‘2 கோடி சொத்தை கேன்சர் மையத்திற்கு கொடுங்கள்’ – குடும்பத்தை இழந்த பெண் நெகிழ்ச்சி கடிதம்

குடும்பத்தினர் அனைவரும் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்த நிலையில், மன அழுத்தத்தால் உடல்நலம் இழந்து உயிரிழந்த பெண் ஒருவர், இறக்கும் தருவாயில் தங்களது 2 கோடி ரூபாய் மதிப்பிலான நகை, பணம், வீடு ஆகிய சொத்துக்களை காஞ்சிபுரம் அண்ணா புற்றுநோய் மையத்திற்கு கொடுக்க வலியுறுத்தி கடிதம் எழுதிவைத்துவிட்டு இறந்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆவடி காமராஜ் நகர் மகிழம்பு தெருவில் வசித்து வந்தவர் சுந்தரி பாய் (54). இவர் கடந்த பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி அவரது வீட்டில் இறந்துவிட்டதாக அக்கம்பக்கதினர் ஆவடி காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் சுந்தரி பாய் உயிரிழந்ததை உறுதி செய்தனர். இதுதொடர்பாக காவல் துறையினர் அருகில் இருந்தவர்களிடம் விசாரித்ததில் சுந்தரி பாய் இறப்பதற்கு முன், அதே மாதம் 14ஆம் தேதியில் அவருடைய அக்கா ஜானகியும் உயிரிழந்திருப்பது தெரியவந்தது. அக்கா ஜானகி மற்றும் தங்கை சுந்தரி பாய் இருவர் மட்டும் வீட்டில் வசித்து வந்த நிலையில், ஜானகி உடல்நலக்குறைவு காரணமாக சமீபத்தில் உயிரிழந்ததால், தங்கை சுந்தரி பாயும் இறந்துவிட்டதால் அவரது வீட்டில் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சோதனை செய்தனர். அப்போது அவரது வீட்டில் ஒரு கடிதம் சிக்கியது.

image

அந்த கடிதத்தில், ”எங்கள் தந்தை மற்றும் தாயார் 2000ஆம் ஆண்டு மாரடைப்பால் இறந்து விட்டனர். அதன் பிறகு 2013, 2014 என அடுத்தடுத்த ஆண்டுகளில் என் அக்கா, தம்பி இருவரும் புற்றுநோயால் இறந்து விட்டனர். அதன்பிறகு நானும் என் அக்கா ஜானகியும் மட்டும் 10 வருடமாக தனிமையில் வாழ்ந்து வந்தோம். கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி அக்கா ஜானகி உடல்நல குறைவால் இறந்து விட்டார். அதன்பிறகு என்னால் தனிமையில் இருக்க முடியவில்லை. எங்களிடம் 90 சவரன் நகை, தபால் அலுவலக வங்கியில் 30 லட்சம் மற்றும் இந்தியன் வங்கிக்கணக்கில் 30 லட்சம் இருக்கிறது. அவை உட்பட நாங்கள் வாழ்ந்து வந்த வீடு உள்ளிட்ட அனைத்தையும் காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா புற்றுநோய் மையத்திற்கு கொடுக்க வேண்டும்” என வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளது தெரியவந்தது.

image

இவை அனைத்தையும் கைப்பற்றிய காவல் துறையினர் உயிரிழந்த சுந்தரி பாய்க்கு வாரிசுகள் யாரும் இல்லாததால் அவரது சொத்துக்களை வருவாய்த்துறையினரிடம் ஒப்படைக்க முடிவு செய்தனர். அதன் பேரில் ஆவடி துணை தாசில்தார் செந்தில் முருகன் மற்றும் வருவாய்துறை அதிகாரியிடம் 54 சவரன் தங்க நகைகள், பணம், வீடு பத்திரம் உள்ளிட்டவை ஆவடி உதவி ஆய்வாளர் பிரேமா தலைமையிலான காவல் துறையினர் ஒப்படைத்த நிலையில், வருவாய்துறை அதிகாரிகள் அவற்றை ஆவடி கருவூலத்தில் பாதுகாப்புடன் வைத்துள்ளனர்.

image

புற்றுநோயால் உயிரிழந்த அக்கா, தம்பி மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக இரண்டாவது அக்கா என அனைவரும் உயிரிழந்த துக்கத்தால் உடல்நலக்குறைவு ஏற்பட்ட பெண் ஒருவர், உயிரிழப்பதற்கு முன் குடும்ப சொத்துக்களை புற்றுநோய் மையத்திற்கு கொடுக்க வலியுறுத்தி கடிதம் எழுதி வைத்த சம்பவம் ஆவடியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

image

இதற்கிடையில் கடிதத்தில் 90 சவரன் நகை என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் காவல்துறையினர் 54 சவரன் நகை மட்டுமே கைப்பற்றி இருக்கும் நிலையில், மரணத்திலும் மனிதாபிமானத்துடன் தானமாக வழங்கிய எஞ்சிய நகைகள் குறித்த மர்மம் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள கோரிக்கை எழுந்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM