 மணிக்குள் காணலாம். இது 30 நிமிடங்களில் தோன்றி மறைந்துவிடும். அதாவது இந்தியாவில் இதை இன்று இரவு 7:15 மணிக்குமேல் பார்க்க முடியாது. இந்தக் கோள்கள் நிலவின் அருகில் ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருக்கும் என்று கூறப்படுகிறது.

இதில் சில கோள்களைச் சாதாரணமாக நம் கண்களாலும், சிலவற்றை தொலைநோக்கி அல்லது பைனாக்குலர் உதவியுடனும் மட்டுமே காணமுடியும் என்கின்றனர். குறிப்பாக இதில் வெள்ளியும், வியாழனும் பிரகாசமாகக் காட்சியளிக்கும். இதை நம் கண்களால் காணலாம். ஆனால், யுரேனஸ் மற்றும் புதன் ஆகியவற்றைச் சாதாரணமாக கண்களால் காண்பது சற்று கடினம். அதேபோல செவ்வாய் பூமியிருந்து வெகு தொலைவில் இருப்பதால் அதைக் காண்பது மிகவும் கடினம். இருப்பினும் பைனாக்குலர் மற்றும் தொலைநோக்கியின் உதவியுடன் இந்த ஐந்து கோள்களையும் எளிதில் காணலாம்.
ஒருவேளை இதைக் காணும் வாய்ப்பைத் தவறவிட்டால் அடுத்து பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகுதான் இதுபோன்ற காட்சியை மீண்டும் காணமுடியும் என்று வானியலாளர்கள் கூறுகின்றனர்.