தோள்சீலைப் போராட்டத்தின் 200-ம் ஆண்டு நிறைவு பொதுக்கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்று வருகிறது. பொதுக்கூட்டத்துக்கு சி.பி.எம் முன்னாள் எம்.பி பெல்லார்மின் தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உட்பட பல முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இதில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கன்னியாகுமரி நாடாளுமன்ற எம்.பி விஜய் வசந்த் பேசுகையில், “உலகின் பல மூலைகளில் பெண்களின் சம உரிமைக்காகப் போராட்டங்கள் நடந்தன. நம் குமரி மண்ணில் மன்னராட்சியில் அடக்குமுறைக்கு எதிராகப் பெண்கள் வீதிக்கு வந்து போராடினர்.

தோள்சீலைப் போராட்ட வரலாறு

தீண்டாமை என்ற பெயரில் பல கொடுமைகள் நடந்தன. மேலாடை அணிய அனுமதி மறுக்கப்பட்டது. மார்பகங்களுக்கு வரி விதிக்கப்பட்டதால் மார்பகங்களை அறுத்து வீசியிருக்கின்றனர் மங்கையர். தலைப்பாகை அணியச் சொல்லி மக்களிடம் விழிப்பு உணர்வு ஏற்படுத்தியவர் அய்யா வைகுண்டர். இந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்திய வீரபெண்களின் தியாகத்தை போற்றுவோம்” என்றார்.

தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய மாநிலத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பேசுகையில், “சனாதன சாதிப் பாகுபாட்டுக்கு எதிராக சமூகநீதிக்கு வித்திட்டது தோள்சீலைப் போராட்டம். சுயமரியாதை உணர்வோடு நெஞ்சில் வீரத்தோடும், தீரத்தோடும் போரிட்ட முகம் தெரியாத பெண்களுக்காக இந்த நிகழ்வை நடத்துகிறோம். உலகில் மனிதன் எங்கெல்லாம் வாழ்கிறானோ, அங்கெல்லாம் ஆதிக்க சக்திகள் அடக்குமுறை இருந்திருக்கிறது.

ஒரு காலத்தில் உடல் வலிமை மிகுந்தவன் மக்களை அடிமைப்படுத்தினான். அடுத்ததாக ஆயுதம் வைத்திருந்தவரும், பணம் இருந்தவரும் மக்களை அடிமைப்படுத்தினர். கையில் ஆட்சியும், அதிகாரமும் இருந்தவர்களுக்கு மக்கள் அடிமைப்பட்டவர்களாக இருந்தனர். பொதுமக்களை கசக்கிப் பிழிந்து பல்வேறு வரிகளை விதித்து பெரிய சாம்ராஜ்யங்களை கட்டியமைத்தார்கள். நாடு பிடிக்கப் போராட்டம், செல்வத்தை கவர போராட்டம், அழகான பெண்களை மணம் முடிக்க போராட்டம் என போரும் போராட்டமும் மனிதகுலத்தை நிரப்பியிருக்கிறது. உலகில் மானத்தைக் காப்பாற்ற போராட்டம் குமரி மண்ணில்தான் நடந்தது. இந்த மண், மானம் காக்க போராடிய மண். அப்படி போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்கள் மிகப்பெரிய தலைவர்களோ, செல்வந்தர்களோ, படித்தவர்களோ அல்ல. தெருக்களில் சாதாரணமாக நடக்கக்கூடிய பெண்கள். சமூகத்தின் அடித்தட்டில் உழைக்கும் மக்கள் சேர்ந்து நடத்திய போராட்டம். வரலாறு தெரியாத சமூகம் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. ஒரு நாட்டில் இப்படி எல்லாம் வரி விதிக்க முடியுமா என நினைக்கும் அளவுக்கு வரி விதித்திருக்கிறார்கள்.

