கோபத்தால் வந்த அதிர்ஷ்டம்… ஆஸ்திரேலிய தம்பதிக்கு லாட்டரியில் 2 முறை பரிசு!

ஆஸ்திரேலியா தம்பதியினர் வாங்கிய இரண்டு லாட்டரியில் இருந்து ரூ. 16 கோடிக்கு மேல் கிடைத்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள், 3 தலைமுறைகளாக லாட்டரி டிக்கெட் வாங்கி வருகின்றனர். ஆனால், பரிசுத்தொகை விழுந்ததில்லை. இந்த நிலையில்தான் கடந்த ஒரு வாரத்தில் இரண்டு முறை பெரிய பரிசுத் தொகை விழுந்திருக்கிறது. இந்த சுவையான சம்பவம் குறித்து அறிவோம்.

image

மனைவியின் விருப்பப்படியே, கணவர் லாட்டரி வாங்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அதாவது, மனைவி சொல்லும் ராசியான ஓர் எண்ணின் அடிப்படையிலேயே லாட்டரிச் சீட்டை வாங்குவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த நிலையில், முதல் வாரம் மனைவியின் பேச்சைக் கேட்காமல், புதிதாக ஒரு எண்ணில் லாட்டரியை அந்த கணவர் வாங்கியுள்ளார். இதையறிந்த அவருடைய மனைவி, கணவர் மீது மிகுந்த கோபம் கொண்டிருக்கிறார். மனைவியின் கோபத்தை தணிப்பதற்காக, அவர் சொன்ன அதே எண்ணில் மறு வாரம் இரண்டு லாட்டரிகளை வாங்கியுள்ளார்.

ஒன்று மனைவிக்காகவும், மற்றொன்று தனக்காகவும் என இரண்டு லாட்டரிகளை வாங்கியுள்ளார். அப்படி அவர் வாங்கிய சமயத்தில்தான் மொத்தமாக இரண்டு ஜாக்பாட் அடித்து அவர்களது வாழ்க்கையை திருப்பிப் போட்டுள்ளது. அதன்படி, இரண்டு லாட்டரி சீட்டுகளுக்கும் பரிசுத் தொகை விழுந்துள்ளது. இது, மொத்தமாக இந்திய மதிப்பில் சுமார் 16 கோடி ரூபாய் ஆகும் எனச் சொல்லப்படுகிறது.

image

”என் மனைவி கடந்த 30 ஆண்டுகளாக இதே எண்ணில்தான் லாட்டரி விளையாடி வருவதாகவும், இந்த பெருந்தொகையை வென்றதற்கு அவருடைய கோபம்தான் காரணம்” எனவும் கணவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஜாக்பாட்டை வென்ற தம்பதியினர் எல்லையில்லாத மகிழ்ச்சியை அடைந்துள்ளனர். இதுகுறித்து பேசிய அவர்கள், ”வாழ்க்கையில் என்றாவது ஒருநாள் எங்களின் கனவு நிஜமாகும் என்று நினைத்தோம். அது இப்போது நிறைவேறி உள்ளது. 30 ஆண்டுகளாக ஒரே எண்ணில்தான் நாங்கள் பந்தயத்தைக் கட்டி வந்தோம். அதற்கு இப்போதுதான் வெற்றி கிடைத்துள்ளது. இந்தப் பரிசை எங்கள் குடும்பத்தினருடன் பகிர்ந்துகொள்ள இருக்கிறோம். இந்த பணத்தை வைத்து எனது மகளுக்கு வீடு வாங்க உள்ளோம். பேரன், பேத்திகளின் எதிர்காலத் தேவைகளுக்கு உபயோகிக்க உள்ளோம். நாடு முழுவதும் பயணம் செய்ய உள்ளோம்” எனத் தெரிவித்துள்ளனர்.

– ஜெ.பிரகாஷ்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM