அத்துமீறி நடந்த இளைஞர்.. கருங்கல்லை வீசி வீரத்துடன் எதிர்கொண்ட இளம் பெண் ஆசிரியை!

பள்ளிக்கு சைக்கிளில் சென்ற ஆசிரியையிடம் பைக்கில் வந்த வாலிபர் பாலியல் ரீதியாக அத்துமீறிய சம்பவம் உத்திரமேரூரில் நடந்திருக்கிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்த இடையம்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். இவர் மெய்யூர் ஓடையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

அதன்படி நேற்று (மார்ச் 17) வழக்கம்போல தனது சைக்கிளில் பள்ளிக்கு சென்றிருக்கிறார். அப்போது அந்த வழியாக ஆசிரியையை பைக்கில் பின் தொடர்ந்து வந்த இளைஞர் இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருக்கிறார்.

இதனால் அதிர்ந்துப்போன அப்பெண், சைக்கிளை கீழே தள்ளிவிட்டு சாலையோரத்தில் இருந்த கருங்கல்லை எடுத்து அந்த நபரை எதிர்கொண்டிருக்கிறார். ஆனால் மீண்டும் அப்பெண்ணை நோக்கி அந்த நபர் வரவே, கல்லால் தாக்கியிருக்கிறார். இதில் வாலிபரின் மண்டையில் காயம் ஏற்பட்டிருக்கிறது.

image

இருப்பினும் விடாது தொந்தரவு செய்யும் நோக்கில் நெருங்கியதால் சைக்கிளை எடுத்துக்கொண்டு கூச்சலிட்டபடி அவ்விடத்தை விட்டு சென்றிருக்கிறார். இதனால் தப்பியோட நினைத்த அந்த நபரை அருகே இருந்தவர்கள் துரத்தி பிடித்து சாலவாக்கம் போலீசிடம் ஒப்படைத்திருக்கிறார்கள்.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இளம் ஆசிரியையிடம் அத்துமீறியது கோவிலன்சேரியில் உள்ள அன்னை தெரசா நகரைச் சேர்ந்த சீனிவாசனின் 32 வயதான மகன் தமிழரன் என்பதும், இவர் உத்திரமேரூரை அடுத்த வாடாத ஊரில் நந்தகுமாருக்கு சொந்தமான கோழி பண்ணைக்கு தீவனங்கள் எடுத்து வந்த போது இந்த சம்பவம் நடந்ததும் தெரிய வந்திருக்கிறது.

அதன் பின்னர் தமிழரசன் மீது பெண்ணிடம் அத்துமீறியது உள்ளிட்ட பிரிவுகளீன் கீழ் வழக்குப்பதிந்ததோடு, அவரின் பைக்கையும் பறிமுதல் செய்திருக்கிறார்கள் சாலவாக்கம் காவல்துறையினர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM