உலகின் பெரும் பணக்காரர்கள் முதல் சாமானியர்கள் வரை பயன்படுத்தும் ஒவ்வொரு பொருட்களுக்கு பின்னணியிலும் ரத்தத்தையும், வியர்வையையும் சிந்தி உழைக்கும் தொழிலாளியின் பங்கு அளப்பரியதாக இருக்கும். ஏனெனில், உணவு உள்ளிட்ட மிக அத்தியாவசியமான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக உலகின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள தொழிலாளர் வர்க்கத்தினர் பலரும் தங்கள் உயிரை பணயம் வைத்து உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக சுரங்க வேலைகளில் ஈடுபடுவோரின் நிலை மிகவும் பரிதாபத்திற்குரியதாகவே இருக்கும். இருக்கின்ற தொழில்களிலேயே மிகவும் அபாயகரமான, ஆபத்துகள் அதிகம் நிறைந்த வேலைகளில் முதன்மையானதாக சுரங்கத் தொழில் பணிகள் முன்னிலையில் இருக்கும். ஏனெனில் பூமிக்கு கீழே செல்ல செல்ல இருள் சூழ்ந்ததாக இருக்கும். அதேபோல், ஆக்ஸிஜன் அளவில் பூமியின் மேற்பரப்பில் இருப்பது போல் இருக்காது. திடீரென சரிவு ஏற்பட்டால் மீட்புகள் மேற்கொள்வது என்பது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. உயிரிழப்புகளை குறைக்க முடியுமே தவிர தடுக்க முடியாது. 

இதுப்போன்ற சுரங்கத் தொழில்கள் பெரும்பாலும் மத்திய கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளிலேயே நடைபெறும். அதில் பெரும் பகுதி மக்கள் கானா நாட்டில் உள்ள சுரங்கத்தில் பணியாற்றுகிறார்கள். நித்தமும் உயிரை துச்சமாக எண்ணி தாமிரம், கோபால்ட் போன்ற தாதுக்களை தோண்டி எடுக்க ஓடாய் தேய்ந்துக் கொண்டிருக்கிறார்கள் உழைப்பாளிகள்.


வேலையில் ஈடுபடும் போது சுரங்கத்தில் மண் சரிவு ஏற்பட்டாலோ, வேறு ஏதேனும் விபத்து நேர்ந்தாலோ அதற்கு பொறுப்பேற்கவோ, அவர்களின் உயிரை காப்பாற்றவோ எவரும் இருக்க மாட்டார்கள். தனக்குத்தானே கூட்டைக் கட்டிக்கொள்ளும் பறவையினம் போல மண் சரிவில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டால் அதனை ஏதோ திருவிழா போல ஆரவாரம் செய்து மகிழ்கிறார்கள் சக சுரங்க தொழிலாளர்கள்.

அப்படியான நிகழ்வு ஒன்று காங்கோவின் தெற்கு கிவு மாகாணத்தின் லுவின்ஜாவில் உள்ள சுரங்கத்தில் நடந்ததாக கூறப்படும் வீடியோ ஒன்று ட்விட்டர் தளத்தில் பகிரப்பட்டு கிட்டத்தட்ட 80 லட்சத்துக்கும் மேலானோரின் ஆதங்கத்தையும், அனுதாபத்தையும் பெற்று வருகிறது.இந்த வீடியோவை பகிர்ந்த சமூக மற்றும் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளரான பெர்னி ஸ்போஃர்த் என்ற பெண் கடுமையாக சாடியிருக்கிறார். அதில், “எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரி தயாரிப்புகளுக்காக கோபால்ட் தாதுக்களை தோண்டி எடுக்க ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை சட்டவிரோதமாக பணியமர்த்தி அவர்களது உயிர்களையும் காவு வாங்கி வருகிறது சில பெரு நிறுவனங்கள்.

இதுப்போன்ற சுரங்கங்கள் அடிக்கடி இடிந்தும், சரிந்தும் விழுகின்றன. இதில் சிக்குவோர் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்தால் அவர்களை தொழிலாளர்களே தோண்டி மீட்டுக்கொள்கிறார்கள். இப்படியெல்லாம் பல உயிர்கள் பலிகடா ஆனாலென்ன? அதான் உலகம் பிழைத்துக் கொள்கிறதல்லவா?” என காட்டமாக பதிவிட்டிருக்கிறார் பெர்னி.


இதனைக் கண்ட இணையவாசிகள் பலரும் அதி சொகுசு எலெக்ட்ரிக் காரான டெஸ்லா நிறுவனத்தின் இணை நிறுவனரான எலான் மஸ்கை சாடியும், அவரை நேரடியாக குறிப்பிட்டும் பதிவிட்டிருக்கிறார்கள்.

மேலும், தங்கள் சொந்த மக்களுக்காக உறுதுணையாக நிற்கும் தலைவர்களே ஆப்பிரிக்காவில் இருக்க வேண்டும் என ஒரு ஆப்பிரிக்கர் இட்ட பதிவுக்கு, “மேற்கத்திய நாடுகளின் நலனுக்காக உங்களுடைய வளங்களையெல்லாம் அவர்கள் ஏற்றுமதி செய்துக் கொண்டிருக்கிறார்கள். அது நம் அனைவருக்கும் தெரிந்ததுதானே” என பெர்னி குறிப்பிட்டிருக்கிறார்.இதுபோக காலநிலை மாற்றத்தை சமாளிக்க வாகன பயன்பாட்டை பெட்ரோல், டீசல் போன்ற எரிவாயுக்களில் இருந்து மின்சாரத்துக்கு மாற்றுவதால் மட்டும் எந்த மாற்றமும் விளைவுகளும் நிகழ்ந்துவிடாது என்றும் கருத்துகளை பதிவிட்டிருக்கிறார்கள். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.