‘மைதானத்தில் மட்டுமில்ல… உறவினரின் திருமணத்திலும் கலக்குவோம்ல’ – ரோகித்தின் நடனம் வைரல்!

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, உறவினர் ஒருவரின் திருமணத்தில் தனது மனைவியுடன் கலக்கலாக நடனம் ஆடும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் டிராபி டெஸ்ட் போட்டியில், ரோகித் தலைமையிலான இந்திய அணி 2 – 1 என்ற கணக்கில் தொடரை வென்றது. இதன்மூலம், ஜூன் மாதம் லண்டனில் நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தேர்வாகியுள்ளது. ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ள இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை, இந்திய அணி எதிர்கொள்கிறது. டெஸ்ட் தொடரை அடுத்து, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டியில் பங்கேற்கிறது.

image

இதில், முதல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஒரு போட்டியில் மட்டும் ரோகித் சர்மா விலகுவதாகவும், அவருக்குப் பதிலாக ஹர்திக் பாண்ட்யா கேப்டன் பொறுப்பை ஏற்பார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. ரோகித் சர்மா முதல் ஒருநாள் போட்டியில் விலகியதற்கான காரணம் தெரியாமல் இருந்த நிலையில், வைரலாகும் வீடியோ ஒன்றின் மூலம் இதுகுறித்து தெரியவந்துள்ளது. அதன்படி, தனது நெருங்கிய உறவினரின் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக ரோகித் சர்மா விலகியுள்ளார். உறவினரின் திருமண நிகழ்வில் நேற்று தனது மனைவியுடன் ரோகித் சர்மா நடனம் ஆடிய வீடியோவை, அவரது ரசிகர்கள் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.


Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM