தமிழகத்தில் மீண்டும் பேசு பொருளாகி இருக்கிறது மக்னா யானை. தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட எல்லைகளில் நாற்பது வயது மதிக்கத்தக்க மக்னா என்ற வகையைச் சேர்ந்த ஆண் காட்டு யானை காட்டினுள் செல்லாமல் அதிகளவில் விவசாய பயிர்களை தொடர்ந்து சேதப்படுத்தி வந்தது. இதையடுத்து, கும்கி யானைகளின் உதவியுடன் வனத்துறையினர் மக்னா யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பின்னர் இந்த யானையானது கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்துள்ள டாப்சிலிப் வனப்பகுதியில் விடப்பட்டது.

image

கடந்த பத்து நாட்களாக வனப்பகுதியில் சுற்றித் திரிந்த மக்னா யானை மீண்டும் காட்டைவிட்டு வெளியேறி சுமார் 140 கிலோமீட்டர் வரை பயணித்து கோவையின் நகர பகுதிகளான குனியமுத்தூர், மதுக்கரை, பேரூர் என உலா வரத் துவங்கியது. பட்டப்பகலில் குடியிருப்பு பகுதிகள் வழியே நடமாடிய யானையை கண்டு மக்கள் அச்சத்தில் ஆழ்ந்தனர். விவசாய பயிர்களை தேடி பேரூர் பகுதியில் சுற்றிவந்த யானையை வனத்துறையினர் மீண்டும் கும்கி யானைகளின் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். இப்போது ஆனைமலை வனப்பகுதியில் அந்த மக்னா யானை விடப்பட்டுள்ளது.

யானைகளில் எத்தனை வகை? அதில் மக்னா யானை என்றால் என்ன? என்பது குறித்து சற்றுவிரிவாகவே பார்க்கலாம்.

உலகளவில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி ஆப்பிரிக்க யானைகள் எண்ணிக்கை குறைவாகவும், ஆசிய யானைகள் எண்ணிக்கையில் மிக அதிகமாகவும் காணப்படுகிறது. அதுவும் இந்தியாவில், குறிப்பாக தென்னகத்தில் யானைகள் அதிகம் இருப்பதாக 2016 இல் நடத்தப்பட்ட ஆய்வின் தகவல் தெரிவிக்கிறது. அதேபோல மக்னா வகை யானைகள் எண்ணிக்கையும் தென்னக்ததில்தான் அதிகம். மக்னா யானைகளை மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மிக சர்வசாதாரணமாக பார்க்கலாம்.

இது குறித்து பல்லுயிர் ஆர்வலர், ராமமூர்த்தி பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார் அதிலிருந்து சில:

image

மக்னா யானை என்றால் ?

மக்னா யானை பற்றி கூறப்படும் பொதுவான கருத்தொன்று நிலவுகிறது. அதில் “மனிதர்களில் சிலரைப் போல மூன்றாம்பாலினமாக பிறந்த யானைகள்தான் மக்னா எனப்படுகின்றது” என பலரும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், மூன்றாம் பாலினம் யானைதான் மக்னா என்பது தவறான புரிதல். இந்தப் புரிதலில் முன்னோடியாக இருப்பவர்கள் காட்டில் வாழும் மக்கள்தான். காடுவாழ் மக்கள் தந்தங்கள் இல்லாத ஆண் யானையை மோல யானை அல்லது மோழ யானை என்கிற பெயரில்தான் குறிப்பிடுவார்கள். இன்றும் பல கிராமப் பகுதிகளில் கொம்புகளற்ற ஆடுகளையும், மாடுகளையும் மோழையாடு என்றும் கூறுவதைக் காணலாம். மரபணு குறைபாட்டால் தந்தம் வளராத தன்மையோடு பிறக்கும் ஆசிய ஆண்யானைகள் தான் “மக்னா” எனப்படுகிறது.

பெண் யானைகள் விரும்பாத மக்னா !

ஆசிய யானைகளில் குறிப்பாக இந்திய யானைகளில், தந்தமுடைய ஆண் யானைகளையே பெண் யானைகள் இணையாக விரும்பி ஏற்றுக்கொள்ளும் என்கிறார்கள். தந்தமற்ற நிலையில் எந்த யானைக் கூட்டத்தோடும் இவற்றால், தாக்குப்பிடித்து வாழ முடியாதநிலை ஏற்படுகிறது. தந்தங்கள் ஆண்யானைகளின் வலிமையை வெளிப்படுத்துவதற்கு ஒரு முக்கியமான ஆயுதம். தந்தமில்லாமல் இவற்றால், எந்தக்கூட்டத்திலும் சேர்ந்து ஒரு முழு ஆண் யானையின் தன்மையோடு குழுவில் இருக்க முடியாததால் இவை மூர்க்கத்தனத்தோடு இருந்து பல சமயங்களில் எதிர்ப்படும் மனிதர்களையும், மற்ற உயிரினங்களையும் தாக்கும் குணம் கொண்டவையாக இருக்கும் என்கிறார்கள் யானை ஆர்வலர்கள். இப்படி மூர்க்கத்தனமானது என்றும் பலரையும் கொன்றதாக சொல்லக்கூடிய மக்னா யானைகளைக்கூட பிடித்து முகாம்களில் வளர்த்த போது இயல்பாகவும் இருந்துள்ளது.

image

யானையின் தந்தங்கள் ஏன்? எதற்கு?

ஒரு யானைக்கு தந்ம் என்பது அதன் முன்வெட்டுப் பற்களே. ஒரு ஆண் யானையின் தந்தங்கள் மூன்றில் இரண்டு பங்கு வெளியே நீட்டிக் கொண்டிருக்கும். மீதமுள்ள ஒருபங்கு மண்டையோட்டின் உள்ளே பற்குழிகளுக்குள்ளாக பொருந்தியிருக்கும். ஆசிய யானைகளைப் பொறுத்தவரை, இந்திய யானைக்கு மட்டுமே தந்தம் வெளியே நீண்டு வளரும். பெண் யானைக்குக் கூட, வாய்க்குள் அடங்கிய சிறு தந்தம் இருக்கும். ஆப்பிரிக்க யானைகளில் ஆண், பெண் இரண்டிற்கும் தந்தங்கள் உண்டு என்றாலும், மனிதர்களால் தந்தங்களுக்காக நடத்தப்படுகிற யானை வேட்டைகளின் காரணமாக தற்போது ஆப்பிரிக்க யானைகளிடையே, தந்தங்களற்று பிறக்கும் பண்பு மேலோங்கி வருவதாக சில ஆய்வுகள் கூறுகிறது.

மக்னாதான் பிரம்மாண்டம் !

தந்தமுள்ள ஆண் யானையை விட, மக்னாவுக்கு தலைப்பகுதியும், நெற்றிப் பகுதியும் நன்கு பெரிதாக இருக்கும். வாலிற்குக் கீழே சற்று புடைத்த நிலையிலிருக்கும் தோற்றத்தையும் காணலாம். பெண் யானைக்கு அந்த இடம் உள்வாங்கி குழி போன்ற அமைப்பில் இருக்கும். மக்னாவானது, சாதாரணமான ஆண் யானைகளை விட, பலமுள்ளதாகவும், கொஞ்சம் பெரியதாகவும் காணப்படும். இது, தந்தத்தின் வலிமையை ஈடு செய்யும் வகையில், உடல்வலிமை கூடியதான உடலமைப்பை இயற்கை கொடுத்திருக்கிறது.

image

ஏன் தனிமையில் இருக்கிறது மக்னா?

ஆண் யானை என்றாலே அதன் கம்பீரமான தந்தம்தான் முதலில் நமக்கு நினைவில் வரும். ஆனால் அந்த தந்தமற்றுப் பிறப்பதினாலேயே மக்னாவில் நிலை மிகப் பரிதாபமாக இருக்கிறது. பலமுள்ள ஆண்யானைகளே பெண்யானைகளோடு இணை சேரமுடியும். பல நேரங்களில் பலத்தைக்காட்டவேண்டுமானால் போட்டியாளர்களுடன் சண்டையிட்டுத்தான் பலத்தைக் காட்டியாக வேண்டும். தகுதியானவையே தப்பி பிழைக்கும் என்கிற விதியின்படி, போட்டியில் வெல்ல தந்தமும் மிக முக்கிய ஆயுதம். தந்தமற்ற இவைகள், பெரும்பாலும் எல்லாக் கூட்டங்களாலும் விலக்கியே வைக்கப்படுகின்றன.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.