கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே இருக்கும் திருக்காமலூர் ஊராட்சியிலுள்ள எழுதியாம்பட்டியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (47). இவருக்கு மோகனகிருஷ்ணன், நந்தா ஆகிய இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இவர்களில் நந்தா லாலாபேட்டையிலுள்ள தனியார்ப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். ஆறுமுகம், விவசாயக் கூலித் தொழிலாளி. இந்த நிலையில், நேற்று காலையில் ஆறுமுகம் விவசாயப் பணியை முடித்துவிட்டு வீடு திரும்பியபோது, தனக்கு திடீரென நெஞ்சு வலிப்பதாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் கூறியிருக்கிறார். அதைக் கேட்டு பதறிய உறவினர்கள், ஆறுமுகத்தை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றனர். ஆனால், ஆறுமுகத்துக்கு வலி அதிகமாகி, அவர் திடீரென மயங்கி விழுந்து, அங்கேயே உயிரிழந்தார். இதனால், ஆறுமுகத்தின் உடல் அடக்கம் செய்யப்படவிருந்த நிலையில், தந்தைக்கு இறுதிச்சடங்கு செய்ய வேண்டிய அவரின் இளைய மகன் நந்தாவுக்கு பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு இருந்தது.

என்ன செய்வது என்று தெரியாமல் முதலில் தவித்த உறவினர்கள், அதன்பிறகு ஒரு முடிவு செய்தனர். அதாவது, நந்தாவின் உறவினர்கள், நண்பர்கள் ஆலோசனைப்படி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி முடித்த பின்னர், நந்தா தன்னுடைய தந்தையின் உடல் அடக்கம் செய்யத் தேவையான இறுதிச்சடங்கைச் செய்யலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. அதன்படி அவர் லாலாபேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இயற்பியல் தேர்வை எழுதினார். பின்னர், தேர்வை கனத்த இதயத்துடன் எழுதிமுடித்த நந்தா, அவசர அவசரமாக வீடு திரும்பி வீட்டில் வைக்கப்பட்டிருந்த தந்தையின் உடலைப் பார்த்து கதறி அழுதார். தொடர்ந்து, தன்னுடைய தந்தைக்கு இறுதிச்சடங்கு செய்த காட்சி அனைவரின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.