செலிபிரிட்டி கிரிக்கெட்: அரையிறுதிக்குத் தேர்வான போஜ்புரி தபாங்ஸ் அணியின் ஓனர் அதிரடி கைது

செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் தொடரில் அரையிறுதிக்குத் தேர்வாகி இருக்கும் நிலையில், போஜ்புரி தபாங்ஸ் அணியின் உரிமையாளர் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த பன்மொழி திரைப்படத் துறையினர் இணைந்து CCL என்னும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் தொடரில் ஆண்டுதோறும் விளையாடி வருகின்றனர். இதில் மும்பை ஹீரோஸ், கர்நாடகா புல்டோசர்ஸ், சென்னை ரைனோஸ், தெலுங்கு வாரியர்ஸ், கேரளா ஸ்டிரைக்கரஸ், பெங்கால் டைகர்ஸ், பஞ்சாப் டி ஷேர், போஜ்புரி தபாங்ஸ் ஆகிய 8 அணிகள் விளையாடி வருகின்றன. இந்த வருடத்துக்கான போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

image

கடந்த 12ஆம் தேதியுடன் லீக் போட்டிகள் முடிவுற்ற நிலையில், கர்நாடகா, போஜ்புரி, மும்பை, தெலுங்கு ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இந்நான்கு அணிகளுக்கான அரையிறுதிப் போட்டி வரும் 18ஆம் தொடங்க இருக்கிறது. அரையிறுதிக்கான வாய்ப்பை நடிகர் ஆர்யா தலைமையிலான சென்னை ரைனோஸ் அணி நூலிழையில் இழந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், போஜ்புரி தபாங்ஸ் அணியின் உரிமையாளரான ஆனந்த் பிஹாரி யாதவ், மோசடி வழக்கு ஒன்றில் மொகாலி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவிகா ஏர்லைன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற விமான நிறுவனத்தில் முதலீடு செய்யுமாறு ஆனந்த் பிஹாரி யாதவ், தன்னை கவர்ந்து இழுத்ததாக தகோலியில் வசிக்கும் முக்தேஷ் திவான் என்பவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் போலீசில் புகார் அளித்திருந்தார். அவர் அளித்த புகாரில், “அவிகா ஏர்லைன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் யாதவ் 10.15 சதவீத பங்குகளை வைத்து தம்மை இயக்குனராக்கி இருந்தார்.

image

இதில் முதலீடு செய்வதற்காக நான், என்னுடைய உறவினர்களிடம் கடன் வாங்கிக் கொடுத்திருந்தேன். ஆனால், அதை யாதவ்விடம் திரும்பக் கேட்டபோது இழுத்தடித்தார். அந்த வகையில், என்னிடமிருந்து ரூ.4.15 கோடி ரூபாயை மோசடி செய்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 420 (ஏமாற்றுதல்) மற்றும் 406 (குற்றவியல் நம்பிக்கை மீறல்) ஆகியவற்றின்கீழ் மொகாலி போலீசார் ஆனந்த் பிஹாரி மீது வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து, கடந்த 11ஆம் தேதி ராஜஸ்தானின் ஜோத்பூரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த ஆனந்த் பிஹாரியைப் போலீசார் கைது செய்தனர். இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், இரண்டு நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டார்.

image

வரும் மார்ச் 18 ஆம் தேதி, நடைபெற இருக்கும் 2வது அரையிறுதியில் போஜ்புரி தபாங்ஸ் மற்றும் மும்பை ஹீரோஸ் ஆகிய அணிகள் விளையாட உள்ளன. போஜ்புரி தபாங்ஸ் அணி, அரையிறுதிக்குத் தேர்வாகி இருக்கும் நிலையில், அந்த அணியின் உரிமையாளர் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அணியின் கேப்டனாக மனோஜ் திவாரி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

– ஜெ.பிரகாஷ்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM