உலகின் பல நாடுகளில் இருந்து பல்வேறு செய்திகள் வெளிவரும் நிலையில், அங்குள்ள நிறுவனங்களில் இருந்து வேலைநீக்க செய்திகளும் தினந்தோறும் வெளிவருவதும் வேதனையாக உள்ளது.

பணியாளர்களை நீக்கும் தொழில்நுட்ப நிறுவனங்கள்

கொரோனா தொற்றுப் பரவலுக்கு பிறகு பொருளாதார மந்தநிலை காரணமாக உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் வரிசையாக பணிநீக்க நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. மெட்டா, ட்விட்டர், அமேசான், மைக்ரோசாப்ட், அமேசான், டிஸ்னி ஆகிய நிறுவனங்கள் தொடர்ந்து தங்களுடைய பணியாளர்களை ஆயிரக்கணக்கில் நீக்கி வருகின்றன.

image

கூகுள் நிறுவனம் நீக்கிய 12,000 பேர்

அந்த வரிசையில் கூகுள் நிறுவனமும் அண்மையில் பணிநீக்க நடவடிக்கையை அமல்படுத்தியது. இதனால் இந்த ஆண்டில் மட்டும் கூகுள் நிறுவனத்தில் 12,000 ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர். இது கூகுளின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் 6 சதவீதம் ஆகும். கூகுள் நிறுவன வரலாற்றில் ஒரே நேரத்தில் இந்த எண்ணிக்கையிலான ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டது இதுவே முதல்முறையாகும்.

சுந்தர் பிச்சைக்கு கடிதம் எழுதிய கூகுள் ஊழியர்கள்

பணிநீக்கத்தால் பாதிக்கப்பட்ட கூகுள் நிறுவன ஊழியர்கள் ஏற்கனவே சமூக வலைதளங்களில், கடும் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். இது ஒருபுறமிருக்க, மறுபுறம் அந்நிறுவனத்தின் சி.இ.ஓ. சுந்தர்பிச்சைக்கு ஆயிரக்கணக்கான கூகுள் ஊழியர்கள் வெளிப்படையாகவே கடிதம் எழுதியுள்ளனர். அதில், ஊழியர்களின் நலன் பற்றிய கோரிக்கைகளுடன் ஒற்றுமை குறித்தும் விளக்கியுள்ளனர். சுமார் 1400க்கும் மேற்பட்டவர்கள் எழுதியிருக்கும் அக்கடிதத்தில், சில கோரிக்கைகளை சுந்தர்பிச்சையிடம் முன்வைத்துள்ளனர். அதன்படி, ”ஆட்குறைப்பு நடவடிக்கைகளைச் சரியான முறையில் கையாள வேண்டும். ஆட்குறைப்பின்போது தீயமுறையில் நடந்துகொள்ளக்கூடாது. புதிதாக ஊழியர்களை வேலைக்கு எடுப்பதை நிறுத்த வேண்டும். தாமாக வெளியேற விரும்பும் ஊழியர்களிடம் முதலில் கருத்து கேட்க வேண்டும்.

image

ஒன்றுசேர்ந்து பலமடைந்து வருகிறோம்

ஊழியர்கள் வேலை நேரத்தை குறைத்துக்கொள்ள விரும்புகின்றனரா என்பதை கேட்டபின் ஆட்குறைப்பு பற்றி முடிவு செய்ய வேண்டும். ஊழியர்களை மீண்டும் பணியமர்த்தும்போதும், அவர்களை மாற்றம் செய்யும்போதும் முதலில் கூகுள் தலைமை நிறுவனமான ஆல்பாபெட் ஊழியர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். போர்கள், மோதல்கள் போன்ற பிரச்சினைகளை சந்திக்கும் நாடுகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். ரெசிடன்ஸ் பெர்மிட் (Residence Permit) இழக்கும் தருவாயில் உள்ள ஊழியர்களுக்கு உதவி வழங்கப்பட வேண்டும். பாலினம், வயது, இனம், நிறம், ஜாதி, மூத்தவர் அந்தஸ்து, மதம், உடல் ஊனம் ஆகியவற்றின் அடிப்படையில் கூகுள் ஊழியர்களிடம் பாகுபாடு காட்டக்கூடாது” எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர்கள், ”கூகுள் ஊழியர்கள் ஆட்குறைப்பு செய்யப்பட்டதால் உலகம் முழுவதும் உள்ள ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் குரலுக்கு யாரும் செவிசாய்க்கவில்லை. எனவே, அனைத்து ஊழியர்களும் இப்போது ஒன்றுசேர்ந்து பலமடைந்து வருகிறோம்” எனவும் தெரிவித்துள்ளனர்.

image

4 ஆயிரம் பேரை நீக்க டிஸ்னி நிறுவனம் முடிவு

கூகுள் நிறுவனம் 12 ஆயிரம் பேரை பணியிலிருந்து நீக்கியுள்ள நிலையில், பிரபல பொழுதுபோக்கு நிறுவனமான டிஸ்னி, 4 ஆயிரம் பணியாளார்களை பணி நீக்கம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏப்ரல் 3ஆம் தேதி அன்று டிஸ்னியின் வருடாந்திர கூட்டத்தொடர் நடைபெற இருப்பதால், அதற்கு முன்பே வேலை நீக்க நடவடிக்கை குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் மாதம் பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களை அடையாளம் காணுமாறு நிறுவனத்தின் மேலாளர்களை மேலிடம் கேட்டுக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதன்படி, வரும் ஏப்ரல் மாதத்தில் 4,000 பேர் நீக்கப்படலாம் எனத் தெரிகிறது.

9 ஆயிரம் பேரை மீண்டும் நீக்கிய அமேசான்

கூகுளைத் தொடர்ந்து, அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஆன்லைன் மின்னணு வர்த்தக நிறுவனமான அமேசான் தற்போது 9,000 பேரை பணி நீக்கம் செய்துள்ளது. முதல்கட்டமாக கடந்த ஜனவரி மாதத்தில் 18,000 பேர் நீக்கப்பட்ட நிலையில், தற்போது 2வது கட்டமாக 9,000 பேரை நீக்கியுள்ளது. இந்த அளவுக்கு ஊழியர்கள் நீக்கப்படுவது அமேசான் நிறுவன வரலாற்றிலேயே இதுவே முதல்முறை. இந்த நிலையில் கூகுள் நிறுவனத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள், பொது தளங்களில் தங்களுடைய கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். அதேபோல் அமேசான் நிறுவனத்தில் இருந்து நீக்கப்பட்ட ஊழியர்களும் தங்களுடைய கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

image

அமேசான் நிறுவன முன்னாள் ஊழியர் பதிவு

அமேசான் நிறுவனத்தில் 9 மாதங்களாகப் பணியாற்றிய ஒருவர், “என்னுடைய முதல் வேலை, இவ்வளவு சீக்கிரத்தில் முடிவுக்கு வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இது எனக்கு ஏமாற்றமளிக்கிறது. என்றாலும், இந்த நிறுவனத்தில் வேலை செய்ததற்கு நன்றியுடையவனாக இருப்பேன். அமேசானில் நான் இருந்த காலத்தில் பல அற்புதமான மனிதர்களை சந்தித்தேன். அவர்கள், எனக்கு இக்கட்டான சூழ்நிலையில் உதவுகிறார்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.

இதுவரை பணியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் பட்டியல்

அண்மைக் காலத்தில்,

  • ட்விட்டர் நிறுவனத்திலிருந்து 3,700 பேர்,
  • கூகுள் நிறுவனத்தில் இருந்து 12,000 பேர்,
  • மெட்டா நிறுவனத்தில் இருந்து 11,000 பேர்,
  • அமேசான் நிறுவனத்தில் இருந்து 18,000 + 9,000 பேர்,
  • மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் இருந்து 10,000 பேர்,
  • சேல்ஸ் ஃபோர்ஸ் நிறுவனத்தில் இருந்து 8,000 பேர்,
  • டெல் நிறுவனத்திலிருந்து 6,650 பேர்,
  • இபே நிறுவனத்திலிருந்து 500 பேர்,
  • கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனத்தில் இருந்து 3,200 பேர்,
  • விப்ரோ நிறுவனத்திலிருந்து 450 பேர்,
  • ஷேர்சேட் நிறுவனத்திலிருந்து 100 பேர்,
  • ஜூம் நிறுவனத்திலிருந்து 1,300 பேர்,
  • இந்தியாவின் பைஜுஸ் நிறுவனத்தில் இருந்து 4,000 பேர்,
  • ஒயிட்ஹேர் ஜூனியர் நிறுவனத்தில் இருந்து 2,100 பேர்,
  • பைடென்டன்ஸ் நிறுவனத்தில் இருந்து 1,800 பேர்,
  • ஓலா நிறுவனத்தில் இருந்து 1,400 பேர்,
  • வேதாந்து நிறுவனத்தில் இருந்து 385 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

– ஜெ.பிரகாஷ்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.