இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்ற நிலையில், முகமது சிராஜின் விக்கெட் செலப்ரேஷனை கிண்டல் செய்துள்ளார் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. எதிர்வரும் 2023ஆம் ஆண்டின் ஒருநாள் உலகக்கோப்பையானது இந்தியாவில் நடத்தப்படவிருப்பதால், இந்த ஒரு நாள் தொடர் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரண்டு அணிகளுக்குமே முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கப்பட்டது.

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி இந்தியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 188 ரன்களில் ஆல் அவுட்டானது. சிறப்பாக பந்துவீசிய முகமது ஷமி மற்றும் சிராஜ் இருவரும் எதிரணி வீரர்களின் ஸ்டம்புகளை பறக்கவிட்டு தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். பின்னர் 189 என்ற வெற்றி இலக்கை துறத்திய இந்தியா, முதலில் விக்கெட்டுகளை விரைவாகவே இழந்து தடுமாறினாலும் ராகுல் மற்றும் ஜடேஜாவின் உதவியால் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. சிறப்பாக பேட்டிங் செய்த கே எல் ராகுல் 75 ரன்களை அடித்து அசத்தினார்.

இந்நிலையில் போட்டிக்கு பிறகு வேகப்பந்துவீச்சாளர்களான முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் இருவரும் கலந்துரையாடினர். அந்த வீடியோவை தற்போது பிசிசிஐ பகிர்ந்துள்ளது. கலந்துரையாடல் முழுவதும் போட்டியை பற்றியே இருந்த போதும், சிராஜின் ஹை-ஜம்ப் செலப்ரேசன் குறித்து கேட்க ஷமி அதிக நேரம் எடுத்துக்கொள்ளவில்லை. அதற்கு நான் ரொனால்டோ பேன் என சொன்னதற்கு, ஷமி பதில் சொன்னதும் சிரிப்பை அடக்கமுடியாமல் சிரித்தார் சிராஜ்.

image

அந்த வீடியோவில், “உன்னிடம் எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது. நீ விக்கெட் எடுத்த பிறகு எகிறி குதித்து செலப்ரேட் செய்றதோட ரகசியம் என்ன” என்று உரையாடலின் போது ஷமி கேட்டார்.

அதற்கு பதிலளித்த சிராஜ், “எனது கொண்டாட்டம் எளிமையானது தான். அதுக்கு வேற எந்த காரணமும் இல்லை நான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் தீவிர ரசிகன். அதனால் தான் அவரைப் போன்றே செலப்ரேட் செய்ய முயற்சிக்கிறேன்” என்று கூறினார். மேலும் ஒரு பேட்ஸ்மேனுக்கு நாம் பந்துவீசும் போது அவர் போல்டாகி வெளியேறினால் மட்டும் தான், அதை கொண்டாடுவதற்காக நான் அவ்வாறு செலப்ரேட் செய்கிறேன். மற்றபடி அவர் ஃப்ரண்ட் லெக் அல்லது கேட்ச் மூலம் பிடிபட்டால் நான் அதைச் செய்ய மாட்டேன் என்று சிராஜ் கூறினார்.

image

இதற்கு சுவாரஸ்யமாக பதிலளித்த ஷமி, “ நான் உனக்கு ஒரு அறிவுரை கூற விரும்புகிறேன். நீ அவரின் ரசிகராக இருப்பதெல்லாம் நல்லது தான். ஆனால் ஒரு வேகப்பந்து வீச்சாளராக நீ அப்படிலாம் ஜம்ப் பண்ண கூடாது. கொஞ்சம் மிஸ் ஆச்சு அவ்வளவு தான்” என்று சிரித்தபடியே சொல்ல, அதற்கு சிரித்துகொண்டே “சரிங்க சீனியர், லெஜண்ட்” என்று சிரித்தபடியே ஏற்றுக்கொண்டார் சிராஜ்.

முன்னர் அதிக எடை இருந்ததாலும், காயங்களின் காரணமாகவும் ஷமிக்கு வாய்ப்புகள் வழங்கப்படாமல் இருந்து வந்தது. அதற்கு பிறகு அவர் தன்னுடைய பிட்னசை மீட்டுக்கொண்டுவந்து கடினப்பட்டு தான் அணிக்குள் மீண்டும் ஒரு நிரந்தரமான இடத்தை பிடித்தார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 6 ஓவர்களை வீசிய ஷமி 2 ஓவர்கள் மெய்டனாக வீசி, 17 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.