பீட்டர் அல்போன்ஸ்

பாலுக்கும், மின்சாரத்துக்கும் வரி உயர்த்திவிட்டால் போராடுகிறோம். இந்த மண்ணில் தாலிக்கு வரி கட்டினார்கள், பலத்த மீசைக்கும், தலைப்பாகைக்கும், செருப்புக்கும், இறப்புக்கும், பிறப்புக்கும் வரி கட்டினார்கள். தாய்மையின் புனிதமான அமுதகலசமான மார்பகத்துக்கும் வரி விதித்த சம்பவம் இந்த மண்ணில் மட்டும்தான் நடந்தது. இந்தப் போராட்டம் 40 ஆண்டுகள் நடந்திருக்கிறது. ஒரு பெண் வரி கேட்டுவந்த தண்டல்காரரிடம் மார்பகத்தை அறுத்து கொடுக்கும் அளவுக்கு கொடுமை நடந்திருக்கிறது. தாலியறுத்தான் சந்தை என ஒன்று இருக்கிறது. வரி கொடுக்காதவர்களின் தாலியை அறுக்க கம்பும், கொக்கியும் வைத்திருந்த இடம் தாலியறுத்தான் சந்தை. அந்த வரலாற்றை நாம் நினைவுகூருகிறோம். மத மாற்றத்தைப்பற்றி பேசுகிறார்கள். மதமாற்றம் எதற்காக நடந்தது. யாரும் விரும்பி வேண்டி மதமாற்றத்துக்குப் போனவர்கள் அல்ல. பச்சை ரொட்டிக்கும், பாலுக்கும் மதம் மாறியவர்கள் எனச் சொல்வார்கள். ஆனால் இவர்கள் சாதிய கொடுமையால் மதம் மாறியவர்கள். கோயில்களில் சாதியைச் சொல்லி அனுமதி மறுக்கப்பட்டதால் மதம் மாறினார்கள்.

சாதி என்பது கத்தோலிக்க திருச்சபையையும் விட்டுவைக்கவில்லை. வடக்கன் குளத்தில் ஆதிக்கச் சாதியினர் ஒருபுறமும், பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் மறுபுறமும் அமர்ந்திருந்தனர். அவர்கள் கோர்ட்டுக்குப் போனார்கள். எல்லோரும் அர்ச்சகர் ஆக முடியாது என கோர்ட் தீர்ப்பு சொல்லியிருக்கிறது. பழைய காலத்து தீர்பு இன்றும் அப்படியே இருக்கிறது. உலகில் எங்கேயும் மானம் துடைக்க ஒரு போராட்டம் நடக்காத நிலையில், குமரியில் மானத்துக்காகப் போராடிய பெண்களுக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை வைக்கிறேன். டெல்லியில் சுதந்திரபோராட்ட தியாகிகளுக்கு நினைவுச்சின்னம் வைக்கப்பட்டது போன்று குமரி மாவட்டத்தின் தலைநகரத்தில் தோள்சீலைப் போராட்ட நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும். தோள்சீலைப் போராட்டம் நடத்திய குமரி மாவட்ட பெண்கள் புறநாநூற்று பெண்களைவிட வீரமானவர்கள்” என்றார்.

தோள்சீலைப் போராட்ட வரலாறு

மேலும் இதே மேடையில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், “200 ஆண்டுக்கு முன்பு சனாதானத்தை எதிர்த்து நடத்திய சமூகநீதி அறப்போரை நினைவுகூரும் நிகழ்வு இது. சனாதனம் என்ற கருத்தியல் இந்த மண்ணை எவ்வளவு சிதைத்திருக்கிறது என்பதை அறிய தோள்சீலைப் போராட்ட வரலாறு நமக்கு உதவுகிறது. தற்கால சனாதனத்துக்கு ஓர் அடையாளம் நமது ஆளுநர். இவர்கள்தான் சனாதனத்தின் காவலர்களாக இருக்கிறார்கள். சனாதனம் எப்படி இருக்கும் என்பதற்கு தோள்சீலைப் போராட்டம் ஓர் எடுத்துக்காட்டு. நம் நாட்டில் 500-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்கள் இருந்தன. அதில் ஒன்று திருவிதாங்கூர் சமஸ்தானம். நேரடியாக பிரிட்டிஷ் ஆட்சி இந்த சமஸ்தானங்களில் கிடையாது. ஆனால் பிரிட்டிஷ் ஆட்சிக்கு இணக்கமாக இருப்பார்கள். அப்படிப்பட்ட சமஸ்தானத்தில் ஒன்று திருவிதாங்கூர் சமஸ்தானம்.

அந்நியரைவிட கொடூரமான கருத்தியலை உள்வாங்கி கொடூரமாக சுரண்டல் செய்த ஆதிக்க வர்க்கத்தை எதிர்த்து இங்கு போராட்டம் நடந்தது. பிரிட்டிஷாரை எதிர்த்துப் போராடியது மட்டும் சுதந்திரப் போராட்டம் அல்ல. தோள்சீலைப் போராட்டமும் சுதந்திரப் போராட்டம்தான். இங்கு மட்டுமல்ல நாடு முழுவதும் இதுபோன்ற போராட்டங்கள் நடந்திருக்கின்றன. அந்தப் போராட்டத்தை மறக்கடிக்க ஐரோப்பிய மிஷனரிகள் கொண்டுவந்தது எனச் சொல்லிவருகிறார்கள். டெல்லியில் நடக்கும் ஆட்சியைப் போன்றே அன்று திருவிதாங்கூர் ஆட்சியாளர் இருந்தார். சனாதன சக்திகளை எதிர்த்து எத்தனையோ போராளிகள் தோன்றியிருக்கிறார்கள். பெரியாருக்கு முன்பு தோன்றியவர் அய்யா வைகுண்டர். ஆன்மிக தளத்தில், சமூக தளத்தில், அரசியல் தளத்தில் புரட்சியாளர்கள் தோன்றிக்கொண்டே இருப்பார்கள். கலைஞர், பெரியார் நினைவு சமத்துவபுரத்தை கட்டி அமைத்தார். அதே கருத்தை முத்துக்குட்டி சுவாமியான அய்யா வைகுண்டர் சமத்துவ கிணற்றை ஏற்படுத்தினார். பார்ப்பன சமூகத்தில் பிறந்தவர்கள்கூட சனாதனத்தை எதிர்த்துப் பேசியிருக்கின்றனர்.

திருமாவளவன்

திருவிதாங்கூர் சமஸ்தானம் பைத்தியக்காரர்களின் கூடாரம் என விவேகானந்தர் கருத்துச் சொல்லியிருக்கிறார். அவர் சூத்திரர் அல்ல. வர்ணாசிரம கொள்கைபடி உயர் அடுக்கு சாதியைச் சேர்ந்தவர். இன்று நாம் பேசும் இந்துத்துவா வேறு. சனாதன தர்மம் அதிலிருந்து இன்னும் மாறுபட்ட கருத்துகளைக் கொண்டது. இந்துத்துவா என்பது சனாதன தர்மத்தை அடிப்படையாகக் கொண்டது. பிறப்பால் மனிதர்கள் சமம் இல்லை என்பதுதான் சனாதன தர்மம். பூமியில் பிறந்த கடவுள் நாங்கள் என்ற நம்பூதிரிகளின் கொள்கைதான் சனாதன தர்மம். குழந்தைத் திருமணம், கணவன் இறந்தால் மனைவி உயிரோடு வாழக்கூடாது என்பது எல்லாம் சனாதனத்தின் விளைச்சல். சனாதனம் எவ்வளவு கொடூரமானது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அதை எதிர்த்துப் போராடிய ராஜாராம் மோகன்ராய் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர் அல்ல. சனாதனத்தின் கொடுமையை மனசாட்சி உள்ளவர்கள் எதிர்த்திருக்கின்றனர்.

அய்யா வைகுண்டர் வரலாற்றை பள்ளி, கல்லூரி மாணவர்களின் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். நாகர்கோவில் திருவனந்தபுரம் சாலைக்கு அய்யா வைகுண்டர் பெயரைச் சூட்ட வேண்டும். ஸ்டாலின், பினராயி விஜயன் ஆகிய இந்த இரண்டு முதல்வர்களும் இணைந்து செயல்படும் தருணம் ஏற்பட்டிருக்கிறது. இன்னும் ஓராண்டுதான் இருக்கிறது. அவர்கள் சித்து விளையாட்டுகளைத் தமிழ்நாட்டில் தொடங்கிவிட்டார்கள். பீகார் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாகவும், கொலைசெய்யப்பட்டதாகவும் பரப்பினார்கள். முதல்வர் பிறந்தநாளில் தேஜஸ்வி கலந்துகொண்டார். எங்கே இவர்கள் ஒன்றிணைந்து காங்கிரஸுடன் சேர்ந்து சனாதன சக்திகளை வீழ்த்திவிடுவார்களோ என்ற அச்சம் எழுந்திருக்கிறது. காங்கிரஸுடன் நாம் சேர்ந்து பணியாற்ற வேண்டும். அப்போதுதான் சனாதனத்தை வீழ்த்த முடியும். மூன்றாவது அணி அர்த்தமில்லாதது. இதைவிட வேறு என்ன அறைகூவல் வேண்டும்.

