இந்திய கிரிக்கெட் வரலாற்றிலே மோசமான ஒரு தோல்வியை இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக பதிவு செய்திருக்கிறது. இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி போராடி அடித்த 117 ரன்களை ஆஸ்திரேலிய அணி 11 ஓவரில் சாதாரணமாக அடித்து வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணி ஏன் இத்தனை மோசமாக ஆடியது?

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி இந்தியாவை பேட்டிங் செய்யச் சொன்னது.தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில்லும், ரோஹித் சர்மாவும் களமிறங்கினர்.

முதல் ஓவரில் ஸ்டார்க் வீசிய பந்தை சுப்மன் கில் ஆப் சைடில் தொட்டுக் கொடுக்க, அதனை லபுசானே பாய்ந்து பிடித்தார். கில் டக் அவுட். அடுத்து விராட் கோலி களமிறங்கினார். கோலியும்,ரோஹித்தும் அடித்த சில பவுண்ட்ரிகள் ரசிகர்களுக்கு சிறிது நம்பிக்கையைக் கொடுத்தாலும், சில மணித்துளிகளில் விழுந்த ரோஹித்தின் விக்கெட்டால் அந்த நம்பிக்கையும் சரிந்தது.

Starc

5வது ஓவரில் ஸ்டார்க் விசிய பந்தில் ரோஹித் சர்மா அவுட் சைட் எட்ஜ் கொடுத்து அவுட்டானார்.

அதன் பின்பு, சூர்யகுமார் யாதவ் வந்த வேகத்திலே lbw ஆகி நடையைக் கட்டினார். சூர்யகுமார் யாதவ் இதுவரை 22 ஓடிஐ போட்டிகளில் விளையாடி 433 ரன்கள் மட்டுமே குவித்துள்ளார்.

டி20 இல் பொளந்து கட்டும் சூர்யகுமார் யாதவிற்கு ஓடிஐ போட்டிகளில் சொதப்பல்கள் தொடர்ந்த வண்ணமாக இருக்கிறது.

சுப்மன் கில்லும், சூர்யகுமார் யாதவும் முதல் ஓடிஐ-யில் அவுட் ஆனதை போலவே அசால்ட்டாக இந்த போட்டியிலும் அவுட் ஆனது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. கடந்த போட்டியில் கலக்கலாக ஆடி கம்பேக் கொடுத்த கே.எல்.ராகுல் இந்த போட்டியில் 9 ரன்களில் ஸ்டார்க் பௌலிங்கில் lbw ஆகி அவுட்டானார்.

அடுத்து ஹர்திக் பாண்டியா களம் கண்டார். சீன் அபாட் வீசிய பந்து ஹர்திக் பாண்டியாவின் பேட்டில் பட்டு எட்ஜ் வாங்க அதை ஸ்டீவ் ஸ்மித் பாய்ந்து அசத்தலாக பிடித்தார்.

சண்டே அதுவுமாக இந்த போட்டி செம்ம ட்ரீடாக அமையும் என்று காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு அடுத்தடுத்து சரிந்த விக்கெட்டுகள் பேரதிர்ச்சியைத் தந்தது. மேலும், ஒரு பாட்னர்ஸிப்பாவது வருமா என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த போது ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.

இந்திய அணி பவர்பிளே முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 51 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.நீண்ட நேரத்திற்குப் பிறகு 11 ஓவரில் விராட்கோலியின் பேட்டில் இருந்து பவுண்ட்ரி வந்தது.ஒரு யுகம் கழித்து பவுண்ட்ரி வந்தது போன்ற உணர்வை அது ஏற்படுத்தியது.

நிதானமாக ஆடிய விராட்கோலியும் எல்லிஸ் பந்தில் 31 ரன்களுக்கு ஆட்டமிழக்க இந்திய அணி நிலை தடுமாறிப் போனது.

சென்ற ஆட்டத்தில் ஜொலித்த ஜடேஜா என்ற ஒளி விளக்கும் இந்தப் போட்டியில் ஒளி குன்றி 16 ரன்களுக்கு அவுட்டானது. மைதானத்தில் காலை முழுவதும் அடை மழை. மதியத்திற்கு மேல் இந்திய அணியின் விக்கெட் மழை என்ற நிலை தான் நிலவியது. சிக்ஸ் வருமா..! வருமா..! என்று காத்துக் கொண்டிருந்த போது ஒருவழியாக, 26-வது ஓவரில் அக்சர் பட்டேல் இரண்டு சிக்ஸர்களைப் பறக்க விட்டது சிறிது மன ஆறுதலை அளித்தது.

