பாகிஸ்தான் அணிக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது ஆப்கானிஸ்தான் அணி.

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர்களான பாபர் அசாம், முகமது ரிஸ்வான், ஹரிஸ் ராஃப், ஷாஹின் அப்ரிடி முதலிய வீரர்கள் யாரும் இல்லாமல் சதாப் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது.

image

முதல் டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாத பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள் மட்டுமே எடுத்தது. 93 ரன்கள் என்ற எளிதான இலக்கை துரத்திய ரசீத் கான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. இந்நிலையில் 2ஆவது டி20 போட்டி நெற்று நடைபெற்ற நிலையில், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 20 ஓவர் முடிவில் 130 ரன்கள் சேர்த்தது. 131 ரன் இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தான் அணி கடைசி ஓவரில் இலக்கை எட்டியது. அதன்மூலம் வரலாற்றில் முதன்முறையாக பாகிஸ்தானிற்கு எதிரான தொடரை வென்று அசத்தியது.

image

ஆப்கானிஸ்தான் அணியின் இந்த வரலாற்று தொடர் வெற்றிக்கு பல முன்னாள் வீரர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஷோயப் அக்தர், “ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. உலகக்கோப்பையிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அவர்களுக்கு நான் ஆதரவளிக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

image

தனது யூ-டியூப் சேனலில் இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள வீடியோவில் “ஆப்கானிஸ்தான் வெற்றிக்கு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். பதான்களும், பெங்காலிகளும் அவர்களுடைய ஆற்றலை சரியான வழியில் செலுத்தினால், உலகின் முன்னணி சமூகங்களாக அவர்களும் மாறலாம். ஏனென்றால் இருவருக்குள்ளும் தீவிரத்தன்மை அதிகமாக இருக்கிறது. அவர்களின் தீவிரத்தன்மையை முதிர்ச்சியோடு நேர்மறையான விஷயங்களுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் மாற்றினால் உலகின் சிறந்தவர்களாக அவர்களால் மாற முடியும். எங்கள் பதான் சகோதரர்கள் வெற்றி பெற்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்று கூறியுள்ளார்.

image

மேலும் மிஸ்ட்ரி ஸ்பின்னர்கள் என்று பாராட்டப்படும் ஆப்கானிஸ்தானின் சுழற்பந்துவீச்சாளர்களை பாராட்டி பேசியுள்ளார் அவர். அதில் அவர், “ஆப்கானிஸ்தான் அணி ஒரு வலிமையான அணியாக உருவெடுத்துள்ளது. அவர்களின் இந்த முன்னேற்றத்திற்கு மிஸ்ட்ரி ஸ்பின்னர்களான சுழற்பந்துவீச்சாளர்கள் தான் முக்கிய காரணம். சிறப்பான சுழற்பந்துவீச்சு தாக்குதலை வைத்திருக்கும் ஆப்கானிஸ்தான், எதிர்வரும் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் வலுவான அணியாக செயல்பட முடியும். அதற்கு நாங்கள் ஆதரவளிக்கிறோம்” என்று கூறினார்.

image

தொடர்ந்து கடைசி மற்றும் 3ஆவது டி20 போட்டிக்கு புதிய கேப்டனான ஷதாப் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணிக்கு அறிவுரைகளை வழங்கி பேசிய ஷோயப் அக்தர், “வலுவான அணியாக கம்பேக் செய்யுங்கள். உங்களால் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சிறப்பான போட்டியை வழங்க முடியும் என்பதை உறுதிப்படுத்துங்கள். இது கடினமாகத் தோன்றலாம், ஏனென்றால் ஆப்கானிஸ்தான் உலகின் பல வலுவான அணிகளுக்கு எதிராக அற்புதமான கிரிக்கெட்டை விளையாடியுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக அவர்கள் முதல்முறையாக வெற்றி பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அதை அவர்கள் முதிர்ச்சியோடு விளையாடி வென்றிருப்பது சிறப்பான ஒன்று” என்று தெரிவித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.