பஞ்சாப் மாநிலத்தில், காலிஸ்தான் கிளர்ச்சியாளர் அம்ரித்பால் சிங் கூட்டாளிகளுடன் கைது செய்யப்பட்டதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.

யார் இந்த வாரிஸ் பஞ்சாப் தே’ ?.. நடந்தது என்ன?

பஞ்சாப் அமிர்தசரஸை சேர்ந்த அம்ரித்பால் சிங், காலிஸ்தான் ஆதரவு அமைப்பான ‘வாரிஸ் பஞ்சாப் தே’ தலைவராக உள்ளார். சீக்கிய மதகுரு என்று தன்னைத்தானே அறிவித்துக்கொண்டார். அண்மையில் காவல்நிலையம் உள்ளே புகுந்த ‘வாரிஸ் பஞ்சாப் தே’ அமைப்பினர், துப்பாக்கிகள் மற்றும் வாட்களை ஏந்திப் போராட்டம் நடத்தியது, பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. அதனைத்தொடர்ந்து, பஞ்சாப்பில் தனி நாடு முழக்கமும் அதிகரித்தது. நிலைமை கைமீறிப்போவதை உணர்ந்த பஞ்சாப் காவல் துறை, அம்ரித்பால் சிங்கை கைது செய்ய தீவிரம் காட்டியது.

image

தீவிரம் காட்டிய பஞ்சாப் காவல்துறை!

பதற்றமான சூழல் உருவான நிலையில், ஜலந்தர் பகுதியில் காரில் சென்ற அம்ரித்பால் சிங்கை காவல் துறையினர் கைது செய்தனர். அவருடன் இருந்த கூட்டாளிகள் 6 பேரும் கைது செய்யப்பட்டனர். முதல்கட்டமாக அவரது கூட்டாளிகள் 78 பேரை கைது செய்துள்ள காவல்துறையினர், 500 பேரை தடுப்புக்காவலில் வைத்துள்ளனர். அம்ரித்பாலின் ஜல்லுப்பூர் கைரா கிராமத்தில் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

கைதுக்கு காரணம் என்ன?

எந்த வழக்கின்கீழ் அம்ரித்பால் கைது செய்யப்பட்டுள்ளார் என்ற விவரத்தை போலீஸ் அதிகாரிகள் இதுவரை வெளியிடவில்லை. எனினும் முகத்சர் நகரில் இருந்து இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மத ஊர்வலத்தை தொடங்க இருப்பதாக அம்ரித்பால் அறிவித்திருந்த நிலையில், போலீஸார் அவரை கைது செய்துள்ளனர்.

வன்முறையை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்!

இதனிடையே வன்முறை பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பஞ்சாப் முழுவதும் நாளை மதியம் வரை இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. அதேசமயம், மக்கள் அமைதி காக்க வேண்டும், புரளிகளை நம்ப வேண்டாம் எனவும் காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பஞ்சாப் காவல் துறை, “அனைத்து தரப்பிலிருந்து வரும் செய்திகளும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஆகையால், பொய்யான வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் தவறான வதந்திகளைப் பரப்ப வேண்டாம்” எனத் தெரிவித்துள்ளது. அம்ரித்பால் சிங்கின் நான்கு முக்கிய உதவியாளர்கள் சிறப்பு விமானம் மூலம் இன்று அசாமின் திப்ருகாருக்கு அழைத்துச் செல்லப்பட்டு, திப்ருகர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக காவல் துறை செய்திகள் தெரிவிக்கின்றன.

image

காங்கிரஸ் என்ன சொல்கிறது?

முன்னதாக, அம்ரித்பால் சிங் மீதான காவல்துறை நடவடிக்கை குறித்து காங்கிரஸ் தலைவர் சுக்ஜிந்தர் சிங் ரந்தவா, “தாமதமாக எடுக்கப்பட்டாலும், பஞ்சாப் காவல்துறையின் நடவடிக்கையை வரவேற்கிறேன். அனைத்து பஞ்சாபியர்களும் அமைதி காக்கவேண்டும். வதந்திகளை நம்ப வேண்டாம்” என ட்வீட்டரில் தெரிவித்துள்ளார்.

பாஜகவைச் சேர்ந்த சுனில் ஜாகர், ”பஞ்சாபின் தற்போதைய நிலைமைக்கு முதல்வர் பகவந்த் மானும் அவரது ஆம் ஆத்மி கட்சியுமே காரணம்” என தெரிவித்துள்ளார். 

என்றாலும் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகள், “பஞ்சாப் மாநில மக்கள், இந்த விஷயத்தில் அமைதி காக்க வேண்டும்” என்பதையே தெரிவித்து வருகின்றன. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.