“இந்தியாவால் எதையும் சாதிக்க முடியும் என நம்பியது;அதற்கு காரணம் அவர்”-முகமது ஹபீஃஸ்

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான ஹஃபீஸ், இந்தியாவுடனான தனது அனுபவத்தை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.

பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் வீரரான முகமது ஹபீஸ், தன்னுடைய 18 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில் 3 இந்திய கேப்டன்களுக்கு எதிராக விளையாடி உள்ளார். 2003ஆம் ஆண்டு அறிமுகமான ஹபீஸ், 2007ஆம் ஆண்டு தோனி கேப்டன்சியை கைப்பற்றுவதற்கு முன்பு சவுர்வ் கங்குலி தலைமையிலான இந்திய அணிக்கு எதிராக விளையாடினார். பிறகு தோனி தலைமையிலான அணிக்கு எதிராகவும், அதற்கு அடுத்து விராட் கோலி தலைமையிலான இந்திய அணிக்கு எதிராகவும் விளையாடி உள்ளார். 2021ஆம் ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பையில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணிக்கு எதிராக தனது கடைசி ஆட்டத்தை ஹபீஃஸ் விளையாடியிருந்தார்.

image

இந்நிலையில் தற்போது லேஜண்ட்ஸ் கிரிக்கெட் லீக் தொடரில் விளையாடிவரும் அவர் ஹிந்துஸ்தான் டைம்ஸிற்கு அளித்திருக்கும் பேட்டியில், தற்போது சிறப்பாக விளையாடி வரும் இந்திய அணிக்கு, யார் இந்த பாதையை அமைத்து கொடுத்தது என்ற பதிலை கூறியுள்ளார். யார் தலைமையிலான இந்திய அணி சிறந்தது என்பதை எல்லாம் யாராலும் கூர்மையாக தீர்மானிக்க முடியாது என்று கூறிய அவர், இந்தியாவை தற்போது புதிய உச்சத்திற்கு கொண்டு சென்றதற்காக தோனி மற்றும் கோலி இருவரையும் பாராட்டிய அதே வேளையில், இதற்கெல்லாம் விதை போட்டது கங்குலி என புகழாரம் சூட்டினார்.

image

இந்திய அணி குறித்து பேசியிருக்கும் அவர், கங்குலி, தோனி, கோலி போன்ற 3 இந்திய கேப்டன்களுக்கு கீழான அணியை வெவ்வேறு காலகட்டங்களில் பார்த்திருக்கிறீர்கள். எந்த இந்திய அணி சிறந்தது? அல்லது அதிக போட்டித்தன்மை கொண்டது?” என்ற கேள்விக்கு,

தற்போது இருக்கும் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. ஆனால் இதற்கெல்லாம் கங்குலி காலத்தில் தான் அடித்தளம் போடப்பட்டது. அப்போதுதான் இந்திய அணியால் உலகின் எந்த அணியையும் வெல்ல முடியும் என்ற எண்ணம் அவர்களுக்குள் உருவானது. உலகின் எந்த இடத்துக்கும் சென்று, எதிரணி வீரர்களின் கண்களைப் பார்த்து ஆக்ரோஷமான கிரிக்கெட் விளையாடக்கூடிய ஒரு அணியாக கங்குலி காலத்தில் தான் இந்திய அணி மாறியது. அதற்கு பிறகு அந்த மாற்றத்தின் அடுத்த லெவலாக தோனி கேப்டனாக இருந்தபோது காணப்பட்டது, அது பல ஆண்டுகளாகத் தொடர்ந்து விராட் கோலி கைகளிலும் வந்து சேர்ந்தது. பிறகு எந்தவொரு தொடராக இருக்கட்டும் அல்லது போட்டியாக இருக்கட்டும் எல்லோருக்கும் பிடித்தமான அணியாக இந்தியா மாறியது என்று கூறினார்.

image

நீங்கள் பல இந்தியா-பாகிஸ்தான் போட்டிகளில் பங்கேற்றுள்ளீர்கள், அதில் உங்கள் மறக்க முடியாத தருணம் எது?

இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டி என்றாலே அது மறக்க முடியாத ஒன்று தான். அந்த போட்டியில் நீங்கள் தோற்கிறீர்களோ இல்லை வெற்றிபெறுகிறீர்களோ எதுவாக இருந்தாலும் அது ஸ்பெசலான போட்டி தான். அதிலிருக்கும் அனுபவம் முற்றிலும் வேறுபட்டது. இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்தில் என்ன நடந்தாலும் ரசிகர்கள் தங்கள் கோபத்தையோ, மகிழ்ச்சியையோ அதிகமாக வெளிப்படுத்துகிறார்கள். அப்படி ஒரு ஸ்பெசல் போட்டியாக எனக்கு நினைவில் இருப்பது பெங்களூருவில் நடைபெற்ற ஒரு போட்டி தான்.

India vs Pakistan 2012, first T20 match at Bangalore: Statistical highlights

2012ஆம் ஆண்டு நடைபெற்ற அந்த டி20 போட்டியில் நாங்கள் வெற்றிபெற்றோம், அப்போது மைதானமே பின்-ட்ராப் என சொல்லப்படும் அளவுக்கு அவ்வளவு அமைதியாக இருந்தது. அதில் நான் 61 ரன்கள் அடித்து ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அதை என்னால் மறக்கவே முடியாது, இன்னும் அதை தெளிவாக என் நினைவில் வைத்திருக்கிறேன். மீண்டும் அந்த உணர்வை உணர விரும்புகிறேன். ஏனென்றால், இந்தியாவில் நடக்கும் இந்தியா-பாகிஸ்தான் போட்டிகளில் பாகிஸ்தான் நன்றாக விளையாடும் போது, மக்களால் நிரம்பிய அரங்கம் முற்றிலும் அமைதியாகிவிடும், நான் அதை மிகவும் விரும்பினேன். என்னால் அந்த தருணத்தை மறக்கவே முடியாது என்று தெரிவித்துள்ளார் ஹபீஸ்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM