பில்கிஸ் பானு வழக்கு பாலியல் குற்றவாளிக்கு அரசு விழாவில் முன்னுரிமை: குஜராத்தில் சர்ச்சை!

பில்கிஸ் பானோ என்ற கர்ப்பிணியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததோடு, 3 வயது குழந்தை உட்பட 7 பேரை கொடூரமாக கொன்ற வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு சிறை தண்டனை பெற்ற 11 பேரும் கடந்த ஆண்டு ‘முன்கூட்டியே’ விடுதலை செய்யப்பட்டனர். அதில் ஒருவரான சைலேஷ் சிமன்லால் குஜராத்தில் நடந்த அரசு விழாவில் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏக்களுக்கு நிகராக மேடையில் அமர்ந்திருந்த நிகழ்வு தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

image

தகோட் மாவட்டத்தில் குடிநீர் விநியோக தொடர்பான நிகழ்ச்சி கடந்த 25ம் தேதி நடந்தது. கர்மாவாடி கிராமத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில்தான் பில்கிஸ் பானோ பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளியாக முத்திரைக் குத்தப்பட்ட சைலேஷ் சிமன்லாட் பட் என்பவர் எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கான பிரத்யேக மேடையில் முன்னணியில் அமர்ந்திருந்தார். இதுதொடர்பான வீடியோக்களும் ஃபோட்டோக்களும் வெளியாகி பெரும் சர்ச்சைக்கு வித்திட்டிருக்கிறது.

இந்நிகழ்வை கண்டித்து ‘செய்யாத தவறுக்கு சிறை தண்டனை பெற்றவர்களை ஏளனமாகவும், மாபாதக செயலை செய்தவர்களை தியாகியை போலவும் நினைத்து முன் வரிசையில் உட்கார வைத்து கவுரவித்துள்ளனர்’ எனக்கூறி நெட்டிசன்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள திரிணாமுல் காங்கிரஸின் மக்களவை உறுப்பினர் மஹூவா மொய்த்ரா, “இந்த கொடூரரை மீண்டும் சிறைக்குள் தள்ளி அவர் இருக்கும் அறையின் சாவியை தூக்கி எறிய வேண்டும்” என குறிப்பிட்டிருக்கிறார்.


ராகுல் காந்தியின் தகுதி நீக்க நடவடிக்கை குறித்தே தற்போது நாடு முழுவதும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதற்கு பெருமளவிலான எதிர்ப்பு நிலவி வரும் நிலையில், அரசு நிகழ்ச்சியில் பாலியல் குற்றவாளிக்கு அங்கீகாரம் கொடுத்துள்ளது கடும் கண்டனத்தையும் எழச் செய்திருக்கிறது.

முன்னதாக, பில்கிஸ் பானோ வழக்கில் தொடர்புடைய சைலேஷ் சிமன்லால் பட் உள்ளிட்ட 11 குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்ததை எதிர்த்து மஹூவா மொய்த்ரா மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொலிட்பீரோ உறுப்பினர் சுபாஷினி அலி போன்ற பலரும் உச்ச நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM