நாமக்கல்லில் உயிரிழந்த ஒரு பன்றிக்கு, ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட நிலையில் சுற்று வட்டாரத்தில் ஒரு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பன்றிகளை வெளியே கொண்டு செல்லவும், உள்ளே கொண்டு வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த கல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ராஜாமணி என்பவர் தனது தோட்டத்தில் கொட்டகை அமைத்து 500க்கும் மேற்பட்ட வெண்பன்றிகளை வளர்த்து வந்திருக்கிறார். இந்த நிலையில் இந்த கொட்டையில் வளர்க்கப்பட்ட பன்றியொன்று, கடந்த 9-ம் தேதி திடீரென உயிரிழந்தது. அந்தப் பன்றிக்கு நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

பரிசோதனைக்குப் பின் பன்றியின் ஈரல், இதயம் உள்ளிட்ட பல்வேறு பாகங்கள் பரிசோதனைக்காக சென்னை மற்றும் போபால் ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆய்வகத்தின் முடிவில் பன்றிக்கு ஆப்பிரிக்கன் வகை பன்றி காய்ச்சல் ஏற்பட்டிருப்பதும், அந்த பாதிப்பில்தான் பன்றி பலியானதும் உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து கால்நடை பராமரிப்புத் துறையினர் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

image

இதுகுறித்து கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் (பொறுப்பு) பாஸ்கர் அவர்களிடம் நாம் கேட்ட போது, “கல்லாங்குளம் ராஜாமணி என்பரது தோட்டத்தில் வளர்க்கப்பட்டு உயிரிழந்த பன்றிக்கு, ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. இதையொடி சுற்றுவட்டாரத்தில் ஒரு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள இடங்கள், தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படுகிறது. அப்பகுதியிலிருந்து பன்றிகளை வெளியே கொண்டு செல்லவும், உள்ளே கொண்டு வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அப்பன்றி இருந்த பண்ணையிலிருந்து 9 கி.மீ. சுற்றுவட்டாரப் பகுதி, கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு அப்பகுதிகளில் உள்ள பன்றிகளையும் கால்நடை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். நோய் கண்டறியப்பட பண்ணையில் உள்ள 50-க்கும் மேற்பட்ட பன்றிகளை (மற்றவை விற்கப்பட்டுவிட்டதாக சொல்லப்படுகிறது) அழிக்கவும் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அப்பன்றி பண்ணை ஒரு வருடத்திற்கு கண்காணிக்கப்படும்” என தெரிவித்தார்.

image

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங்கிடம் நாம் கேட்டபோது, “இறந்த பன்றிக்கு ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது மேலும் பரவாமல் இருக்க கால்நடை பராமரிப்பு துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் யாரும் அச்சமடைய தேவை இல்லை” என்று தெரிவித்தார்.

இராசிபுரம் வட்டாட்சியர் சுரேஷ் தலைமையிலான வருவாய் துறை அதிகாரிகள் பாதிப்புக்கு உள்ளான பண்ணையில் ஆய்வு செய்த போது, மேலும் 2 பன்றி குட்டிகள் உயிரிழந்துள்ளது தெரியவந்தது. இறந்து போன பன்றி குட்டியின் இறைச்சியினை மற்றவைகள் உண்ணும் காட்சிகளையும் காண முடிந்தது. தொடர்ந்து பன்றி பண்ணை உரிமையாளரிடம் அதிகாரிகள் விசாரித்து போது, இங்கிருந்த பெரிய அளவிலான பன்றிகளை இறைச்சிக்காக விற்று விட்டதாகவும், தற்போது குட்டிகள் மட்டுமே உள்ளதாகவும் தெரிவித்தார். இச்சம்பவம் அப்பகுதியை சேர்ந்த பன்றி வளர்ப்பாளர்கள், இறைச்சி உணவகங்கள் மற்றும் பன்றிக்கறி வாடிக்கையாளர்களை கலக்கமடைய செய்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.