இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவின் காயம் தொடர்பான சிகிச்சை விவரங்களை பிசிசிஐ ரகசியமாக வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் முக்கிய வீரராக விளங்கும் ஜஸ்பிரித் பும்ரா, காயம் காரணமாக கடந்தாண்டு செப்டம்பர் மாதம் முதல் சர்வதேச போட்டிகளில் விளையாடவில்லை. அண்மையில் அவருக்கு நியூசிலாந்தில் அறுவை சிகிச்சை நடைபெற்று முடிந்தது. தொடர்ந்து அவர் மார்ச் மாதம் முழுவதும் நியூசிலாந்திலேயே தங்குவார் என்றும், சிகிச்சை முழுமையாக முடிந்த பின்னர் திரும்புவார் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் பும்ரா உடல்நிலை தொடர்பான தகவல்களை ரகசியமாக வைத்திருக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இதுதொடர்பாக பிசிசிஐ அதிகாரி ஒருவர் வெளியிட்டுள்ள தகவலின்படி, பிசிசிஐ வட்டாரத்திலேயே ஒரு சிலருக்கு மட்டும் தான் பும்ராவின் உடல்நிலை தொடர்பான தகவல் தெரியுமாம். தேர்வுக் குழுவினருக்கு கூட பும்ராவின் காயம் மற்றும் அவர் எவ்வாறு குணமடைந்து வருகிறார் என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை என சொல்லப்படுகிறது. மேலும் பும்ரா மற்றும் அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுடன் தொடர்பு கொள்ள, முன்னாள் இந்திய வீரர் விவிஎஸ் லட்சுமணனை பிசிசிஐ நியமித்துள்ளதாக கூறப்படுகிறது. பும்ராவின் காயம் மற்றும் சிகிச்சை குறித்த விவரங்களை பிசிசிஐ ஏன் ரகசியமாக வைத்திருக்கிறது என்பது தொடர்பான தகவல் இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.
இதனிடையே நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடர் இம்மாத இறுதியில் தொடங்க உள்ளது. இந்த தொடரிலும் பும்ரா பங்கேற்கப்போவதில்லை. அவர் விளையாடாதது, ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.