போலீஸிடமிருந்து தப்பிக்கும்போது பாலத்திலிருந்து விழுந்த ரெளடி – கோவைச் சம்பவம்

கோவை நீதிமன்ற வளாகத்துக்கு அருகே கோகுல் என்ற ரெளடி கடந்த மாதம் பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் வெட்டிக் கொலைசெய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட பெரும்பாலானோர் கைதுசெய்யப்பட்டுவிட்டனர்.

கோவை கொலை

ஆனால், சம்பவத்தில் ஈடுபட்ட தூத்துக்குடியைச் சேர்ந்த பார்த்தசாரதி என்ற ரெளடி தலைமறைவானார்.  இந்த நிலையில் அவர் ரத்தினபுரி பகுதியில் பதுங்கியிருப்பதாகக் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து கோவை பந்தய சாலை காவல் நிலைய போலீஸார் ரெளடி பார்த்தசாரதியைக் கைதுசெய்ய ரத்தினபுரிக்குச் சென்றிருக்கின்றனர். ரகசிய இடத்தில் இருந்த பார்த்தசாரதியை கையும் களவுமாகப் பிடித்த நிலையில் அவர் காவல்துறையினரிடமிருந்து தப்பியோட முயற்சி செய்திருக்கிறார்.

ரெளடி பார்த்தசாரதி

 காவல்துறையினர் அவரைப் பின்தொடர்ந்து விரட்டிச் சென்றிருக்கின்றனர்.

அப்போது பார்த்தசாரதி ரத்தினபுரியை அடுத்த ரயில்வே மேம்பாலம் பகுதியிலிருந்து கீழே குதித்து தப்ப முயறிருக்கிறார். இதில் அவரின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவரால் எழுந்து நிற்க முடியவில்லை.

ரெளடி பார்தசாரதி

உடனடியாக அங்கு சென்ற காவல்துறையினர் பார்த்தசாரதியை மீண்டும் கையும் களவுமாகப் பிடித்து கைதுசெய்தனர். தொடர்ந்து அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்திருக்கின்றனர்.