தமிழ் சினிமா இசை ரசிகர்களுக்கு மெகா விருந்து படைக்கும் வகையில் ஏ.ஆர்.ரஹ்மான் படைப்பு குறித்த அடுத்தடுத்த ஒவ்வொரு அப்டேட்களும் அமைந்திருக்கின்றன.

அண்மையில்கூட ரஹ்மான் இசையில் உருவான ‘பத்து தல’ படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அதில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சி மேடையில் பாடி, குதூகலித்து அசத்திய வீடியோக்களே சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. அதற்கடுத்தாக சினிமாவில் பணியாற்றும் லைட்மேன்களுக்காக நிதி திரட்டும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட wings of love என்ற இசைக் கச்சேரியை நடத்தினார் ரஹ்மான். அது முழுக்க முழுக்க சூஃபி ரக பாடல்களாக பாடி ஒட்டுமொத்த மக்களையும் இசையில் மூழ்கவைத்தார் ரஹ்மான். அதில் கலந்துகொண்டவர்கள் பலரும் ‘சொர்க்கத்துக்கே அழைத்துச் சென்றுவிட்டார்’ என சிலாகித்து இணையத்தில் பதிவிட்டு, ஒவ்வொரு க்ளிப்பாக வெளியிட்டு மகிழ்ச்சியை இப்போதுவரை பகிர்ந்து வருகிறார்கள்.

Image

இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானின் அடுத்த இசை விருந்தாக அமைந்திருப்பதுதான் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் முதல் சிங்கிளாக வெளியாகியிருக்கக் கூடிய அக நக பாடல். முதல் பாகத்தில் வெறும் பின்னணி இசையில் மட்டுமே வந்ததன் முழு நீள பாடலாக வெளியாகியிருக்கிறது இந்த அக நக பாடல்.

முழுக்க முழுக்க காதல் ரசம் சொட்டும் வகையில் புல்லாங்குழல், வீணை, வயலின், தபலா போன்ற இசைக்கருவிகளால் நிறைந்துள்ள ‘அக நக’ பாடலில், வசூல் ராஜா படத்தில் கமலிடம் நாகேஷ் சொல்வது போல ‘உயிரை மட்டும் அப்படியே எடுத்துட்டு போகுமளவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையை வார்த்தெடுத்திருக்கிறார்’ என்கிற பாணியில் ட்ரெண்ட் செய்துக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.

இதுபோக பாடலின் முதல் 25 நொடிகளுக்கு வரும் புல்லாங்குழல் இசையை ஒத்த பாடல்கள் என்னென்ன மற்றும் பாடலின் மொத்த இசைக்கோர்வையும் இதற்கு முன்னர் வேறேந்த ஏ.ஆர்.ஆர். பாடல்கள், இசையிலெல்லாம் வந்திருக்கிறது என்றெல்லாம் ஒரு ஆய்வையே இணையத்தில் ரசிகர்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அதன்படி ‘அக நக’  பாட்டின் முதல் 25 நொடிகளுக்குள் வரும் இசையின் முந்தைய வெர்ஷனாக பிகில் படத்தில் இடம்பெற்ற ‘உனக்காக வாழ நினைக்கிறேன்’ பாடலின் மத்தியில் இடம்பெறும் இடைச்செருகில் (interlude) வரும் ட்யூனை குறிப்பிடுகின்றனர் ரசிகர்கள். அதன் மென்மையான வெர்ஷனாக இது இருப்பதாக அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.


அதேபோல, ‘அக நக’ பாடலின் மொத்த இசையும் ஹிருத்திக் ரோஷன், ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வந்த ‘ஜோதா அக்பர்’ படத்தில், அக்பருக்கும் ஜோதாவுக்கும் திருமணம் நடந்த நாளன்று வரும் காட்சியின் போது பின்னணியின் ஒலிக்கப்படும் இசையை ஒத்த நீட்டிக்கப்பட்ட ட்யூனாகவே இருப்பதாகவும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

இப்படியாக அடுத்தடுத்து ஒவ்வொரு பாடல்களாக, ஆல்பமாக வெளியிட்டு சமூக வலைதளங்கள் முழுவதும் ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள், பின்னணி இசையை நிரப்பிவருகிறார்கள் அவரது ரசிகர்கள். தேடித்தேடி எடுத்து அவரது பாடல் நுணுக்கங்களை சிலர் பதிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதனால் ட்விட்டரில் #ARRahman மற்றும் தொடர்புடைய ஹேஷ்டேக்கள் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.


Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.