பாஜக – அதிமுக கூட்டணி விவகாரம்: “அண்ணாமலை பொதுவெளியில் பேசட்டும்” – ஜெயக்குமார்

அ.தி.மு.க பொதுச்செயலாளர் தேர்தல் வரும் 26-ம் தேதி நடைபெறவிருக்கிறது. அதை முன்னிட்டு பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி இன்று காலை வேட்புமனுத் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,”அ.தி.மு.க-வின் தொண்டர்களின் ஆசைப்படி ஒற்றைத் தலைமைக்கான தேர்தல் பணிகள் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. 2024 தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைத்தால் பா.ஜ.க மாநிலத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிடுவேன் என அண்ணாமலை பொது வெளியில் பேசவில்லை. அவர் இது குறித்து பொதுவெளியில் பேசட்டும்.

ஓ.பி.எஸ்

அவர் கட்சிக்குள் பேசியிருப்பதாக கூறப்படுகிறது. அதனால் பொதுவுக்கு வராத தகவலுக்கு, பதிலளிக்க தேவையில்லை. அடுத்த தேர்தலில், அ.தி.மு.க தலைமையில் கூட்டணிக்கு தயாரகும் கட்சியை இணைத்துக்கொள்வோம். அ.ம.மு.க நிர்வாகிகள் மட்டுமல்ல, எழுச்சி இருக்கும் கட்சிக்கு அனைத்து கட்சியிலிருந்தும் தொண்டர்கள் வந்து சேர்வார்கள். இந்த தேர்தல் அ.தி.மு.க சட்ட விதிகளுக்குட்பட்டு தான் நடைபெறுகிறது. ஒ.பி.எஸ்-க்கு அ.தி.மு.க-வில் முதன்முதலில் அறிமுகமானது டி.டி.வி தான். அதன் பிறகு சசிகலா, அதன் பிறகே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடர்பும் கிடைத்தது.

எனவே, ஒ.பி.எஸ் அவரின் குருவை சந்திக்கிறார். அதற்கு நாம் என்ன செய்வது…. ஒ.பி.எஸ் நிலையான ஒரு கருத்தில் இருக்கமாட்டார். ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறினார். ஆனால், அதற்கான விசாரணைக்குச் செல்லவில்லை. சசிகலாவையும், அவரின் குடும்பத்தையும் ஒழிக்க வேண்டும் எனக் கூறினார். அதற்கு பிறகு எனக்கு சசிகலாவை தனிப்பட்ட முறையில் பிடிக்கும் என்றார். இப்போது டி.டி.வி தினகரனை சந்திப்பேன் என்கிறார். அதனால் அரசியலில் நிலை இல்லாதவரை தொண்டர்கள் எப்படி நம்புவர்கள்?.

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. எம்.பி வீட்டை அமைச்சர் ஆதரவாளர்கள் தாக்கும் கொடுமை இங்கு தான் நடக்கிறது. அதற்கு பிறகு தாக்குதல் நடத்தியவரே சென்று ஆறுதல் கூறியிருக்கிறார். அமைச்சரின் தூண்டுதல் இல்லாமலா இந்த தாக்குதல் நடந்திருக்கும்? அவர் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? சட்டம் மற்றவர்களுக்கு தானா? அமைச்சர்களுக்கு கிடையாதா?” எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.