2023ஆம் ஆண்டுக்கான செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் தொடரில், தெலுங்கு வாரியர்ஸ் அணி 4வது முறையாக கோப்பையைக் கைப்பற்றி சாதனை படைத்தது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்பட 8 மாநில திரைப்படத் துறையில் உள்ள நடிகர்கள் பங்கேற்கும் ‘செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்’ (CCL) என்ற கிரிக்கெட் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி இந்த ஆண்டுக்கான போட்டி, கடந்த பிப்ரவரி 18ஆம் தொடங்கியது. இந்த ஆண்டு மும்பை ஹீரோஸ், கர்நாடகா புல்டோசர்ஸ், சென்னை ரைனோஸ், தெலுங்கு வாரியர்ஸ், கேரளா ஸ்டிரைக்கர்ஸ், பெங்கால் டைகர்ஸ், பஞ்சாப் டி ஷேர், போஜ்புரி தபாங்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்று மோதின. இந்த போட்டிகள் ஐதராபாத், ராய்ப்பூர், பெங்களூர், திருவனந்தபுரம், ஜெய்ப்பூர், ஜோத்பூர் ஆகிய 6 நகரங்களில் நடைபெற்றது.

image

அரையிறுதியில் இடம்பெறாத சென்னை அணி!

லீக் போட்டிகளின் முடிவில் புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடித்த அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. அதன்படி, மார்ச் 12ஆம் தேதியுடன் நிறைவுற்ற லீக் போட்டியின் இறுதிப் பட்டியலில் நடிகர் ஆர்யா தலைமையிலான சென்னை ரைனோஸ் அணி 4 போட்டிகளில் விளையாடி, 2 போட்டியில் மட்டும் வெற்றிபெற்றதால், அரையிறுதி வாய்ப்பை இழந்தது. அதேநேரத்தில் இந்தப் பட்டியலில் கர்நாடகா புல்டோசர்ஸ் முதலாவது இடத்தையும், போஜ்புரி தபாங்ஸ் 2வது இடத்தையும், 3வது மற்றும் 4வது இடங்களில் மும்பை ஹீரோஸ், தெலுங்கு வாரியரஸ் ஆகிய அணிகளும் இடம்பிடித்தன. சென்னை அணியுடன் பஞ்சாப், பெங்கால், கேரளா ஆகிய அணிகளும் வெளியேறின.

முதல் அரையிறுதியில் போஜ்புரி வெற்றி!

இதைத் தொடர்ந்து, கடந்த மார்ச் 24ஆம் தேதி நடைபெற்ற முதலாவது அரையிறுதியில் 2வது இடம்பிடித்த போஜ்புரியும் 3வது இடம்பிடித்த மும்பையும் மோதின. இதில் போஜ்புரி 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி, இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

இரண்டாவது அரையிறுதியில் தெலுங்கு வாரியஸ் வெற்றி

அதே நாளில் நடைபெற்ற 2வது அரையிறுதியில் முதலிடம் பிடித்த கர்நாடகாவும் 4வது இடம்பிடித்த தெலுங்கு வாரியர்ஸும் மோதின. இதில், தெலுங்கு வாரியர்ஸ் கர்நாடகாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 5வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. பின்னர் இவ்விரு அணிகளுக்கான இறுதிப்போட்டி நேற்று (மார்ச் 25) இரவு 7 மணிக்கு ஐதராபாத்தில் நடைபெற்றது.

image

4வது முறையாக கோப்பையை தட்டி தூக்கிய தெலுங்கு வாரியஸ்!

அதன்படி முதலில் பேட்டிங் செய்த போஜ்புரி, 10 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்தது. அதைத் தொடர்ந்து ஆடிய தெலுங்கு வாரியர்ஸ் 10 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 104 ரன்கள் எடுத்தது. 15 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை ஆடிய போஜ்புரி 10 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 89 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் போஜ்புரி மொத்தம் 161 (72+89) ரன்கள் எடுத்து, தெலுங்கு வாரியர்ஸுக்கு 162 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்திருந்தது.

இதில் தெலுங்கு வாரியர்ஸ் ஏற்கெனவே முதல் இன்னிங்ஸில் 104 ரன்கள் எடுத்திருந்ததால், மேலும் 58 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடியது. இதையடுத்து அந்த ரன்னை 6.2 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு எடுத்து வெற்றிபெற்றது. இதன்மூலம் போஜ்புரியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதுடன் 4வது முறையாகவும் கோப்பையைத் தட்டிச் சென்றது. ஏற்கெனவே தெலுங்கு வாரியர்ஸ் அணி கடந்த 2015, 2016, 2017 ஆகிய ஆண்டுகளில் தொடர்ச்சியாகக் கோப்பையை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

image

சென்னை அணியின் நிலை என்ன?

2011 முதல் ஆண்டுதோறும் விளையாடப்பட்டு வரும் இந்தத் தொடரில் முதலாவது மற்றும் இரண்டாவது (2011, 2012) கோப்பைகளை சென்னை அணி வென்று சாதனை படைத்திருந்தது. அடுத்து, 2015ஆம் ஆண்டு இறுதிப்போட்டியில் தெலுங்கு வாரியர்ஸ் அணியுடன் மோதி கோப்பையை இழந்தது. சென்னையைப் போலவே கர்நாடக புல்டோசர்ஸ் அணியும் இரண்டு முறை (2013, 2014) தொடர்ச்சியாக இந்த கோப்பையைக் கைப்பற்றியது. இந்தப் பட்டியலில் மும்பை ஹீரோஸ் 2019ஆம் ஆண்டு கோப்பையைக் கைப்பற்றி இருந்தது.

– ஜெ.பிரகாஷ்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.