தொடக்கத்திலிருந்தே சொதப்பிய இந்திய அணி 26-வது ஓவர் முடிவில் 117 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியது.

அதிகபட்சமாக கோலி 31 ரன்களும், அக்சர் பட்டேல் 29 ரன்களும் எடுத்தனர்.

இந்தப் போட்டியில் ஸ்டார்க் ஸ்டார் பிளேயராக ஜொலித்து ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.இவர் இதுவரை, ஒன்பது ஒருநாள் போட்டிகளில் 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

Virat Kohli

சீன் அபோட் 3 விக்கெட்டுகளும், நேதன் எல்லிஸ் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

இந்திய கிரிக்கெட் அணி வரலாற்றிலே, இந்திய-ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் போட்டியின் குறைந்த பட்ச ஸ்கோர் இது தான்.

நம்பிக்கை… ஏமாற்றம்.. மீண்டும் நம்பிக்கை.. மீண்டும் ஏமாற்றம்.. இப்படியாகத் தான் இருந்தது ரசிகர்களின் மனநிலை.

118 ரன்கள் என்ற எளிய இலக்கைத் துரத்திக் கொண்டு களம் இறங்கியது ஆஸ்திரேலியா.

ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கிய டிராவிஸ் ஹெட்டும் மிட்செல் மார்ஷும் தொடக்கத்திலிருந்தே அடித்து ஆடி வந்தனர். மிட்செல் மார்ஷும் சிக்ஸர்களாக அடித்து வான வேடிக்கை காட்டினார். ஹெட்டும் அவர் பங்குக்கு மிரட்டினார். சிராஜ் ஓவரில் அடுத்தடுத்து நான்கு பவுண்ட்ரிகளை அடித்து வெளுத்து வாங்கினார். மார்ஷ் என்னும் புயலால் ரன் மழை தொடர்ந்து பொழிந்து கொண்டிருந்தது.

இந்தப் புயல் 7.5 ஓவரில் 28 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து அரைசதம் என்ற கரையைக் கடந்தது.

8.6 வது ஓவரில் மார்ஷ் 55 ரன்களும்,ஹெட் 41 ரன்களும் எடுத்து பாட்னர்ஸிப்பாக 100 ரன்களை நிறைவு செய்தனர்.

இவர்கள் இருவரும் ஃபோர் வேணுமா ஃபோர் இருக்கு.. சிக்சர் வேணுமா சிக்சர் இருக்கு என்று தொடர்ந்து அதிரடி காட்டி வந்தனர்.

10.2 ஓவரில் அக்சர் படேல் வீசிய பந்து ஹெட் பேட்டில் டாப் எஜ் வாங்கியது. அதனைப் பிடிக்காமல் சிராஜ் தவற விட்டார்.10.3 ஓவரில் ஹெட் 29 பந்துகளை எதிர்கொண்டு அரை சதம் அடித்தார்.

11வது ஓவர் முடிவில் மார்ஷ் பவுண்டரி அடித்து இந்த மேட்சை முடித்து வைத்தார். போட்டி முடிவில் ஹெட் 30 பந்துகளில் 51 ரன்களும், மார்ஷ் 36 பந்துகளில் 66 ரன்களும் எடுத்திருந்தனர். இந்தப் போட்டியின் ஆட்ட நாயகன் விருதை மிட்செல் ஸ்டார்க் வென்றார்.

இந்திய அணி பேட்டிங்கில் சொதப்பினாலும், பௌலிங்கில் நிறைய விக்கெட்டுகள் எடுத்து ஆஸ்திரேலியாவிற்கு டஃப் கொடுக்கும் என நினைத்தால், அதற்கு மாறாக ஒரு விக்கெட் கூட எடுக்காமல் பௌலர்களும் சொதப்பியது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

போர் கண்ட சிங்கமாக… வலி கொண்ட நெஞ்சமாக… விசாகப் பட்டினத்தில் கவிழ்ந்த கப்பலை சென்னையில் மீட்டெடுக்குமா இந்தியா… பொறுத்திருந்து பார்ப்போம்!.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.