உக்ரைன்- ரஷ்யா இடையே போர் தொடங்கி நடந்து வருகிறது. ரஷ்யாவுக்கு பல்வேறு உலக நாடுகளும் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், ரஷ்ய அதிபர் புதின் மீது சர்வதேச அளவில் போர்க்குற்றச் சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அதில் குறிப்பாக குழந்தைகளை கடத்தியது தொடர்பாக தீவிரமாக பேசப்பட்டது. இதற்கிடையே சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் புதினுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்

அதில், “உக்ரைன்- ரஷ்யப் போர் பிப்ரவரி 24, 2022 அன்று தொடங்கியதிலிருந்து 16,000-க்கும் மேற்பட்ட உக்ரேனிய குழந்தைகள் ரஷ்யாவுக்கு நாடு கடத்தப்பட்டிருக்கின்றனர்” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது தொடர்பான வழக்கு விசாரணை நடந்துவந்த நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கும், ரஷ்யாவின் குழந்தைகள் உரிமைகளுக்கான ஆணையர் மரியா லவோவா-பெலோவாவுக்கும் (Maria Lvova-Belova) சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நேற்று கைது வாரண்ட் பிறப்பித்திருக்கிறது.

மேலும், சர்வதேச குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பியோட்டர் ஹோஃப்மான்ஸ்கி ,”புதின் மீதான குற்றப் பொறுப்பை சந்தேகிக்க நியாயமான காரணங்கள் இருப்பதாக இந்த நீதிமன்றம் கருதுகிறது. ஆனால், கைது வாரண்டை நிறைவேற்றுவது சர்வதேச ஒத்துழைப்பைப் பொறுத்தது” எனத் தெரிவித்திருக்கிறார். இந்த வழக்கு தொடர்பாக வாதாடிய ஐசிசி (International Criminal Court) வழக்கறிஞர் கரீம் கான்,” நாங்கள் முன்வைத்த ஆதாரங்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை மையமாகக் கொண்டிருந்தன.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்

குழந்தைகள் நமது சமூகத்தில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய இடத்தில்தான் இன்னும் இருக்கினறனர். எனவே, உக்ரைன்- ரஷ்யா போரில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக வழக்கில். புதின் 120-க்கும் மேற்பட்ட உறுப்பு நாடுகளில் காலடி வைத்தால் கைது செய்யப்படுவார்” எனத் தெரிவித்திருக்கிறார்.

சர்வதேச நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கையை உக்ரைன், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் வரவேற்றுள்ளன. ஆனால், ரஷ்யா செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் (Dmitry Peskov),”பல்வேறு நாடுகளைப் போலவே ரஷ்யாவும் இந்த நீதிமன்றத்தின் அதிகார வரம்பை அங்கீகரிக்கவில்லை, எனவே சட்டக் கண்ணோட்டத்தில், இந்த நீதிமன்றத்தின் முடிவுகள் செல்லாது” எனத் தெரிவித்திருக்கிறார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.