ஸ்டாலின்

கன்னியாகுமரி மாவட்டத்தைக் காலூன்றும் தளமாக வைத்துக்கொண்டு ஒட்டுமொத்த தமிழகத்தை பிடித்துவிடலாம் என நினைக்கிறார்கள். மோடியா லேடியா என்ற ஜெயலலிதா வழியில் வந்த எடப்பாடி, சங்பரிவார் கும்பலுக்கு அடிபணிந்து கிடக்கிறார். மாபெரும் ஆபத்தான சக்தியை தமிழகத்தில் காலூன்ற அ.தி.மு.க இடம் கொடுக்கிறது. மதத்தின் பெயரில் மண்டைக்காட்டில் வன்முறையைத் தூண்ட முயல்கிறார்கள். பதற்றத்தை ஏற்படுத்துவது அவர்களின் செயல் தந்திரங்களில் ஒன்று. தி.மு.க-வுக்கு எதிராக நிற்கும் பெரிய கட்சி பா.ஜ.க என்பதை நிலைநிறுத்த இப்படி செயல்படுகிறார்கள். 2024-ல் அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்த தேசத்தை எந்த சக்தியாலும் காப்பாற்ற முடியாது. அவர்களை எதிர்ப்பதற்காக வடமாநிலங்களுக்குச் சென்று ஜனநாயக சக்திகளை முதல்வர் ஸ்டாலின் சந்தித்துப் பேச வேண்டும்” என்றார்.

அதேபோல், சி.பி.எம் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் பேசுகையில், “நாட்டின் விடுதலைப் போராட்டம் தொடங்குவதற்கு 200 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற போராட்டத்தை நடத்திய தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தும் ஏற்பாடு இங்கு நடந்திருக்கிறது. தோள்சீலைப் போராட்டத்தில் தங்கள் உயிரை நீத்த பெண்களுக்குச் சிலை வைக்க வேண்டும் என பீட்டர் அல்போன்ஸ் கூறியதை வழிமொழிகிறேன். வீர தியாகிகளின் கோரிக்கைகளைப் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குச் சொல்லிக்கொடுக்கும் பாடத்திட்டத்தில் இடம்பெறச் செய்யவேண்டும் என இரு மாநில முதல்வர்களிடமும் கோரிக்கை வைக்கிறேன். இரண்டு முதல்வர்களும் இந்தியாவின் மிகப்பெரிய இடத்தில் இருக்கின்றனர்.

சி.பி.எம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதை உச்ச நீதிமன்றத்தில் 40 ஆண்டுகளுக்கு மேல் வாதாடி அந்த சட்டத்தைச் செயல்படுத்தமுடியாமல் செய்துவிட்டார்கள். ஆனால், கலைஞர் நிறைவேற்றிய சட்டத்தைக் கேரளத்தில் செயல்படுத்தி 300-க்கும் மேற்பட்ட சாதியினரை அர்ச்சகராக்கிய பெருமை பினராயி விஜயனைச் சாரும். இந்தியாவில் இப்படிப்பட்ட சாதனை எங்கும் நடக்கவில்லை. மார்பகங்களுக்கு வரிபோட்ட கொடுமை உலகில் எந்த நாட்டிலும் இல்லை. 1822-ல் இப்படிப்பட்ட கொடுமைகள் நடந்திருக்கின்றன. மனுதர்மம் இன்றைக்கும் ஆதிக்கம் செலுத்திக்கொண்டு இருக்கிறது. குடிநீரில் மலம் கலப்பது, திருவண்ணாமலையில் ஆலயத்தில் வழிபடச்சென்றவர்களை அடித்து விரட்டுகிறார்கள். 2024-ல் நாங்கள் வெற்றிபெற்றால் மனு சாஸ்திரத்தை அரசியல் சட்டமாகக் கொண்டுவருவோம் எனப் பேசுகிறார்கள். மனு சாஸ்திரத்தை மீண்டும் அரியணை ஏற்ற பார்க்கிறார்கள். இஸ்லாமிய, கிறிஸ்தவ, கம்யூனிஸ்ட்டுகளை விரட்டிவிட்டு நீங்கள் அரசியல் செய்ய முடியுமா…

ஸ்டாலின்-பினராயி விஜயன்

தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாகப் பிரசாரம் செய்கிறார்கள். பிரிக்கும் வேலையை சனாதனவாதிகள் செய்கிறார்கள். இப்படி கீழ்த்தரமாகச் செய்ய உங்களுக்கு வெட்கமாக இல்லையா என அண்ணாமலையைப் பார்த்துக் கேட்கிறேன். அண்ணாமலை மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. ஆனால் அவர், `முடிந்தால் என்னைக் கைதுசெய்து பாருங்கள்’ என்கிறார். ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலை இப்படி பேசலாமா. உங்களைக் கைதுசெய்தால் நாடு கொந்தளித்துவிடுமா. அப்படிக் கொந்தளித்தால் அதை அடக்கும் வலுவான முதல்வர் தமிழகத்தில் இருக்கிறார். 2024-ல் பா.ஜ.க வெற்றிபெற்றால் இந்தியா எப்படி இருக்கும் என்பது கேள்வியாக மாறும். யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதைவிட யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதுதான் முக்கியம்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.